full screen background image

‘டாணா’ – சினிமா விமர்சனம்

‘டாணா’ – சினிமா விமர்சனம்

நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சி.கலைமாமணி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் வைபவ் கதையின் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பாண்டியராஜன், உமா பத்மநாபன், யோகி பாபு, ஹரீஷ் பெராடி, ‘பசங்க’ சிவக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இணை தயாரிப்பு – எச்.எஸ்.கான், தயாரிப்பு நிர்வாகம் – வி.சுதந்திரமணி, இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சிவா.ஜி.ஆர்.என். படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், கலை இயக்கம் – பசர் என்.கே.ராகுல், சண்டை பயிற்சி – கூட்டி, ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், விளம்பர வடிவமைப்பு – 24 AM, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி.

Positive Print Studios நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர்களான ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் இருவரும் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொள்ளைக்காரர்களைக் கண்டு கிராமத்து மக்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த காலம். அந்த ஊரின் இளைஞர்களில் ஒருவர் தனி ஆளாக சென்று அந்தக் கொள்ளைக்காரர்களை மடக்கிப் பிடித்து இழுத்து வந்து ஊர்க்காரர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். கொள்ளைக்காரர்களை ஊர் மக்கள் கோபத்தில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

இதற்கடுத்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் லோக்கலில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டி ஒரு உள்ளூர் காவல் படையை அமைத்தது. அந்தக் காவல் படைக்கு அந்த இளைஞரையே தலைவராக நியமித்தார்கள். அந்த நேரத்தில் அந்த போலீஸாக இருந்தவர்களை ‘டாணாக்காரர்கள்’ என்றே அழைத்து வந்திருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட ‘டாணாக்காரர்கள்’ பரம்பரையில் வந்தவர்தான் படத்தின் நாயகனான வைபவ். இவருடைய பரம்பரையினர் வழி வழியாக காவல்துறையில் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் இவருடைய அப்பாவான பாண்டியராஜனால் போலீஸாக முடியவில்லை. அவர் உயரம் குறைவு என்பதால் அது முடியாமல் போகிறது.

‘டாணாக்காரர்கள்’ குடும்பத்தில் யாராவது ஒருவர் காவல்துறையில் பணி புரிந்தால்தான் அவர்களது குல தெய்வ வழிபாடும் நடக்கும். இந்தக் குல தெய்வ வழிபாடு தன்னோடு முடியப் போகிறதோ என்ற வருத்தத்தில் இருந்த வைபவ்வின் தாத்தா, அதே சோகத்தோடு திடீர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்.

வைபவ்வின் அப்பா பாண்டியராஜன், வைபவ்வை எப்படியாவது போலீஸ் வேலையில் சேர்த்துவிடலாம்  என்று நினைக்கிறார். ஆனால் வைபவ்வுக்கு போலீஸ் வேலையும் பிடிக்காமல், அப்பாவின் டார்ச்சரும் பிடிக்காமல் போகிறது. அப்பாவிடம் பேசாமலேயே இருக்கிறார்.

மேலும் வைபவ்வுக்கு விநோதமான ஒரு நோயும் இருக்கிறது. கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ.. உணர்ச்சிவசப்பட்டாலோ அவரது குரல் பெண் குரலாக மாறிவிடும். இதனாலேயே ஒருவிதமான குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார் வைபவ்.

இந்த நேரத்தில் அந்த ஊருக்கு மெடிக்கல் கேம்ப்புக்காக வந்த கல்லூரி மாணவியான நந்திதாவுக்கும், வைபவ்வுக்கும் இடையை எதிர்பாராத சந்திப்பு நடக்க.. வழமையான சினிமா காதல்போல் ஒரே ஷாட்டில் காதல் பிறந்து, அடுத்த காட்சியில் டூயட்டும் பாடுகிறார்கள்.

இந்த நேரத்தில் இவர்களது குல தெய்வம் கோவில் இருக்கும் இடத்தை அரசு கையகப்படுத்த நினைக்கிறது. இதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி வைபவ்வுக்கு பாட்டி முறையான கலைராணி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது வைபவ்வின் மனதை பெரிதும் பாதிக்கிறது. நான் போலீஸ் வேலைக்குப் போகிறேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

போலீஸ் தேர்வுக்குச் செல்லும் வைபவ் அனைத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் அவரை போலீஸ் வேலைக்குத் தேர்வாகவிடாமல் தடுக்கிறார் போலீஸ் தேர்வு வாரியத்தின் டி.ஐ.ஜி.யான ஹரீஷ் பெராடி.

இவரது எதிர்ப்பு எதற்காக..? வைபவ் இவரை எதிர்த்து வெற்றி கண்டாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘டாணா’ படத்தின் திரைக்கதை.

‘சக்திவேல்’ என்னும் நாயகனாக வைபவ்.. ஏதாவது சில காட்சிகளிலாவது நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நம்மை கடைசிவரையிலும் ஏமாற்றிவிட்டார். ஸ்பெஷல் திறமைகள் இல்லாவிட்டால் எவ்வளவுதான் தம் கட்டினாலும் பெயர் வராது என்பது இவருக்கும் பொருந்தும்.

