2003-ம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தூள்’ படத்தில் சொர்ணாக்காவாக நடித்து தூள் கிளப்பியிருந்த நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.
முதலில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சகுந்தலா பின்பு தெலுங்கு சினிமாவுக்குள் காமெடி நடிகையாக களம் புகுந்தார். காலப்போக்கில் வில்லி நடிகையாகவும் மாறினார். பெண் வில்லிக்கு இவரைத் தவிர வேறு ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு தெலுங்கு திரைப்படங்களில் இவர் செய்யாத வில்லத்தனங்களே இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக ‘Nuvvu Nenu’, ‘Gangotri’, ‘Okkadu’, ‘Lakshmi’ and ‘Gulabi’ ஆகிய படங்களில் இவரது நடிப்பு இன்றைக்கும் மறக்க முடியாதது.
தமிழில் ‘தூள்’ படத்தில் இவர் ஏற்றிருந்த ‘சொர்ணாக்கா’ என்ற கேரக்டர் பெயரே, இன்றைக்கு மீடியாவில் பிரபலமான அடையாள வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தெலுங்கானா மாநிலத்தை முன்னிறுத்திய வேடங்களில் நடித்திருந்ததால் ‘சகுந்தலா’ என்ற இவரது பெயருக்கு முன்பு ‘தெலுங்கானா சகுந்தலா’ என்ற பட்டப் பெயர் வைத்தே அழைக்கப்பட்டார்.
சகுந்தலா நேற்று ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமாக, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
செய்தியறிந்து தெலுங்கு படவுலகமே அதிர்ச்சியாகிவிட்டது. பல சினிமாவுலக பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் ஹைதராபாத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது..
இன்று தெலுங்கானா சட்டப் பேரவையில் சகுந்தலாவின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டு அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தியும், அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.