நடிகர் சங்கத்தின் செயற்குழு நேற்று முன்தினம் இரவு இரண்டாவது தடவையாக அவசரமாக கூடியது. தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடந்துள்ளது.
கூட்டத்துக்கு தலைவர் நாசர் தலைமை தாங்கினார். விஷால், கார்த்தி, பொன் வண்ணன், கருணாஸ் முன்னிலை வகித்தனர். ராஜேஷ், பிரசன்னா, ஜூனியர் பாலையா, பசுபதி, நந்தா, உதயா, பூச்சி முருகன், டி.பி.கஜேந்திரன், ராம்கி, கோவை சரளா, குட்டி பத்மினி, நளினி, சோனியா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னாவின் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. பின்பு உறுப்பினர்கள் கேட்டிருக்கும் மருத்துவ உதவி கடிதங்களை செயற்குழுவில் முன் வைத்து அதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்று முடிவாகியதாம்.
பாலாஜி மருத்துவக் கல்லூரியின் வேந்தரான ஜெகத்ரட்சகன், இந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராஜேந்திரன் – இருவரும் நடிகர் சங்கத்தில் இருக்கும் நலிந்த உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக முன் வந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கு விவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. நடிகர் சூர்யா ஏற்கனவே சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். அந்த தொகையை வைத்து ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது
பின்னர் நடிகர் சங்கத்தின் புதிய அறங்காவலர்களாக எஸ்.வி.சேகர், ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகிய மேலும் 5 பேரை நியமனம் செய்து செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஏற்கெனவே தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இப்போது இவர்களையும் சேர்த்து நடிகர் சங்க அறக்கட்டளைக்கு 9 பேர் அறங்காவலர்களாக தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியலை ஆய்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் குழுக்களை அனுப்புவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.