மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை அதே பெயரிலேயே பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் துர்கா ராவ், சவுத்ரி நீல் சவுத்ரி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள், இயக்குநருடன் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக் குழுவினருடன் தலைமை விருந்தினராக திருமதி சுகாசினி மணிரத்தினம் கலந்து கொண்டார்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது, “முதலில் கண்ணனுக்கு இது போன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள். கண்ணன் மிக வேகமானவர். அவர் படம் எடுக்கும் வேகத்தையும், திட்டமிடலையும் இன்றைய இளம் இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காட்சியை 12 நாட்கள் எடுக்கும் இன்றைய சினிமாவில் இந்த முழு படத்தையும் 12 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார். அவரை குருவின் குரு என்று சொல்லலாம்.
மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர் கண்ணன். அவர் எங்களது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தில் பணியாற்றியபோது நகைச்சுவை சம்பந்தமாக ஏதாவது வேண்டி இருந்தால் அவரைத்தான் அழைப்போம். அப்படி ஒரு நகைச்சுவை உணர்வு உள்ளவர். இந்த சீரியஸான படத்தை எடுத்திருக்கிறார் என்பது பெருமையாக உள்ளது.
ஐஸ்வர்யாவை நான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை இப்படி முன்னணி நடிகையாக பல படங்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு அன்றைய இயக்குநர்கள்தான் காரணம், அந்தக் காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் போன்றவர்கள்தான்.
கேரளாவில் சிறந்த படங்களைத் தேர்வு செய்த விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருத்திதான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.
நான் மணியை திருமணம் செய்து கொள்ளும்போது அவரிடம் 15 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. அவர் 5 படங்கள்தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
இந்த நிலையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாக திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில்தான் கொடுத்தார்கள். எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.
எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்கக் கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோதான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன்.
சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று கே.பாலசந்தரும் சிந்தித்தார். பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும்போதுதான் நம்பிக்கை வருகிறது. இந்தப் படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.