நடிகர் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதரவு பெற்ற லைகா மொபைல் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இதனால் அந்தப் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறிய தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு ‘கத்தி’ படத்தின் இயக்குநர் முருகதாஸை நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.
அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான பிரபாகரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அது நமது வாசகர்களுக்காக இங்கே :
“ஒரு பிரச்சனையை கையில் எடுக்கும் முன்பு எதிர் தரப்பிற்கு தகவல் கொடுத்துவிட்டு போராட்டம் எடுப்பது எங்கள் வழக்கம். அதன்படி, ராஜபக்சேஆதரவு நிறுவனமான லைகா தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் முருகதாஸை, கடந்த வாரம் (01.08.2014) அன்று நாங்கள் (பிரபா, மாறன், கவுதம், விக்கி) சந்தித்தோம்.
இயக்குனரை சந்தித்தவுடன் எங்கள் தரப்பு வாதத்தினை முன்வைத்தோம். லைகா நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினோம். பொறுமையாக அனைத்தையும் கேட்ட முருகதாஸ், பின்னர் எங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முருகதாஸ்:- சார், நான் மற்ற இயக்குனர்கள் போல் வெறும் பணத்துக்காக படம் பண்ணுபவன் இல்லை. ஒவ்வொரு படத்திலும் ஒரு சமுதாயப் பிரச்னையை(issue) வைத்துதான் படம் எடுப்பேன். இந்த படத்திலும் ஒரு மெசேஜ் வச்சிருக்கேன். தமிழன் என்ற உணர்வு எனக்கும் இருக்ககுறதுனாலதான் ‘ஏழாம் அறிவு’ படம் எடுத்தேன். தணிக்கைத் துறை கட்டுப்பாடுகளையும் மீறி வசனங்களையும் பாடல் வரிகளும் வைத்தேன். தமிழர்களை இனப் படுகொலை செஞ்ச ராஜபக்சே மாதிரி ஒருத்தன் காசுல சாப்பிடுறதைவிட நான் செத்துறலாம் சார்.
நடந்தது என்னனா, எனக்கு லைகா யாருனே தெரியாது. இப்போவரைக்கும் லைகா சம்பந்தமான யாரையும் நான் பாத்ததே இல்லை. ஐங்கரன் நிறுவனத்திற்குத்தான் நான் படம் பண்ண ஒப்பந்தம் செஞ்சேன். எனக்கு பணத்துக்கான காசோலை வரும்போதுதான் பார்த்தேன். அதுல லைகான்னு இருந்துச்சி.
உடனே ஐங்கரன் நிறுவன நிர்வாகி கருணாவை சந்தித்துப் பேசினேன். ‘ஐங்கரன் – லைகா எல்லாம் ஒண்ணுதான். ஒண்ணும் பிரச்சனை இல்ல’ன்னு சொன்னாரு. சரி பணம் வந்தா போதும்… எந்த நிறுவனமா இருந்தா என்னன்னு அப்போ விட்டுட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த பிரச்சனை எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சி.
லைகா, ராஜபக்சே சொந்தக்காரன்னு தெரிய வந்த உடனே நான் விஜய் சாரை கூப்பிட்டு ‘தயாரிப்பாளரை மாத்தணும்’னு சொன்னேன். பாவம், அவரும் ரொம்ப பயந்துபோய் இருந்தாரு. ‘இலங்கைப் பிரச்சனைல நாம் ஜாக்கிரதையா இருக்கணும். அப்படி ஒண்ணும் லைகாவுக்குதான் படம் பண்ணனும்னு ஒண்ணும் இல்ல. தயாரிப்பு நிறுவனத்தை மாத்துங்க’ன்னு விஜய்யும் சொல்லிட்டாரு.
தயாரிப்பாளரை மாத்தலாம்ன்னு இருந்த நேரத்துலதான், நல்லவேளை, ‘கத்தி’ படத்திற்கான மேலாளரும், லைகா நிறுவனத்தின் மேலாளரும் என்னை சமாதானப்படுத்துனாங்க.
‘இந்த லைகா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சாட்சியமற்ற பொய் குற்றசாட்டுகள். இது தொழில் போட்டியால் கிளப்பி விடப்பட்ட அவதூறுகள்’ என்று சொன்னார்கள்.