நாயகி நந்திதா… ஓவர் மேக்கப்பில் படம் முழுவதும் வலம் வருவதாலேயே இவரை நாயகி என்று சொல்லலாம். ஸ்கிரிப்ட்டில் அதிக வேலை கொடுத்திருந்தாலும் இயக்கம் சரியில்லை என்பதால் சரியாக நடிக்க வைக்கப்படாமலேயே வீணடிக்கப்பட்டுள்ளார்.

யோகி பாபு சில காட்சிகள் மட்டுமே தோன்றியிருக்கிறார். கால்ஷீட் பிராப்ளத்தில் படமாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது. ஜெனீபர் ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்து தனது பெயரை கவனிக்க வைத்திருக்கிறார். அவருடைய சோகமான முடிவை அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டிய இடத்தில் இயக்குநர் கோட்டைவிட்டதால் இவருடைய முடிவு ரசிகர்களுக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை.

தங்களது அனுபவ நடிப்பால் படத்தில் உருப்படியாய் நடித்திருப்பவர்கள் பாண்டியராஜன், உமா பத்மநாபன், ஹரீஸ் பெராடி மூவர் மட்டுமே..!

இத்தனையாண்டுகள் கழித்தும் பெண் பார்க்கும் படலத்தில் புதுப் பெண்ணாக உமா பத்மநாபனை பார்க்க சிரிப்பாகத்தான் இருந்தது. ஆனால் உறுத்தல் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

பாண்டியராஜன் மகனை போலீஸாக்க எடுக்கும் முயற்சிகளும், அது கடைசியாக வீணாகி மகனுடன் பிணக்கில் கொண்டு வந்து விடுவதையும் சற்றே உணர்ச்சிகரமாக படமாக்கியிருக்கிறார்கள். பாண்டியராஜன் மற்றும் உமா பத்மநாபன் இருவரின் நடிப்பால் மட்டுமே இந்தப் பகுதியை ரசிக்க முடிந்திருக்கிறது.

ஹரீஸ் பெராடி தான் எதற்காக வைபவ் மீது விரோதம் காட்டுகிறேன் என்பதைச் சொல்லாமலேயே விரோதம் காட்டுகிறார். அந்த வில்லத்தனமான சிரிப்பும், புருவத்தை உயர்த்தியே நடிப்பைக் காண்பிக்கும் யுக்தியையும் வைபவ்வாவது புரிந்து கொண்டு கொஞ்சம் எதிர் நடிப்பைக் காண்பித்திருக்கலாம்.. ம்ஹூம்.. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்..!

ஒளிப்பதிவு, இசையும்கூட இந்தப் படத்தில் சுமார்தான். ஒரே படத்தில் இரண்டு படங்களின் கதையை வைத்திருப்பதுதான் படம் மீது எழுந்த குழப்பத்திற்குக் காரணம்.

ஒன்று போலீஸில் சேர முடியாமல் வைபவ் கஷ்டப்படுவதையே முழுமையான கதையாக வைத்திருக்கலாம். அல்லது கடன் கட்ட முடியாமல் தவிப்பவர்களிடமிருந்து தந்திரமாக வீடுகளைப் பறிக்கும் திருட்டுக் கும்பல்களைப் பற்றிய கதையாகவும் எடுத்திருக்கலாம். இப்படி இரண்டையும் ஒன்றாகக் குழப்பியதால் படம் பற்றிய கணிப்பைக்கூட ஒரே மனதோடு சொல்ல முடியவில்லை.

இடைவேளைக்கு பின்பான அந்தக் கதையை மிக சுவாரஸ்யமாகவே நகர்த்தியிருக்கிறார்கள். இதனை முழுத் திரைப்படமாக்கியிருந்தால் ஒருவேளை வெற்றி கிடைத்திருக்கலாம். தப்புப் பண்ணிட்டீங்களே இயக்குநரே..!

ஹரீஷ் பெராடிக்கு வைபவ் மீது எழும் கோபத்திற்குக் காரணம்.. அவர் போலீஸ் வேலையில் சேரும்போது செய்திருந்த விளையாட்டு ரெக்கார்டுகளையெல்லாம் வைபவ் முறியடித்ததுதான். இதனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ரசிகர்களுக்குப் புரிவதுபோல வசனத்தில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதையடுத்து ஹரீஷ் பெராடியின் ஜாதகத்தைத் தோண்டியதில் ஏற்படும் பிரச்சினைகள் என்று வேறுவிதமாகக் கொண்டு சென்றிருந்தால் இன்னொரு திரைப்படத்திற்கான கதைகூட கிடைத்திருக்கும்.

இப்போது ரெண்டுங்கெட்டானாக.. வைபவ் என்ற நடிகர் நடித்த படங்களில் இதுவும் ஒன்று என்றாகிவிட்டது..!

Our Score