full screen background image

‘தர்மதுரை’ குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

‘தர்மதுரை’ குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

‘தர்மதுரை’ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அப்படத்தின் 100-ம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து ‘தர்மதுரை’ படக் குழுவினரை வாழ்த்தி பெற்றுக் கொண்டார்.

‘தர்மதுரை’ என்கிற பெயரில் ரஜினியும் கவுதமியும் நடித்த படம் ஏற்கெனவே வெளிவந்திருந்தது. இந்த நேரத்தில் அதே தலைப்பில் தாங்கள் ஒரு படம் செய்வதாகச் சொல்லி தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று ‘தர்மதுரை’ படத்தை உருவாக்கியிருந்தது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி, மக்கள் நாயகன் விஜய் சேதுபதி ஆகியோரின் கூட்டணி.

இப்போது இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்று 100-வது நாளையும் கடந்து இன்றைக்கும் தமிழகத்தில் ஏதோ ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை சமீபத்தில் கொண்டாடிய ‘தர்மதுரை’ படக் குழு. அன்றைய தினத்தில் படத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் 100-வது நாள் கேடயம் கொடுத்து சிறப்பித்தனர்.

அதே சமயம் முன்பு வெளிவந்த படத்தின் தலைப்புகளிலேயே இப்போது மீண்டும் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் வெற்றியைத் தொடாமலேயே போய்விட்டது திரையுலகம் இதுவரையிலும் கண்ட நிகழ்வு. அதை முறியடித்து பழைய தலைப்பிலேயே புதிய திரைப்படத்தை உருவாக்கி அதனை 100 நாள் வரையிலும் ஓடும் அளவுக்கு வெற்றிப் படமாகவும் ஆக்கியதால்.. அந்த பழைய ‘தர்மதுரை’யின் ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் 100-வது நாள் கேடயத்தை வழங்க முடிவெடுத்தது ‘தர்மதுரை’ படக் குழு.

அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று காலை அவரது இல்லத்தில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் சந்தித்து 100-வது நாள் கேடயத்தை அவருக்கு பரிசாக அளித்தார்கள்.

pic-3

இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் R.K சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

விஜய் சேதுபதி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.

சீனு ராமசாமியின் அனைத்து படங்களிலும் காணப்படும் சமுக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.

வில்லனாக நடிக்கும்போது தனது முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ‘தாரை தப்பட்டை’, ‘மருது’ போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை பெரிதும் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

“முள்ளும் மலரும்’ – காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன்…” என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

உண்மையான ‘தர்மதுரை’க்கு தங்கள் ‘தர்மதுரை’யின் 100-ம் நாள் கேடயத்தை வழங்கியதில் மகிழ்ச்சி அடைந்தனர் படக் குழுவினர்.

Our Score