full screen background image

ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்

ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ஜூடோ கே.கே. ரத்தினம்(Judo Rathnam) உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக  பணிபுரிந்துள்ளார்.

1959-ம் ஆண்டில் ‘தாமரைகுளம்’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர்,  அதன் பின்னர் 1966-ம் ஆண்டில் ‘வல்லவன் ஒருவன்’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். 

இதன் பின்னர் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என  அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். 

ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் S.P. முத்துராமன் இயக்கிய ‘முரட்டுக்காளை’, ‘சகலகலாவல்லவன்’, ‘பாயும் புலி’, ‘போக்கிரி ராஜா’ போன்ற பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர். S.P.முத்துராமன் இயக்கிய 70 படங்களில் 40 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இறுதியாக ‘தலைநகரம்’ படத்தில்  நடிகராகவும் நடித்திருந்தார். 

இவரிடம் சூப்பர் சுப்பராயன், ராம்போ ராஜ்குமார், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், பொன்னம்பலம், ஜூடோ. கே.கே.ராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், அம்பூர். ஆர்.எஸ்.பாபு மற்றும் எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் உதவியாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். 

அவரது மகன் ஜூடோ கே.கே.ராமுவும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஆவார். அவரது பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் ஸ்டண்ட் கலைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூடோ ரத்தினத்தின் பூதவுடல் திரைத்துறையினரின் இறுதி அஞ்சலிக்காக நாளை (27.01.23) காலை சென்னை வடபழனியில் உள்ள சண்டை இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. இறுதி நிகழ்வுகள் 28.01.30 சனிக்கிழமை பிற்பகல் குடியாத்தத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score