full screen background image

ஒளிப்பதிவாளர் சங்கத்தில் 40 லட்சம் ஊழல் – பெப்சி தலைவர் சிவா மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பரபரப்பு புகார்..!

ஒளிப்பதிவாளர் சங்கத்தில் 40 லட்சம் ஊழல் – பெப்சி தலைவர் சிவா மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பரபரப்பு புகார்..!

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் 40 லட்சம் ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் இந்தச் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவரான பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் சினிமா துறையின் தலைமை அமைப்பான பெப்சியின் கீழ் அமைந்திருக்கும் பல்வேறு சங்கங்களிலும் தற்போது பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பல சங்கங்களில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக அதன் உறுப்பினர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் இந்தச் சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. கடந்த 8 ஆண்டுகளாக அந்தச் சங்கத்தில் தேர்தலே நடத்தப்படாமல் இருந்து இந்தாண்டு துவக்கத்தில்தான் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடந்து முடிந்தது.

fefsi siva-3

முந்தைய நிர்வாகக் குழுவில் என்.கே.விஸ்வநாதன் தலைவராகவும், பெப்சி அமைப்பின் தற்போதைய தலைவரான ஜி.சிவா பொதுச் செயலாளராகவும், கே.எஸ்.செல்வராஜ் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தனர்.

இந்தத் தேர்தலில் சென்ற முறை நிர்வாகிகளாக பதவி வகித்தவர்கள் அனைவருமே தோற்றுப் போய், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.

சென்ற தேர்தலின்போது முந்தைய நிர்வாகம் சங்கப் பணத்தில் கையாடல் செய்துள்ளதாகவும், வருடாவருடம் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சிகா அவார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நிறைய ஊழல்கள் நடைபெற்றதாகவும் உறுப்பினர்களால் புகார் கூறப்பட்டது.

இந்த நிலைமையில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகத்தினர் இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற சிகா அவார்டு வழங்கும் நிகழ்ச்சியின் கணக்கு வழக்குகளை தணிக்கையாளர் உதவியுடன் ஆராய்ந்ததில், கணக்கு வழக்குகளில் பல குளறுபடிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

40 லட்சம் ரூபாயை செலவு செய்த தொகைக்கான வவுச்சர்களும், பில்களும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தது. இதனை முந்தைய நிர்வாகிகளுக்கு தெரிவித்து அந்தக் கண்ககுகளை சமர்ப்பிக்கும்படி தெரிவித்தும், பல முறை வாய்ப்பளித்தும் அவர்கள் இதுவரையிலும் சமர்ப்பிக்கவில்லையாம்.

மேலும் இந்தக் கணக்கு வழக்குகளை முறைப்படி தணிக்கை செய்து முடித்து வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால், இந்த சிகா அவார்டு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய சன் டிவி வருமான வரியாக பிடித்தம் செய்த தொகையான 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திரும்பவும் வாங்க முடியாமல் இருக்கிறதாம்.

இதோடு சங்கத்திற்காக சாலிகிராமத்தில் இடம் வாங்க முடிவு செய்து, உண்மையான நில மதிப்பிற்கும் மேலாக 1 கோடியே 25 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் கொடுத்துவிட்டு இன்னமும் 80 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய சூழலை சங்கத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறாராம் ஜி.சிவா தற்போது இந்தப் பிரச்சினையும் பூதாகரமாக எழுந்துள்ளதாம்.

அதோடு 8 ஆண்டுகளாக கணக்குகளை தணிக்கை செய்து சமர்ப்பிக்காத காரணத்தினால் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் 80-ஜி சலுகையையும் வருமான வரித்துறையிடமிருந்து பெற முடியாமல் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 

இதனால் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஒளிப்பதிவாளர் பி.சிஸ்ரீராம் அடங்கிய நிர்வாகக் குழுவினர் முந்தைய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து முறைப்படி விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மனுவொன்றை அளித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். ஒரு முறை “எதிர்காலத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை எழுமென்றால் அது அவர்களின் சங்க நிர்வாகிகளால்தான் நடக்கும்…” என்று வருத்தப்பட்டு சொன்னார். அது இப்போது நிஜமாகியேவி்ட்டது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் அளித்த புகார் மனு :

sica-scam-complaint-letter-1 

sica-scam-complaint-letter-2

sica-scam-complaint-letter-3

sica-scam-complaint-letter-4

sica-scam-complaint-letter-5

Our Score