இந்த வருடம் தமிழ்ச் சினிமாவில் இரண்டு முக்கியமான விஷயங்களுக்கு இறுதித் தீர்ப்பு எழுத வேண்டிய கட்டாயம் வரும் என்று நினைக்கிறோம்.
1. சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டால் அது எந்த மாதிரி படமாக இருந்தாலும் அதனை எதிர்க்கக் கூடாது..!
2. இலங்கை அரசுடன் தொடர்புடையவர்கள் தமிழ்ச் சினிமாவில் இருக்க முடியுமா..? முடியாதா..?
இதில் முதல் கேள்விக்கு ‘விஸ்வரூபம் பாகம்-2’ வெளியீட்டின்போது விடை கிடைக்கும் என்று தெரிகிறது.
இரண்டாவது கேள்விக்கு இந்த வருடத் தீபாவளிக்கு வரப் போவதாகச் சொல்லியிருக்கும் ‘கத்தி’ பட ரிலீஸின்போது தெரியும்..!
முதல் விஷயத்தில் கருத்துச் சுதந்திரம்.. படைப்பாளியின் உரிமை.. இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன.
இரண்டாவது விஷயத்தில், இன உணர்வு மேலோங்கி நிற்கிறது..!
கருத்துச் சுதந்திரம் சரி என்றால், அதனைத் தவறு என்பவர்களைச் சமாளிப்பது கடினம். படைப்பாளியின் உரிமையென்றால் “அது எங்களை அவமானப்படுத்துகிறது.. குற்றவாளியாக்குகிறது..” என்பார்கள். இதற்கு யாராலும் தீர்ப்பு சொல்லவே முடியாது.
‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின்போது கமல்ஹாசனை ஆதரித்தவர்கள், ‘இனம்’ படத்தின்போது பொங்கி எழுந்ததை பார்க்க்ததான் செய்தோம்.. இரண்டுமே சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டுத்தான் தியேட்டர்களை நோக்கி வந்திருந்தன..
‘விஸ்வரூபம்’ படம் தங்களை அவமானப்படுத்துவதாகவும், தவறான செய்திகளைத் தாங்கி வருவதாகவும் முஸ்லீம் அமைப்பினர் கூறினர்.. ஆனால் இதற்கு தமிழ்ச் சினிமாவுலக அறிவுஜீவிகள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து பொங்கியெழுந்தார்கள். ‘சென்சாரில் அனுமதி வாங்கிய ஒரு படத்தை இங்கே தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.. அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டார்கள்.
‘இனம் படமும் அதே போன்று தவறான செய்திகளுடனும், திரிக்கப்பட்ட வரலாற்றுத் தன்மையுடனும் வெளி வந்திருக்கிறது. இது தமிழ் இனத்திற்கே அவமானம்.. தமிழனை கொலை செய்தவர்களை ஆதரித்து எழுதப்பட்டிருக்கிறது’ என்று எதிர்ப்பவர்கள் கூறினர். இங்கே கருத்துச் சுதந்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு இன உணர்வு முன்னுக்கு வந்தது.
‘விஸ்வரூபம்’ ரிலீஸாக ஆதரவு தெரிவித்து பொங்கியவர்களில் ஒரு சிலர், ‘இனம்’ படத்திற்கு திடீர் ஆதரவு கொடுத்ததுதான் ஆச்சரியமான ஆச்சரியம். பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன் மறுபடியும் இறங்கி வந்து, ‘சில காட்சிகளை மட்டுமே நீக்கிவிட்டு வெளியிடலாம்’ என்றார்கள். இப்போது இதனை ‘கருத்துச் சுதந்திரம்’ என்றார்கள் ஆதரித்தவர்கள்.
‘இனம்’ படத்தை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர், ‘விஸ்வரூப’ தரிசனத்தை ஆதரித்தவர்கள்தான். ‘விஸ்வரூப’த்தில் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்றவர்கள் ‘இனம்’ படத்தில் அது தேவையில்லை. எங்களுக்கு இன உணர்வுதான் முக்கியம் என்றார்கள். இப்படி திடீர், திடீரென்று மாறி வரும் வானிலை அறிக்கையை போல திரையுலக அறிக்கை திலகங்கள் கொள்கை மாறுவது அரசியல்வாதிகளையும் மிஞ்சுவது போல உள்ளது..
இன உணர்வை கைவிடக் கூடாது என்றால், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மட்டும்தான் இன உணர்வு இருக்க வேண்டுமா..?
முள்ளிவாய்க்கால் போரின்போது ஈழத்து தமிழ் மக்களைக் கைவிட்ட காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ்காரர்களையும் தமிழ்ச் சினிமாவுலகம் என்ன செய்தது..? என்ன செய்ய முடிந்தது..? ஏதாவது கேள்வியாவது கேட்டதா..?
ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை போய் வந்த தமிழக அரசியல்வாதிகளை தமிழ்ச் சினிமாவுலகம் ஏதாவது தட்டிக் கேட்டதா..? ஏன் கேட்கவில்லை.. என்றெல்லாம் கேள்விகள் எழும். இவைகளும் நியாயமானவைதான்..!
இவற்றுக்கு யார் பதில் சொல்லப் போவது..?