லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காமராஜர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “எனக்கு இன்று மிகுந்த காய்ச்சல். பேசிப் பேசியே காய்ச்சல் வந்துவிட்டது. இருக்கட்டும்., தேர்தலுக்கு இன்னமும் 5 நாட்கள்தான் உள்ளன. எனக்கு மேடையில் பேச வாய்ப்பளித்த எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி. இதை போன்ற மேடையில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்.
திரையுலகின் மூத்த நடிகைகள் விஜயகுமாரி, ஷீலா போன்றோரை இன்று இங்கே பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விஜயகுமாரி அம்மாவின் அருகே அமர்ந்து பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யாருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு இது. எனக்கு அவர்கள் அருகே அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி.
ஏனென்றால் என்னுடைய தந்தை விஜயகுமாரி அம்மாவின் மிக பெரிய ரசிகர். இப்போது தொலைக்காட்சியில் இந்த நேரடி நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
வாரம் வாரம் வெள்ளிக்கிழமை ஒரு புது பையன், ஒரு புது பொண்ணு என்று வரிசை கட்டி வந்து கொண்டு இருக்கும் இந்த வேலையில் என்னுடைய ஆசை எல்லாம் பழம்பெரும் நடிகர், நடிகைகள் மற்றும் சாதனையாளர்களை எல்லா நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டும் என்பதுதான்.
திரைப்பட விழாக்கள், கலை நிகழ்ச்சிகளில்தான் இளம் நடிகர்களை அதிகம் பார்க்க முடிகிறது. மூத்த நடிகர்களை காண முடிவதி்லலை. அவர்களின் பாதை, முன்னேறிய தன்மை போன்றவைகள் எங்களுக்கும் தெரிய வேண்டும். அவர்கள் எங்களுக்கு வழி காட்ட வேண்டும். அவர்கள் அனுபவங்களை பெற இன்றைய தலைமுறை தவறிவிட்டது. அதற்காகத்தான் போராடுகிறோம்.
இதை நான் தேர்தல் சமயத்தில் கூறுவதால் எல்லோரும் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இதை நான் மனதில் இருந்து பேசுகிறேன். நமக்கெல்லாம் அவர்கள்தான் வழிகாட்டிகள்.
‘அவன் இவன்’ படத்தின் படபிடிப்பில் இருக்கும்போது ‘பாலாவின் ஒவ்வொரு படமும், சத்யஜித்ரே படம் போல இருக்கிறது’ என்று ஆர்யாவிடம் சொன்னேன். அதற்கு அவன் நான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை சொல்வதாக நினைத்து பேசினான். நிஜமாகவே அவனுக்கு சத்யஜித்ரே யாரென்றே தெரியவில்லை. ‘சதயஜித்ரே யார்..?’ என்று கேட்டான்.
அதே போல் அதே படத்தில் நடிகை அம்பிகாவுடன் நாங்கள் நடித்துக் கொண்டிருக்கும்போது, அம்பிகா அம்மாவை, ‘இவங்க யாரு புதுமுகமா?’ என்று கேட்டு என்னை அதிர வைத்தான்.
நடிகை அம்பிகா 10 அசினுக்கு சமம்
நான் அவனிடம், ‘வெளில போய் இப்படி பேசிராத.. கலவரமே வந்திரும்’ என்று சொல்லிவிட்டு அம்பிகா நடித்த பழைய படங்களை அவனுக்கு போட்டுக் காண்பித்தேன். அதைப் பார்த்ததும் ‘அடேயப்பா.. அம்பிகா 10 அசினுக்கு சமம்’ என்றான்.
இப்படி மூத்த நடிகர், நடிகைகளை இளம் நடிகர், நடிகைகளுக்கு யாரென்றே தெரியவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். இதற்காகத்தான் நான் அவர்களை அனைத்து விழாக்களுக்கும் அழைக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
நான் இன்னும் ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன். எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் ஆத்மா எங்களுக்குள் இப்போது இறங்கி நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட எங்களை தயாராக்கி வருகிறது..” என்றார்.
லட்சிய நடிகரின் புதல்வர் ராஜேந்திரன் பேசியபோது, “என் மகன் பங்கஜ் குமார் நடிகர் சங்கத்தில் உள்ளார். அவர் என்னிடம் வந்து பாண்டவர் அணி இந்த விழாவை சிறப்பாக எடுத்து நடத்த விரும்புவதாக கூறினார். நான் கண்டிப்பாக நடத்தலாம் என்று கூறினேன். எப்போது பாண்டவர் அணியினர் எங்களுக்கு ஆதரவாக விழாவை நடத்த முடிவெடுத்தார்களோ, அப்போதே நாங்களும் பாண்டவர் அணியில் ஒருவர் ஆகிவிட்டோம். லட்சிய நடிகரை போல் தெளிவான தமிழிலில் பேச இங்கு எவரும் இல்லை. எந்த ஒரு நடிகரும் அழகாக தமிழிலில் பேச வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் அனைவரும் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்தை பார்க்க வேண்டும்..” என்றார்.