முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.கருணாநிதியின் பேரனும், முன்னாள் துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பாக தயாரித்திருக்கும் ‘நண்பேன்டா’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க அரசுத் தரப்பு மறுத்துவிட்டதாம்.
“படத்தின் தலைப்பு தமிழ் பெயராக இருந்தால்.. சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் பெற்றிருந்தால் அந்தத் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கலாம்..” என்பது அரசு நிர்ணயித்துள்ள விதி. இந்த விதிகளுக்குட்பட்டு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் பெற்று, ‘நண்பேன்டா’ என்ற தமிழப் பெயருடன் வெளிவரவிருக்கும் இந்தப் படத்திற்கு அரசு வரிவிலக்கு இல்லை என்று சொல்லியிருப்பதன் காரணம் என்ன என்பது நமக்கே தெரிகிறது.
பக்கா அரசியல் காரணமாக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இப்போதைய மாநில அரசு செயல்பட்டிருப்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்தப் படத்துக்கும் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தேன். சென்ற முறையே ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கும் இதேபோல வரிவிலக்கு கேட்டும் தர மறுத்துட்டாங்க. அதை எதிர்த்து நான் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கு இப்போ சுப்ரீம் கோர்ட்ல பெண்டிங்ல இருக்கு.
இந்த வரிவிலக்கு கமிட்டில மொத்தம் 53 உறுப்பினர்கள் இருக்காங்க. ஆனா என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க மட்டும் குறிப்பிட்ட ஆறு பேர் மட்டுமே வருவார்கள். படத்தை கடைசிவரையிலும் பார்த்துட்டு ‘வரி விலக்கு கொடுக்க்க் கூடாதுன்னு கவர்ன்மெண்ட்ல சொல்லிட்டாங்க ஸார். ஸாரி கோச்சுக்காதீங்க’ன்னு சொல்லிட்டுப் போயிருவாங்க. அவங்க ஆறு பேர் மீதுதான் நான் வழக்கு போட்டுள்ளேன்.
இந்தப் படத்துக்கும் அதே ஆறு பேர்தான் படம் பார்க்க வந்தாங்க.. படம் பார்ப்பதற்கு முன்பே ‘இதுக்கு வரிவிலக்கு கிடையாது’ன்னு சொல்லிட்டாங்க.. ‘ஐயா சாமிகளா.. போயிட்டு வாங்க.. அப்புறம் நான் எதுக்குப் படத்தைப் போட்டுக் காட்டணும்’னு சொல்லி அனுப்பிட்டேன்.. இதை எங்கே போய் சொல்வது என்று எனக்கும் தெரியலை..
சினிமா சங்கத்தினர் யாரும் இந்த விஷயத்தில் எனக்கு உதவவில்லை. அவர்களே இந்த விஷயத்தில் தலையிட பயப்படுகிறார்கள். வேறென்ன செய்வது..? இதை எதிர்த்தும் இந்த வாரம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன்..” என்றார் புன்சிரிப்புடன்.