full screen background image

ஸ்வீட் ஹார்ட் – சினிமா விமர்சனம்

ஸ்வீட் ஹார்ட் – சினிமா விமர்சனம்

ஓய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இந்தஸ்வீட் ஹார்ட்’ படத்தை அறிமுக இயக்குநரான ஸ்வினீத் எஸ்.சுகுமார் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் வாசு, கோபிகா ரமேஷ் மனு, அருணாச்சலேஸ்வரன் செந்தில், பௌசி காயத்திரி, மனு அப்பா ரஞ்சி பணிக்கர், மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை : யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு : பாலாஜி சுப்ரமணியம், படத்தொகுப்பு : தமிழரசன், கலை இயக்குநர் : சிவசங்கர், பத்திரிக்கை தொடர்பு யுவராஜ்.

இப்போதைய இளைய சமுதாயத்தினரை கெடுத்து குட்டிச்சுவராக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.

கதாநாயகனான ரியோராஜ் சின்ன வயதில் தன்னுடைய அப்பாவும் அப்பாவும் பிரிந்து சென்றதால் மிகப் பெரிய ஒரு இழப்பை சந்தித்து இருக்கிறார். தன்னுடைய அம்மா தங்களை விட்டு போனதால் திருமணம், பெண்கள், குழந்தைகள் இவர்கள் மீதான அவருடைய கண்ணோட்டம் நம்பிக்கை இல்லாததாக இருக்கிறது.

தற்போது திரைப்படத் துறையில் கிராபிக்ஸ் அனிமேஷன் செய்பவராக வேலை செய்து வரும் யுவராஜ் எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருக்கும் ஒரு சராசரியான தமிழ் குடிமகன்.

ஒரு இரவு நேர விருந்தில் அவர் நாயகி கோபிகா ரமேஷை சந்திக்கிறார். முதல் சந்திப்பு மோதலில் துவங்கினாலும் அதற்கு பிறகு அடுத்தடுத்து நட்பினை வளர்த்துக் கொண்டு அந்த நட்பை காதலாக்கிக் கொள்கிறார்கள் இருவரும்.

இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்து வருவதால் அவருடைய நட்பும், காதலும் மேலும் இறுக்கமாகி ஒரு நாள் இருவரும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதன் விளைவாக நாயகி கர்ப்பம் ஆகிறார்.

அந்தச் சமயத்தில் நாய்களும் நாயகியும் ஏதோ ஒரு சின்ன மனஸ்தாபத்தில் நாம் இருவரும் பிரிந்துவிட நினைத்து பிரேக் அப் என்று சொல்லிவிட்டு பிரிந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த நேரத்தில் நாயகி கர்ப்பமாகிவிட இதை தன்னுடைய குடும்பத்தில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். ஏனெனில், அவருடைய குடும்பத்தினர் நாயகி நாயகனுடைய காதலை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இப்போது நாயகி, நாயகனுக்கே போர் செய்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்கிறார். நாயகன் தன்னுடைய அக்காவான மருத்துவரிடம் சென்று அதை உறுதிப்படுத்த பெரும் போராட்டமே நடத்துகிறார். கடைசியாக கர்ப்பம் உறுதியானவுடன் கருவை கலைத்து விடும்படி நாயகன் சொல்ல நாயகி முதலில் சரி என்றாலும் பின்பு அதை ஏற்க மறுக்கிறார்.

இப்படியாக இவர்கள் இருவரும் ஒரு காட்சிக்கு மறு காட்சி மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டே இருக்க கடைசியாக என்னதான் நடக்கிறது.. என்னதான் நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் குழப்பமான திரைக்கதை.

இந்தக் காலத்து இளைஞனுக்குரிய கதாபாத்திரத்தை ரியோராஜ் அலட்சியமாக செய்து இருக்கிறார். எப்பொழுதும் ஒரு அடாபடியான பேச்சு.. யாரையும் மதிக்காத தன்மை காதல் எதற்கு.. கல்யாணம் எதற்குசெக்ஸ் எதற்கு என்கிற அர்த்தம்கூட தெரியாத ஒரு இளைஞன்.

அவசரப்பட்டு செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட ஒரு குற்ற உணர்வுகூட இல்லாமல் கடைசிவரையில் தான் ஒரு நிரபாரதி. தான் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று சொல்லியே எல்லாவிதமான குற்றத்தையும் நாயகியின் மேல் சுமத்தி கொண்டு தப்பிக்க பார்க்கும் ஒரு இளைஞன். இந்த கேரக்டரை ரியோராஜ் சரியாகவே செய்திருக்கிறார். வாழ்ந்து அனுபவித்து இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இப்போதை இளைஞிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ் காதலனுடன் காதல் உறவை வளர்த்துக் கொள்ள தெரியாமல் திண்டாடுவது.. கடைசியாக செக்ஸ்க்கு இணங்குவது.. அதன் பின்பு அதனுடைய பலியை தானே சுமப்பது.. கருவை கலைத்து விடலாம் என்று முதலில் சொல்லி பின்பு குழந்தை மீது உள்ள பாசத்தில் நான் செய்ய முடியாது என்று சொல்லி இப்படியாக மாறி, மாறி ஒரு குழப்பமான ஒரு தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கும், அதன் திரைக்கதைக்கும் ஏற்ற நடிப்பை காண்பித்து சபாஷ் பெறுகிறார் கோபிகா ரமேஷ்.

ரியோ ராஜின் நண்பராக நடித்தவர் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று தன் காதலியிடம் திரும்பத் திரும்பத் கடைசிவரையிலும் சொல்லி சொல்லி டென்ஷனில் இருக்கும் பார்வையாளர்களின் மனதை கொஞ்சம் இளக வைத்திருக்கிறார். அவருடைய கதையும் கடைசியாக சோகத்தில் முடியும்பொழுது லேசான புன்முறுவலை நம்மால் உதிர்க்க முடிகிறது.

