full screen background image

“சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்…” – ‘சர்கார்’ படத்துக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி..!

“சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்…” – ‘சர்கார்’ படத்துக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி..!

தீபாவளியன்று திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் முதலிடத்தில் வகிக்கிறது.

இந்த நிலையில் படத்தில் இடம் பெற்றிருக்கும் பல காட்சிகள் இன்றைய ஆளும் கட்சியினரை கடுமையாக விமர்சிப்பது போலவே இருப்பதை பொதுமக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.

அதேபோல் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமி சரத்குமாரின் கேரக்டர் பெயர் ‘கோமளவல்லி’ என்று வைக்கப்பட்டிருந்ததும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

‘கோமளவல்லி’ என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் வேண்டுமென்றே ஜெயலலிதாவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெயரை இயக்குநர் வைத்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் படத்தில் இடம் பெறும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகிய இரண்டு கேரக்டர்களும், இன்றைய ஆளும் கட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் குறிப்பதாகவும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சர்ச்சையினால் படம் பற்றி கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் சி.வி.சண்முகம் இருவரும், “சர்கார் படத்தில் சர்ச்சைக்கிடமான காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று எச்சரித்துள்ளனர்.

c.v.shanmugam-minister

நேற்று திருப்போரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “சர்கார் திரைப்படத்தில் 3 மணி நேரத்தில் முதல்வர் ஆவது போன்று காட்சி அமைத்துள்ளார்கள். யாருடைய கதையையோ திருடி படத்தை தயாரித்தவர்கள் தற்போதைய தமிழக அரசை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது.

அரசை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே வன்முறையை தூண்டும் செயலாக இது அமைந்துள்ளது.

யாருடைய தூண்டுதலின் பேரிலோ இது போன்ற காட்சிகளை அமைத்துள்ளனர். சட்டத்துறை அமைச்சர் என்பதால் இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும், அதில் நடித்துள்ள நடிகர் விஜய் மீதும், திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…” என்று எச்சரித்தார்.

இதேபோல் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நேற்று நிருபர்களை சந்தித்தபோது ‘சர்கார்’ படம் குறித்து குமுறிவிட்டார்.

kadambur-raju-1

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த காட்சிகளை அரசியல் நோக்கத்துக்காக படத்தில் சேர்த்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல.

மத்திய அரசின் திரைப்பட தணிக்கை துறையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். அவர்கள்தான் திரைப்படங்களை பார்த்து சான்றிதழ் வழங்குகின்றனர். எனவே இதற்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘சர்கார்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்–அமைச்சரிடம் கலந்து பேசி, ஆலோசனை நடத்துவோம். அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று படத் தயாரிப்பு நிறுவனத்திடம் அறிவுறுத்துவோம்.

அந்த காட்சிகளை அவர்களாக நீக்கவில்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்…” என்று கூறினார்.

படம் வெளியான பின்பு காட்சிகளை நீக்குவது முடியாது என்றாலும், தயாரிப்பாளர் விருப்பப்பட்டால் மட்டுமே அது முடியும் என்பது நடைமுறை யதார்த்தம்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ‘சன் பிக்சர்ஸ்’ என்பதும் அதன் நிறுவனர் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ‘கலாநிதி மாறன்’ என்பதாலும் இந்தப் படத்தை அ.தி.மு.க.வுக்கு எதிரான படமாக அமைச்சர்கள் கருதியதால் இந்தப் பேச்சு எழுந்துள்ளது.

“எப்படியோ, இந்தப் படத்துக்கு இரண்டு அமைச்சர்களும் கூடுதல் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இதனால், மேலும் இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் கூடத்தான் செய்வார்கள்…” என்று அடித்துச் சொல்கிறார்கள் சினிமாவுலகத்தினர்..!

Our Score