‘பேச்சியக்கா மருமகன்’ என்ற படத்தின் தயாரிப்பாளரான சரவணன் படத்தின் வியாபாரத்திற்காக தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக இருக்கும் டி.மன்னனின் பெயரில் அந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டி.மன்னன், படத்தின் பெயரில் 4.5 கோடி வரையிலும் கடன் பெற்று தன்னை மோசடி செய்துள்ளதாக ‘பேச்சியக்கா மருமகன்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரான சரவணன் புகார் அளித்துள்ளார்.
இது சம்பந்தமாக நடந்த வழக்கில் டி.மன்னனுக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது.
இதன் பின்னணி குறித்து டி. மன்னனால் ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர் சரவணன் தெரிவித்தது இதுதான் :
“நான் ‘பேச்சியக்கா மருமகன்’ என்ற படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தேன். அப்போது எனக்குத் தெரிந்த தயாரிப்பாளரான டி.மன்னனின் பெயரை படத்தின் வெளியீட்டிற்காக கொடுத்திருந்தேன்.
அவர் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எனக்கு தெரியாமல், படத்தின் பெயரில் 6 பேரிடம் சுமார் 4.50 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த படம் 2012-ல் வெளியீட்டிற்கு செல்லும்போது, கியூப்பில் படத்தின் மேல் நிலுவை தொகை உள்ளது என்ற சிக்கல் எழுந்தது.
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மன்னன்தான்” என கூறி உயர்நீதி மன்றத்தில் ஸ்டே கொடுத்துவிட்டார்கள். அதனால் “நான்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்…” என்று கூறி அந்த தடையை நீக்கிவிட்டு படத்தை வெளியிட நான் முயற்சிசெய்யும்போது, என்னால் படத்தை வெளியிடவே முடியவில்லை.
“மன்னன்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். அதனால் அவர் வாங்கிய கடனுக்கான நிலுவை தொகைகளை கட்டிய பின்னரே இந்த படத்தினை நீங்கள் வெளியிட முடியும்..” என்று என்னிடம் கடன் கொடுத்தவர்கள் கூறினார்கள். கடைசியில், படம் மன்னனின் பெயரிலேயே வெளியாகிவிட்டது.
2014 ஜனவரி மாதம் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் மன்னன் 1.75 கோடி ஏமாற்றிவிட்டார் என நான் வழக்கு தொடர்ந்தேன். அவர்களும் மன்னனை அழைத்து விசாரித்தனர். அவரும் 1.49 கோடி ரூபாய் கட்டிவிடுகிறேன் என்று அப்போதே ஒப்புக் கொண்டார். 10 லட்சம், 39 லட்சம் மற்றும் 1 கோடி என மூன்று தவணையாக பணத்தைக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு ஒப்பந்தம் எழுதி தந்தார்.
ஆனாலும் முதல் தவணையை மட்டும்தான் அவர் அப்போது செலுத்தினார். மீதி பணம் தொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது, அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. நாட்களை கடத்திக் கொண்டு சென்றார். கடைசியில் தராமலேயே என்னை ஏமாற்றிவிட்டார்.
அதனால் காவல் நிலையத்தில் FIR போட்டு வழக்கை நடத்தும்படி நான் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனால் போலீஸாரும் டி.மன்னன் மீது FIR போட்டு அவர் மேல் வழக்கினை பதிவு செய்தனர். ஆனாலும் உடனே அவர் ஜாமீன் வாங்கிவிட்டார். இது தொடர்பான விசாரணைக்கும் அவர் வரவில்லை.
அதுபோக இந்த விசாரணைக்கு அவர் வர வேண்டிய அவசியம் இல்லாதது போல் தடையுத்தரவு ஒன்றை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாங்கினார். மேலும், அந்தக் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் கேஸ் போட்டார்.
அதன் பின்னர் நான் அந்த வழக்கில் வாதிடி அவர் மேல் 420 பிரிவு போடுவதற்கான எல்லா காரணங்களுக்கும் இருக்கிறது என கூறி அந்த தடையுத்தரவை ரத்து செய்ய வைத்தேன். FIR-ஐ ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வைத்தேன்.
உடனே அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி உயர்நீதி மன்றத்தில் உத்தரவு போட்டனர். ஆனால், அவர் அதற்கும் வரவில்லை. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த வேளையில், அவர் ‘வாகா’ என்ற படத்தை வெளியிட்டார், அதன் மேல் சிவில் சூட் ஒன்று போட்டேன்.
மீடியேஷன் கோர்ட்டில் “வாகா’ பட வெளியீட்டின்போது மன்னன் எனக்குத் தர வேண்டிய பாக்கிப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டனர். அப்போது அவர், “1 கோடி மட்டும்தான் தருவேன். 39 லட்சத்தைத் தர மாட்டேன்…” என கூறினார்.
“இந்தப் படத்தை நீங்கள் வெளியிட்டால் போதும்” என்று சொல்லி அந்த ஒரு கோடி டீலுக்கு நானும் ஒத்துக் கொண்டு, அவரிடமிருந்து நான்கு காசோலைகளை வாங்கினேன்.
அதில் முதல் காசோலைக்கு மட்டுமே பணம் வந்தது. மீதி மூன்றும் பவுன்ஸ் ஆனது. இதனை சிவில் கோர்ட்டில் இது குறித்து நான் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் கோர்ட் மன்னனுக்கு ஒரு கால அவகாசம் கொடுத்து, அதற்குள் பணத்தைக் கட்டவில்லை என்றால் 7.5% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் 2 வருடங்கள் ஆகியும் அதனை தொடர்ந்து பணம் எதுவும் வரவில்லை. இதனால் அவருடைய பெயில் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நான் நீதிமன்றத்தில் முறையிட்டேன்.
நீதிபதி இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, தற்போது மன்னனுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்துள்ளார்…” என்று நீட்டமாகத் தனது சோகக் கதையைப் பேசி முடித்தார்.
ஏமாளிகள் இருக்கும்வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..!!!