ஜெர்மானிய இயக்குநர் Fatih Akın-க்கு வராத தைரியம் நமது இயக்குநர் சுந்தர்.சி.க்கு வந்திருக்கிறது.
பெய்த் அகின் 2010-ல் தான் இயக்கிய Soul Kitchen என்ற ஜெர்மானிய திரைப்படத்தை வெளியிட்டு நிறைய பாராட்டுக்களையும், கொஞ்சம் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு அடுத்த படத்திற்குப் போய்விட்டார். ஆனால் நமது இயக்குநர் சுந்தர் சி.யோ இதே Soul Kitchen ஜெர்மன் படத்தை அப்படியப்படியே காப்பியடித்து எடுத்த ‘கலகலப்பு’ படத்திற்கு இரண்டாம் பாகத்தையும் உருவாகக முனைந்திருக்கிறாராம்.. அப்போ சுந்தர் சி. தைரியமானவர்தானே..?
2012-ம் ஆண்டு விமல், சந்தானம், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி, மனோபாலாமற்றும் பலர் நடிக்க சுந்தர்.சி இயக்கிய Soul Kitchen ஜெர்மன் படத்தின் அட்டர்காப்பியான இந்த ‘கலகலப்பு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சுந்தர்.சி.யின் அக்மார்க் காமெடி திரைக்கதையாலும், சிறப்பான இயக்கத்தினாலும் பெரும் வசூலைப் பெற்றது.
தற்போது சுந்தர்.சி இயக்கி விரைவில் வெளிவர உள்ள ‘அரண்மனை’ படத்தைத் தயாரித்துள்ள விஷன் ஐ குளோபல் மீடியாஸ் பட நிறுவனத்திற்காக ‘கலகலப்பு-2’ படத்தையும் சுந்தர்.சி.யே இயக்கவுள்ளாராம். சுந்தர்.சி சொன்ன நகைச்சுவையான கதை, திரைக்கதை தயாரிப்பாளர்களுக்கு பிடித்துப் போகவே அவருடைய இயக்கத்திலேயே அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டனர்.
இந்தப் படத்தில் மூன்று முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனராம். வழக்கம்போல பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படத்தோடு ஜீவா நடிக்கும் மற்றொரு படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம்.
காப்பியடித்தாலும் ஜெயிக்கிற மாதிரி காப்பியடிக்கணும்ன்றதுதான் சுந்தர்.சி.யின் கொள்கை..! இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றால் நமக்கு சந்தோஷமே..!