full screen background image

நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது

நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது

சென்ற வருட இறுதியில் துவக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்ற ஆண்டு நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளினால் தமிழ்த் திரையுலகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டன.

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் உருவானது. இந்தச் சங்கத்திற்கு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தலைவரானார். தொடர்ந்து இந்தச் சங்கத்தில் தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்துவிட்டார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முடிந்தவுடன் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த இயக்குநர் டி.ராஜேந்தர் தனது அணியினருடன் தனியே சென்று ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்ற பெயரில் தனி சங்கத்தை அமைத்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதால் அதிருப்தியடைந்த பல விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்து தனியாக பிரிந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தைத் துவக்கினார்கள்.

தமிழ்ச் சினிமாவின் முக்கிய விநியோகஸ்தர்களான அருள்பதி, மதுரை அன்புசெழியன், அழகர்சாமி, தேனாண்டாள் சாகுல், வேலூர் சீனிவாசன், கோவை இராஜமன்னார், திருப்பூர் சுப்பிரமணியம், திருச்சி பிரான்சிஸ் ஆகியோர் இந்தப் புதிய சங்கத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்தப் புதிய விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு அருள்பதி தலைவராகவும், ராஜமன்னார் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் ஒரு புதிய கட்டிடத்தில் இந்த சங்கத்திற்கென்றே தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது.

இந்தத் திறப்பு விழாவில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score