full screen background image

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது.

இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது. இப்போது கடைசியாக ஓடிடியில் சரண்டராகியிருப்பது டெடி’ என்னும் திரைப்படம்.

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயீஷா இருவரும் தங்களது கல்யாணத்திற்குப் பிறகு ஜோடியாக இந்தப் படத்தில்தான் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் ஹாலிவுட்டில் தயாராகி வெளியான ‘TED’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் ரீமேக்காகும். கோச்சடையான் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்குத்தான் ஹாலிவுட்டை சேர்ந்த ஒரு அனிமேஷன் நிறுவனம் பணியாற்றியுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளிலேயே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது திரையரங்குகளில் எந்தப் படம் போட்டாலும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனையாவது கண்டு அதிர்ச்சியடைந்த இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா படத்தை ஓடிடி பக்கம் தள்ளிவிட்டுவிட்டார்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இந்த டெடி’ படத்தை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. வரும் மார்ச் 12-ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ‘டெடி’ படம் வெளியாகும் என்று படக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லரும் இன்றுதான் வெளியாகியுள்ளது.

Our Score