இவருடைய காதலியாக நடித்து இருக்கும் பெளசி செக்ஸுக்காக வந்து காத்துக் கொண்டிருந்தவர்.. கடைசியில் அப்பார்ட்மெண்டையே கூட்டி வைத்து பஞ்சாயத்து செய்துவிட்டு கடைசியாக என்னை திருமணம் செய்து கொள்ளே ஆக வேண்டும் என்று பிளேட்டை திருப்பி போட்டுவிட்டு சொல்வது சுவாரஸ்யம்.

நாயகியின் அப்பா ரெஞ்சி பணிக்கர், தாத்தா சுரேஷ் சக்கரவர்த்தி, அவருடைய அம்மாவாக நடித்தவர் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரியோ ராஜின் அக்காவாக நடித்திருக்கும் அந்த மருத்துவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய க்ளோசப் காட்சிகள் அனைத்துமே மிகச் சிறப்பு. அதிலும் அவரும் அவருடைய ரியோ ராஜ் பேசுகின்ற வசனங்கள் இந்தப் படத்திற்கு ரொம்பவும் முக்கியமான வசனங்கள்.

ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர். வீட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளையும் வெளிப்புற காட்சிகளிலும் ஒரே மாதிரியான ஒரு வண்ணத்தை வைத்து பார்க்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் கேமரா டிரிக் செய்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

கலை இயக்கம் செய்தவரையும் நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். நாயகியின் வீட்டின் கலை இயக்கம் மிகச் சிறப்பு. அதேபோல் மருத்துவமனையை செட்டிங்கும் மிகச் சிறப்பு என்று சொல்ல வேண்டும்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசையில் கொஞ்சம் பரவாயில்லாமல் செய்திருக்கிறார்.

கதை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஸ்வனித் எஸ்.சுகுமார் இந்தக் கால இளைஞர்களின் மனதில் என்னதான் இருக்கிறது.. திருமண பற்றி, காதல் பற்றி, உறவுகள் பற்றி என்ன சிந்தனையில்தான் இருக்கிறார்கள் என்பதை சொல்ல வந்தவர் கிட்டத்தட்ட இவரே அந்த இளைஞராக மாறி கேரக்டர் மூலமாக எதைப் பற்றியும் கவலைப்படாத.. யாரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்காத ஒரு அடாவடித்தனமான ஹீரோவை நம் முன் காட்டி நமக்கு சோதனையை கொடுத்திருக்கிறார்.

எந்நேரமும் வாயில் சிகரட்டோடு இருக்கும் இவருக்கு முதலில் எதற்கு காதல்.. கல்யாணம் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றம் அல்லது தவறு என்றோ ஒரு சின்ன குற்ற உணர்ச்சிகூட இல்லாமல் நாயகனும், நாயகியும் கடைசிவரையில் பேசிக் கொண்டே இருப்பதை பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.

இதிலும் ஒரு வில்லங்கமாக ஒரு கட்டத்தில் இந்தர் கர்ப்பத்துக்கு நான்தான் காரணமா என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறார் ரியோராஜ். இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம். ஒரு காதலன் காதலிக்கு இடையில் பேசக் கூடாத விஷயமாக இதையும் பேசிவிட்டு பின்பு மறுபடியும் ஆமாம்.. நான்தான் அதற்கு காரணம்.. நீ கலைத்து விடு என்று அசால்டாக சொல்கிறார் ரியோராஜ். இதுவெல்லாம் படம் பார்க்கின்ற நமக்கு அவ்வளவு எரிச்சலை தருகிறது.

இயக்குநரின் வீட்டில் பெண் குழந்தைகள் இல்லை போலிருக்கிறது அதனால் பெண்கள் சார்பாக பேசுவதற்கு எந்த ஒரு விஷயத்தையும் அவர் கையாளாமல் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தனமாகவே தன்னுடைய பார்வையிலேயே இந்த படத்தை நகர்த்திக் கொண்டு வந்து கடைசியில் ஹீரோவுக்கு எந்தவிதமான குற்றவுணர்வும் இல்லை என்று சொல்வதைப் போல படத்தை முடித்திருப்பது மகா கேவலம்.

இன்னொரு பக்கம் இறுதி காட்சியில் நாயகியின் அப்பாவே இகேபோல் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவுவைத்திருந்திருக்கிறார் என்று வெளிப்படையாக சொல்ல குடும்ப பாரம்பரியமே இப்படித்தான் தொடர்கிறது என்று சொல்லி முடித்திருப்பது மிக மிக அருவருக்கத்தக்க செயல்.

இப்படியே ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படித்தான் இருப்பார்கள் என்பது போல காட்டி இருப்பது கடைசியாக தமிழ்நாட்டையே கேவலப்படுத்துவது போல இருக்கிறது. மொத்தப் படத்தையும் இந்த ஒரே ஒரு காட்சியில் சரித்து விட்டார் இயக்குநர்.

இந்தப் படத்தை பார்ப்பவர்கள் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது சரியா.. தப்பா என்கின்ற பட்டிமன்றத்துக்கு போகாமல் காதலன் பேச்சைக் கேட்டு கருவை கலைத்துவிட்டு போகவேண்டியதுதானேஎதுக்கு இவ்வளவு பிரச்சனை என்று பேசுவதுபோல் படத்தை முடித்திருப்பது நிச்சயமாக வருந்தத்தக்கது.

இதுபோன்ற திரைப்படங்கள் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கே ஆபத்தானதுதான்..!

RATING : 3 / 5

Our Score