இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ‘பாகுபலி-2’ படத்தின் இசையை, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறதாம்.
‛பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர், உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. டிரைலருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் படக் குழு உற்சாகமாகியுள்ளது.
அதோடு படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாய் நடத்த படக் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்படி வரும் ஏப்ரல் 8-ம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு, படத்தின் இசையை வெளியிட உள்ளார். தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி கலைஞர்களையும் அழைத்து விழாவை இன்னும் சிறப்பாக நடத்த உள்ளனராம்.
‘பாகுபலி-2’ படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில், இந்தியா முழுக்க சுமார் 6500 தியேட்டர்களில் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்த அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ‘பாகுபலி-2’ என்பது குறிப்பிடத்தக்கது.