அண்ணன் தங்கை பாசத்துக்கு அன்று ஒரு ‘பாசமலர்’ என்றால் இன்று ஒரு படம் என்று சொல்ல வருகிறது ‘கங்காரு’.
இயக்குநர் சாமி இயக்கியுள்ள இப்படத்தின் கதை நாயகன் அண்ணன் என்றால் தங்கைதான் கதை நாயகி. அப்படிப்பட்ட கதை நாயகியாக.. படத்தில் நவீன சாவித்திரியாக வாழ்ந்து இருப்பவர் ஸ்ரீபிரியங்கா.
இந்த ஸ்ரீபிரியங்காவுக்கு இப்போதே இரண்டு பெருமைகள் உள்ளன. முதல் பெருமை, இவர் கின்னஸ் சாதனை படைத்த ‘அகடம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு 123 நிமிடங்கள் ஓடும் படம். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைத் தேடி கேரளா மும்பை என்று செல்லும் காலத்தில் தமிழில் அறிமுகமாகியிருக்கும் தமிழ் பெண் ஸ்ரீபிரியங்கா என்பது இரண்டாவது பெருமை.
தமிழ் பேசும் சுத்தமான தமிழ் பெண்ணான பிரியங்கா தமிழ் சினிமாவில் எப்படி அறிமுகம்..?
“எனக்கு சினிமாவில் ஆர்வமுண்டு. நான் தமிழ்ப் பெண். எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரிதான். சினிமா பற்றி தவறான எண்ணம் இருப்பதே என்னை மாதிரியான தமிழ் நாட்டுப் பெண்கள் சினிமாவுக்கு வராததன் காரணம். இப்போது காலம் மாறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் வந்திருப்பது போலவே சினிமாவிலும் தமிழ்ப் பெண்கள் இப்போது வர ஆரம்பித்துள்ளார்கள். இதன் பின்னணியில் பெற்றோர் இருக்க வேண்டும். எனக்கு என் பெற்றோர் ஆதரவாக இருக்கிறார்கள். என்னைத் தொடர்ந்து பலரும் வருவார்கள்…” என்கிறார்.
‘கங்காரு’ பட அனுபவம் பற்றிப் பேசும் போது “இது அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.என் மீது பாசமுள்ள அண்ணன். அவரை ஊரில் எல்லாரும் ‘கங்காரு’ என்றுதான் அழைப்பார்கள். அந்த கங்காரு பாசத்துடன் தூக்கிச் சுமக்கும் தங்கைதான் நான். என் அண்ணன் ஊருக்கே அடங்காத முரட்டு கங்காரு, தன் தங்கையின் வார்த்தைக்கு மட்டும் அடங்கும். எங்களுக்குள் நடக்கும் பாசமுள்ள சம்பவங்கள்தான் கதை.எனக்கு இரண்டு பாடல்கள், காதல் டூயட்டும் உண்டு. அண்ணனுடன் பாசப் பாட்டும் உண்டு. .அண்ணன் தங்கை பாசம் என்றால் இன்றும் ஒரே உதாரணப் படம் ‘பாசமலர்’தான். அதில் சாவித்திரியம்மா பாசமுள்ள தங்கையாக வாழ்ந்திருப்பார். அவரும் பெரிய கதாநாயகிதான். இருந்தாலும் அந்த தங்கை பாத்திரம் மூலம் எல்லார் மனதிலும் அழுத்தமாக உட்கார்ந்துவிட்டார். அதே போல இந்தப் படமும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் ” என்கிறார் நம்பிக்கையுடன்.
தங்கையாக நடிக்க கதாநாயக நடிகைகள் தயங்குவார்களே, ஸ்ரீபிரியங்கா மட்டும் எப்படி ஒப்புக் கொண்டார்?
“தங்கை கேரக்டருக்கே தனி மரியாதை வாங்கித் தந்த ‘பாசமலர்’ சாவித்திரி முதல் ‘முள்ளும் மலரும்’ ஷோபா, ‘கிழக்குச் சீமையிலே’ ராதிகாவரை எத்தனையோ நடிகைகள் தங்கச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே பிரபலமான கதாநாயகிகள்தானே..?” என்று புள்ளிவிவரம் தருகிறார் ஸ்ரீபிரியங்கா,
“கங்காரு படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். என் கேரக்டரும் பிடிக்கும். ஒவ்வொரு கதாநாயகிக்கும் இப்படிப்பட்ட தங்கையாக நடிக்க ஆசை வரும். ” என்கிறார். கங்காரு படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவே ஒரு குடும்பம் போல இருந்ததை மகிழ்வுடன் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தவர், படத்தை பார்க்க நம்மைப் போலவே ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறுகிறார் பிரியங்கா.