full screen background image

நடிகர் விஜய்யால் தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..!

நடிகர் விஜய்யால் தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..!

தமிழக சட்டப் பேரவைக்கு இன்று நடைபெற்ற வாக்குப் பதிவு மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று அனைத்துக் கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

ஆனால், இவ்வளவு பரபரப்பாகும் என்று அவர்களே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் சென்னையில் நடைபெற்றுவிட்டது.

அது நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளிலேயே வாக்குப் பதிவைச் செலுத்த வாக்குச் சாவடிக்கு வந்ததுதான்.

இன்று அதிகாலையில் இருந்தே அவரது வீட்டருகே அவரது ரசிகர்கள் அவருக்காகக் காத்திருந்தனர். எப்போதும்போல அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக நீலாங்கரை போலீஸாரும் அவரது வீட்டருகே காத்திருந்தார்கள்.

ஆனால், யாருமே எதிர்பார்க்காததுபோல், திடீரென்று சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியில் வந்த விஜய் வேக, வேகமாக செல்லத் துவங்க.. இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத ரசிகர்கள் கூட்டமும் அவரைப் பின் தொடர்ந்தது.

சில டிவி சேனல்களும் இதனை லைவ்வாக காண்பிக்கத் துவங்க.. ரசிகர்களுக்கும், விஜய்க்கும் இடையில் ஒரு ஓட்டப் பந்தயமே நடந்தது. ‘இழுத்துக்கோ..’ ‘பிடிச்சிக்கோ’ என்பதைப் போல அவரது சைக்கிள் பக்கத்தில் வந்து அவரைத் தொட்டுப் பார்ப்பதும்.. ஒரு கையில் வண்டியை ஓட்டிக் கொண்டே இன்னொரு கையில் செல்பி எடுப்பதுமாக ஆபத்தான வேலைகளையும் செய்தார்கள் அவரது ரசிகர்கள்.

விஜய் வாக்குச் சாவடிக்கு வந்து உள்ளே நுழையும்போதும் அப்படியொரு கூட்டம் அவரைச் சூழ்ந்து கொள்ள.. உள்ளே நுழையக் கூட முடியவில்லை விஜய்யால்.. போலீஸார் பெரும் சிரமப்பட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

வாக்களித்து திரும்பவும் வெளியில் வந்த விஜய்யை பத்திரமாக காரில் திருப்பியனுப்ப போலீஸார் எத்தனித்தபோது.. “நான் சைக்கிளில்தான் செல்வேன்” என்று பிரேக் போட்டார் விஜய்.

அவருடைய சைக்கிள் இருந்த இடத்திற்கு வந்து அதை எடுத்துக் கொண்டு நகர்ந்த விஜய்யை விடவேயில்லை அவரது ரசிகர்கள். எந்தப் பக்கமும் நகரக்கூட முடியாமல் சுற்றி வளைக்க.. வேறு வழியில்லாமல் சைக்கிளை விட்டுவிட்டு ரசிகர் ஒருவரின் டூவீலரில் ஏறி அமர்ந்து பயணமானார் விஜய்.

இப்போதும் அதேபோல் விஜய்யை துரத்தியபடியே சென்று அவரை அவரது வீடுவரையிலும் கொண்டு சென்றுவிட்டார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

இதில் உண்மையில் பாவமாகிப் போனவர்கள் காவல்துறையினர்தான். ஏற்கெனவே பூத் பாதுகாப்பு.. தேர்தல் பாதுகாப்பு என்று அலைந்து, திரிந்து வந்தவர்கள்.. விஜய்யின் இன்றைய காலை நேர விளையாட்டால் டென்ஷனாகிவிட்டார்கள்.

விஜய் திரும்பிப் போகும்போது லேசான தடியடி நடத்தித்தான் அவரை அனுப்பி வைத்தார்கள் போலீஸார். திரும்பும்போது பாதி தூரம்வரையிலும் வந்த காவல்துறையினர் ஒரு கட்டத்தில் “போதும்டா சாமி” என்று நொந்து கொண்டு திரும்பிவிட்டனர். அதன் பின்னர் முழுக்க, முழுக்க ரசிகர்கள் சூழவே விஜய் தன் வீடு வந்து சேர்ந்தார்.

இது போன்ற இக்கட்டான சூழலைத் தவிர்ப்பதற்காகத்தான் காவல் துறையினரிடம் முன் கூட்டியே நேரத்தைச் சொல்லி பாதுகாப்பு கேட்டு.. அவர்களது வழிகாட்டுதல்படி வந்து போனால் அவர்களுக்கும் பிரச்சினையில்லை. நடிகர்களுக்கும் பிரச்சினையில்லை.. ரசிகர்களுக்கும் பிரச்சினையில்லை.

இன்றைய தினம் விஜய் நடந்து கொண்ட விதம் பற்றி காவல்துறை வட்டாரத்தில் பெருத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய் இதை தவிர்த்திருக்க வேண்டும் என்பதே அவர்களது கருத்தாக உள்ளது.

இதற்கிடையில் “விஜய்யின் வீட்டிலேயே 7 கார்கள் இருக்கும் சூழலில் அவர் ஏன் இப்படி சைக்கிளில் வந்து போக வேண்டும்..?” என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள் காவல் துறையினர்.

விஜய் அப்படி வந்ததற்குக் காரணம் “பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாகக் குத்திக் காட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு தன் எதிர்ப்பைக் காட்டும்விதமாகத்தான் விஜய் சைக்கிளில் வந்தார்” என்று எதிர்க்கட்சியினர் அத்தனை பேரும் சொல்கிறார்கள்.

ஆனால், “விஜய் தன் ரசிகர்களோடு ரசிகர்களாக ஒரு நாளாவது இருக்க வேண்டும் என்று நினைத்தும், தனது ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தியும்தான் இந்தச் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக…” ஆளும் கட்சியினர் சொல்கிறார்கள்.

இப்படி இரு தரப்பினரும் மாற்றிச் சொன்னாலும், “மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலிக்கே வந்து தன்னை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்து மிரட்டிய வருமான வரித் துறை சோதனையை விஜய் மறக்கவில்லை. இதனால்தான் இந்த சைக்கிள் பதிலடி.. அதுவும் தேர்தல் நாளன்று..! இதனால் அவரது ரசிகர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பாக வாக்களிப்பார்கள் என்று அவர் நினைத்திருக்கிறார். இதுதான் உண்மையாக நடந்தது என்கிறார்கள்..” தமிழக அரசியல் பார்வையாளர்கள்.

யார் எப்படிப் பேசினாலும் விஜய் மெல்ல, மெல்ல இன்னொரு ரஜினியாகிறார் என்பது மட்டும் உண்மை..!

Our Score