புதிய சங்கத்தைத் துவக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சொல்லும் சில காரணங்கள்..!

புதிய சங்கத்தைத் துவக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சொல்லும் சில காரணங்கள்..!

தமிழ்த் திரையுலகத்தில் புதிதாக தயாரிப்பாளர்களுக்கென்று புதிய சங்கத்தைத் தோற்றுவித்திருப்பதாக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நேற்றைக்கு அறிவித்திருந்தார்.

அந்தச் சங்கத்திற்கு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கத்தை தோற்றுவித்த காரணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா சில கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.

“நாங்கள் துவக்கியுள்ள இந்த புதிய சங்கம் தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை, இது மற்றொரு அமைப்பாகவே இருக்கும். அதன் உறுப்பினர்களாகவும் நாங்கள் தொடர்ந்து இருப்போம். அதன் வளர்ச்சியிலும் ஆதரவளிப்போம்.

நடப்பில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் தொழிலை பாதுகாக்கும் நோக்கில்தான் இந்தப் புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது,

இப்போதைய சூழலில் திரைப்படத்தை தயாரித்தல், சந்தைப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் தேவைக்கு அதிகமான கவனம் தேவையாய் இருக்கிறது. இதற்காகத்தான் இந்தப் புதிய சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இது புதியதல்ல. ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில், இது போன்ற தனி ‘நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள்’ உள்ளன. அந்தச் சங்கங்கள் வரையறுக்கப்பட்ட நடப்பு தயாரிப்பாளர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் வழக்கமான திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களும் அங்கு சீராக இயங்கி வருகின்றன.

தமிழ் சினிமாவில் சுறுசுறுப்பான மற்றும் தற்போதைய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அத்தகைய தலைமை இல்லாத நிலையில், பின்வரும் பகுதிகளில் ஒரு வலுவான தலைமைத்துவத்தையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள்.

திரைப்பட வணிகத்தில் கொரோனாவின் தாக்கத்தை பின் எழும் சவால்களை எதிர்கொள்ளவும்.

எந்தவொரு தடைகளும் இல்லாமல் தங்கள் படங்களை முடித்து வெளியிடவும், தயாரிப்பாளர்களின் வியாபாரத்தை பாதுகாக்கவும்.

கொரோனா தாக்கம் குறைந்துவிட்டால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த தமிழக அரசாங்கத்தை வலியுறுத்துதல் மற்றும் தியேட்டர்களை திறந்து படங்களை வெளியிட அனுமதிக்க வலியுறுத்துவது.

உள்ளூர் வரியை நீக்குவதிலும், திரைத்துறையை மீட்டெடுப்பது குறித்து தமிழக அரசாங்கத்தை வலியுறுத்தவும்.

நடப்பு தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் படங்களின் வணிகத்தில் ஒவ்வொரு வழியிலும் உதவவும்.

மேற்கூறிய நோக்கங்களுடன் எனது தலைமையின் கீழ் இந்த புதிய சங்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

இன்று எங்களது சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. பெருவாரியான நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாக சேர்த்த பின்னரே எங்களது சங்கத்தின் நிர்வாகக் குழு உருவாக்கப்படும்,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் உறுப்பினர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,

இந்த புதிய சங்கத்தை ஒரு மோதலாகவோ அல்லது முறிவாகவோ கருத வேண்டாம்.. தற்போதைய சூழ்நிலையில் இந்த தொடக்கம் திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசியமாகவே நான் கருதுகிறேன், இதற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களது புதிய சங்கத்தில் சேர்ந்து அதன் நோக்கங்களுக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் திரைப்பட துறையின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்…” என்றார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

சங்கத்தில் உறுப்பினராக சேர, கீழ்க்கண்ட எங்களது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள் : tfapa2020@gmail.com

Our Score