“விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…”  – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..! 

“விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…”  – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..! 

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'.

இத்திரைப்படம் நாளை டிசம்பர் 12-ம் தேதி வெள்ளியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி சூர்யாவின் ரசிகர்களிடையே ஒரு நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று இரவு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சுரேஷ் மேனன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டான விஷயமே மேடையில் சுவையாக நடந்த பிரபலங்களின் நேருக்கு நேர் பேட்டிதான். அதிலும் ஒரு மாறுதலாக ஆள் மாற்றி கேள்வி கேட்டு, உண்மையான நபராக இருந்திருந்தால் என்ன பதில் சொல்வார் என்பதை இன்னொருவர் சொல்வது போல் அமைத்திருந்த அந்த நேருக்கு நேர் பேட்டி ரசிகர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது.

Anirudh-surya

Anirudh-surya

விக்னேஷ் சிவனாக அனிருத்தும், அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு சுவையாக பதில் அளித்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளரான அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது  போன்று பதில்களை கூறினார்.

"எப்பொது கல்யாணம்..?" என்று கேட்ட கேள்விக்கு அனிருத்துக்காக பதிலளித்த விக்னேஷ் சிவன், "நிறைய பெண்களை பார்த்து கொண்டே இருக்கிறேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம்..." என்று கூறினார்.

"உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது  விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா..?" என்று கேட்டதற்கு "கண்டிப்பாக காதல் திருமணம்தான்..." என்று அனிருத் சார்பாக கூறினார் விக்னேஷ் சிவன்.

அடுத்து இசையமைப்பாளர் அனிருத்திடம் விக்னேஷ் சிவனுக்கான கேள்விகளைக் கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத்தும் பதில் அளித்தார்.

"உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம்.." என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனுக்காக பேசிய அனிருத், "கல்யாணமா.. அப்போ எங்களுக்கு  இன்னும் கல்யாணம் நடக்கலையா..?" என்று  நகைச்சுவையாக பதில் அளித்தார். அடுத்து, "உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?" என்று கேட்டதற்கு "நயன்தாரா.." என்று விக்னேஷ் சிவன் சார்பில் அனிருத் கூறியபோது அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.

actor surya

actor surya

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசும்போது, "இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் இருக்கும். தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பின்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். 

அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் ‘தானா சேர்ந்த கூட்டத்தை’ நல்ல முறையில் கொண்டுபோய் சேர்த்துள்ளது. இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை... அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்களே தென்னிந்தியா முழுவதும் உருவாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரப்படுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்து கொண்டேன்.

Pre-Release (16)

இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷ்ஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ்தான். எனக்கு முன்புபோல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.

நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப் பெரிய உயரங்களை அடைய முடியும்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்...” என்று தனது ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.