full screen background image

ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம்

ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம்

“ஒரு வெற்றி படத்தை கண்டெடுப்பது என்பது ஒரு நல்ல கதையை தேர்ந்து எடுக்கும் நாளில் தீர்மானமாவது…” என்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர் ‘J S K Film corporation’ நிறுவனர் ஜே.சதீஷ்குமார் மற்றும் ‘Lio Vision’ உரிமையாளர் ராஜ்குமார் இருவரும்.

இவர்களின் கூட்டு முயற்சியில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இப்போது இவர்களது தயாரிப்பில் அருள்நிதி தமிழரசு நடிக்கும் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படம் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறது. இவர்களின் அடுத்த கூட்டு தயாரிப்புதான் இந்த ‘அண்டாவ காணோம்’ திரைப்படம். தேனி அருகே தேனீயை மிஞ்சும் சுறுசுறுப்பில் ‘அண்டாவ காணோம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

‘திமிரு’ படத்தின் ஹீரோயினும், நடிகர் விஷாலின் அண்ணியுமான நடிகை ஸ்ரேயா ரெட்டி இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“படத்தின் தலைப்பை போலவே கதையும் வித்தியாசமானதுதான். இந்த படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கு ஸ்ரேயாவை விட வேறு யாரும் பொருத்தமாய் இருக்க முடியாது எனலாம். இந்த கதாபாத்திரத்தின் தன்மைக்காக தன்னை அவர் மாற்றி கொண்டதே சினிமாவை அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதையும் புரிய வைக்கிறது. இந்த கதை அமைப்பும், படமாக்கும்விதமும் எனக்கு கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுத் தரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனது பட நிறுவனத்துக்கு தரமான படம் வழங்கும் நிறுவனம் என்ற பெயர் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தரமான படங்களை தயாரிப்பதோடு, புதிய திறமைகசாலிகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்” என்று பெருமையுடன் கூறுகிறார் ஜே.எஸ்.கே. நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.சதீஷ்குமார்.

தனது நிறுவனத்தின் சார்பில் தயாரான ‘தங்க மீன்கள்’ போலவே இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் ‘தரமணி’ , மற்றும் முற்றிலும் புதிய நடிகர்கள் -தொழில் நுட்ப கலைஞர்கள் உருவாக்கும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய படங்களும் தனக்கு பெரிய கௌரவத்தை பெற்று தரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ஜே.சதீஷ்குமார்

Our Score