full screen background image

மே 11-ல் மீண்டும் மோதத் தயாராகும் கேயார்-தாணு கோஷ்டிகள்..!

மே 11-ல் மீண்டும் மோதத் தயாராகும் கேயார்-தாணு கோஷ்டிகள்..!

நித்ய கண்டம் பூரண ஆயசு என்பார்களே அது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொருத்தமானது..!

விட்டக் குறை தொட்டக் குறையாக சென்ற முறை நடந்த தேர்தலில் தோல்வியடைந்த தாணு தரப்பினர் விடாமல் நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு வழக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர். சென்ற மாதம்தான் ஒரு நிரந்தரமான தீர்ப்பு வந்து கேயார் தரப்பினர் பெருமூச்சுவிட்டார்கள்.

உடனேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துவிட்டார் தாணு. இதற்காக தானே ஒரு பொதுக்குழுவை கூட்டப் போக வேறு வழியில்லாமல் கோர்ட்டிற்குச் சென்றது கேயார் தரப்பு.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மாதம் மே 11-ம் தேதியன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றும், அதில் கேயார் தரப்பினர் தங்கள் மீது கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதெல்லாம் பார்த்துக்கலாம்.. என்று நேற்றுவரை அலட்சியமாக இருந்துவிட்ட கேயார் தரப்பு இப்போது அப்படியிருக்க முடியவி்லலையாம்.. காரணம், கேயாரிடம் இதுவரையில் அனுசரணையாய் இருந்த சில நிர்வாகிகள், அவரது அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களெல்லாம் இப்போது எதிரணிக்கு மாறிவிட்டார்களாம்.

சமீபத்தில் நடந்த பிலிம் சேம்பர் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

கேயாருடன் செயலாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா, துணைத் தலைவரான சுபாஷ்சந்திரபோஸ், செயற்குழு உறுப்பினரான கே.ராஜன் போன்றோர்தான் இருக்கிறார்கள்.

இன்னொரு துணைத் தலைவரான சத்யஜோதி தியாகராஜன், இன்னொரு செயலாளரான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இந்த பிலிம் சேம்பர் விவகாரத்தினால் கேயாருக்கு எதிரணிக்கு மாறிவிட்டார்கள். இந்த எதிரணியில்தான் தாணுவும் இருக்கிறார். இவர்தான் அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர இருப்பவர்.

ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல்தான்.. மோதல்தான்.. இவுங்க சண்டையே பெரிய சண்டையா இருக்கு.. அப்புறம் இவங்க எங்க தமிழ்த் திரையுலகத்தை காப்பாத்துறது..?

ஆக.. மே 11-ல் கோடம்பாக்க சினிமா வட்டாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது..

Our Score