“ஒரு படம் தயாரிக்க பல படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன்..” தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் வருத்தமான பேச்சு..!

“ஒரு படம் தயாரிக்க பல படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன்..” தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் வருத்தமான பேச்சு..!

நேற்று நடைபெற்ற ‘54321’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார்.

அவர் பேசும்போது,  “இங்கே இந்தப் படத்தின் இயக்குநர் தான் பேசும்போது, தனது அம்மா, அப்பா, குரு, சொல்லிக் கொடுத்த இயக்குநர், அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி கூறினார். இந்தப் படத்தின் இயக்குநர் எவ்வளவு உயர்ந்தாலும் தயாரிப்பாளர்களை மறக்கக் கூடாது.  இயக்குநருக்கு தாய் தந்தையாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். இதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. இயக்குநர்களை நம்பி முதலீடு செய்பவர் தயாரிப்பாளர்தான்.

1984-ல் நான் எனது நண்பர் சேகரனின் எண்ணத்தில்  ‘யார்?’ என்ற ஒரு திகில் படத்தைத் தயாரித்தேன். 9 லட்சத்தில் அப்படத்தை முடிக்க நினைத்து முடியாமல் கடனுக்கான வட்டியுடன் சேர்ந்து கடைசியில் படத்தின் பட்ஜெட் 36 லட்சத்தில் வந்து நின்றது. அதற்காக என்னிடம் இருந்த பல அருமையான பழைய படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன். அந்த யார் படம் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது. அதே போல இப்படமும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இப்போது சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு பெரிய சுமையாக இருக்கும் ‘க்யூப்’ பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும். பெரிய படங்களுக்கு ‘க்யூப்’பிற்கு அதிகமாக தொகை வாங்கிக் கொள்ளலாம். சிறிய படங்களுக்கு வாரம் மூவாயிரம் ரூபாய் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளோம். அதற்காக நானும் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும்  பேசி முடிவெடுத்திருக்கிறோம்…” என்றார். 

Our Score