‘ஜின்’ என்கிற பெயரில் தயாராகியிருக்கும் ஒரு புதிய திகில், சஸ்பென்ஸ் கலந்த பேய்ப் படம் தற்போது ‘டார்லிங்-2’ என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது.
சதீஷ் சந்திரசேகரன் என்கிற புதிய இயக்குநர் தயாரித்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கலையரசன், காளி வெங்கட், முனீஸ்காந்த், ஹரி, அர்ஜூன்ன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்கம் – சதீஷ் சந்திரசேகரன், இசை – ரதன், பாடல்கள் – முத்தமிழ், வசனம் – ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பு – மதன், சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.செல்லதுரை, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ராகேஷ், நிர்வாகத் தயாரிப்பு – உமேஷ் டி. பிரனவ், தயாரிப்பு – ரமீஸ், சதீஷ் சந்திரசேகரன்.
படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் பணப் பிரச்சினை காரணமாக படத்தைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின் இயக்குநர் சதீஷ், நாயகன் ரமீஷ் ஆகியோரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இந்தப் படத்தில் முதலீடு செய்ய, அவர்கள் அனைவரையும் பங்குதாரர்களாகக் கொண்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து முடிந்துள்ளது.
சென்னையில் இருந்து வால்பாறைக்கு விடுமுறையைக் கழிப்பதற்காகச் செல்லும் நண்பர்கள் கூட்டம் அவர்கள் தங்கியிருக்கும் பங்களாவில் ஒரு அமானுஷ்ய விவகாரத்தில் சிக்கித் தவிப்பதுதான் இந்தப் படத்தின் கதையாம். படம் முழுக்கத் தயாரித்து முடிந்து தற்போது திரைக்கு வரவும் தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சதீஷ் சந்திரசேகரன் முனைந்துள்ளார்.
பல வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதன் தலைப்பை மட்டும் மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் என்று விளக்கியுள்ளது. ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ்குமாரின் நடிப்பில் உருவான டார்லிங் படம் இதேபோல கதையம்சத்துடன் வெளியாகி வெற்றி பெற்றதால், அதன் தொடர்ச்சியான படமாக இதனைக் கொண்டு வரலாம் என்ற திட்டத்துடன் இப்போது இந்த ‘ஜின்’ படத்தின் பெயர் ‘டார்லிங்-2’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
படம் அடுத்த மாதம் 21-ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.