அவர்கள் சொன்னப்பகூட நான் முழுசா நம்பல. அப்புறம், அவுங்க என்னை சீமான் அண்ணனிடமும், நெடுமாறன் அய்யாவிடமும் பேச வைத்தார்கள். அவர்கள் இருவரும் சொன்ன பிறகுதான் ‘லைகா தப்பான நிறுவனம் இல்லை’ன்னு எனக்கு நம்பிக்கையே வந்தது.
மாறன்:- சீமான் அண்ணனும், நெடுமாறன் ஐயாவும் உங்களிடம் என்ன சொன்னார்கள்?
முருகதாஸ்: சீமான் அண்ணன் தலைவரை(தலைவர் பிரபாகரனை) சந்தித்த பொழுது, தலைவரே சொன்னாராம். ‘புள்ளையார் படம் போட்ட கம்பெனிக்கு(ஐங்கரன் கம்பெனிக்கு) படம் பண்ணு. அவன் நம்ம ஆளு’ன்னு. அதனால, ‘இதுவும் நம்ம கம்பெனி மாதிரிதான். தாராளமா படம் பண்ணு. வடநாட்டுக்காரனுக்கெல்லாம் படம் பண்றீங்க. நம்ம தமிழனுக்கு படம் பண்ணா என்ன தப்பு?’ன்னு சீமான் அண்ணன் சொன்னாரு. நெடுமாறன் ஐயாவும் ‘லைகாவுக்கு படம் பண்ணு. ஒண்ணும் பிரச்சனை இல்லை’ன்னுதான் சொன்னாரு.
சார், இப்போவரைக்கும் நான் பண்றது இனத்துக்கு எதிரான தப்பு இல்லன்னு என்னை நானே சமாதானம் பண்ணிட்டுதான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க மட்டும் லைகாவுக்கு எதிராக வலுவான ஆதாரத்தோட என்கிட்ட வந்து ‘லைகா தப்பு’ன்னு சொல்லுங்க. அடுத்த நிமிஷம் நான் உங்களோட சேர்ந்துக்கிட்டு லைகாவுக்கு எதிராக போராட்டம் பண்றேன்.
நான்(பிரபாகரன்): சரி சார். லைகாவுக்கு எதிரான வலுவான ஆதாரங்களோட உங்களை விரைவில் வந்து சந்திக்கிறோம்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் முருகதாஸ். இதற்கு துணை போகிறார்கள் சீமானும், நெடுமாறன் ஐயாவும்.. இவர்கள் இருவருக்கும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. திடீரென்று சில விஷயங்களில் வெகுஜன மக்களிடமிருந்து விலகிப் போகிறார்கள்.
லைகா மொபைல் நிறுவனத்துக்கும், அதன் சார்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்துக்குமான தொடர்புகளையும், இந்த நிறுவனத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்குமான தொடர்புகளையும் அம்பலப்படுத்தி இதுவரையிலும் நிறைய ஆதாரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டுவிட்டது.
இவைகள் அத்தனையையும் சீமானும், நெடுமாறன் ஐயாவும், முருகதாஸும் படிக்காமல் இருந்திருக்கப் போவதில்லை.. இத்தனையும் செய்துவிட்டு.. இவ்வளவு ஆதாரங்களையும் பார்த்துவிட்டு திரும்பத் திரும்ப இதில் ராஜபக்சே தொடர்புக்கு ஒன்றுமில்லை என்று சொல்வது இவர்களையே சந்தேகத்துடன் பார்க்கும் சூழலுக்கு தள்ளுகிறது..!
முருகதாஸ் இப்போதும் அப்பாவியாய் சொல்கிறார். நான் எதையும் பார்க்கவில்லை. படிக்கவில்லை.. எனக்கு எதுவும் தெரியாதென்று.. இணையத்தில் இப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் முருகதாஸ் தெரியாது என்று சொல்லி நழுவப் பார்க்கிறார்.. இதற்கு இரண்டு தமிழீழ உணர்வாளர்கள் திடீரென்று ஆதரவு கொடுக்கிறார்கள்..
சர்வம் நாசம்தான்.. தமிழனின் தொடர் தோல்விகளுக்குக் காரணம் இந்த ஒற்றுமையின்மைதான்.. பணம், பொருள், செல்வாக்குக்கு அடிபணியும், ஆசைப்படும் தமிழர்கள்தான் உண்மையான தமிழின துரோகிகள்..!