full screen background image

‘சூரரைப் போற்று’ – சினிமா விமர்சனம்

‘சூரரைப் போற்று’ – சினிமா விமர்சனம்

இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2-D எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், சிக்யா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை, இயக்கம் – சுதா கொங்காரா, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – நிகேஷ் பொம்மி, கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, திரைக்கதை – ஷாலினி உஷாதேவி, சுதா கொங்காரா, திரைக்கதை உதவி – ஆலீப் சூர்டி, கணேஷா, வசனம் – விஜயகுமார், மதுரை வசனங்கள் – பி.விருமாண்டி, உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, நடன இயக்கம் – ஷோபி, சேகர், சண்டை இயக்கம் – கிரேக் பாவல், விக்கி, டால்பி ஆட்மாஸ் மிக்ஸ் – ஜி.சூரன், ஒலி வடிவமைப்பு – சவுண்ட் பேக்டர் விஷ்ணு கோவிந்த், சங்கர், சிறப்பு ஒலி அமைப்பு – அருண் சீனு, ஒப்பனை – எஸ்.சையத் மாலிக், உடைகள் – அருண், புகைப்படங்கள் – சி.ஹெச்.பாலு, விஷூவல் எபெக்ட்ஸ் – சங்கத்தமிழன் – விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா – பாடல் வீடியோ – ஆண்டனி ஜெரோம், கலரிஸ்ட் – சுரேஷ் ரவி, கிராபிக்ஸ் சூப்பர்வைஸர் – விஸ்வாஸ், சாவனூர், வி.எஃப்.எக்ஸ் ஸ்டூடியோஸ் – Silver Cloud Studios, Knack Studios, நிர்வாகத் தயாரிப்பாளர்கள் – அசின் ஜெயின், பவித்ரா, தலைமை தயாரிப்பு நிர்வாகம் – பி.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், குணீட் மோங்கா, ஆலீப் சுர்டி, தயாரிப்பு – சூர்யா, தயாரிப்பு நிறுவனங்கள் – 2-D எண்ட்டெர்டெயின்மெண்ட் சிக்யா எண்ட்டெர்டெயின்மெண்ட்.

இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை நடத்திய ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை துவக்கிய ஓய்வு பெற்ற விமானப் படையின் கேப்டனான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

உண்மையில் இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதமே தயாராகி மார்ச் மாத வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கிவிட.. இந்தியாவில் அனைத்துமே லாக் டவுன் செய்யப்பட்டது. அந்த லாக்டவுனில் சிக்கி வெளிவராமல் முடங்கிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

எனவே வேறு வழியில்லாமல் இந்தப் படம் ‘அமேஸான் பிரைம்’ என்னும் ஓ.டி,டி. தளத்தில் நேற்று வெளியானது.

ஒரு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படத்தில் நடிகர் நடிக்கும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியான எதிர்பார்ப்புகளை மாஸ் சண்டைக் காட்சிகளை வைத்து பூர்த்தி செய்தால் படத்தின் எதார்த்தம் கெட்டுவிடும். வரலாற்றை அப்படியே எடுத்தால் படம் டாக்குமென்ட்ரி ஆகிவிடும். மிகக் காத்திரமாக திரைக்கதை அமைத்தால் மட்டுமே இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும்.

இந்த சூரரைப் போற்று’ படத்தில் அப்படியான மாஸ் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

அடித்தட்டு நிலையில் வாழும் மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தானான நெடுமாறன் ராஜாங்கம் என்னும் சூர்யா எப்படி சுற்றமும், சமூகமும், நாடே போற்றும்படியான ஒரு விமான நிறுவனத்தை உருவாக்கி வெற்றி கண்டார் என்பதுதான் கதை.

சோழவந்தானை சேர்ந்த நெடுமாறன் என்னும் சூர்யா ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் மகன்.

சோழவந்தானில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்ததினால் சூர்யாவின் அம்மாவான ஊர்வசி, இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருந்தபோது சரியான சமயத்தில் மருத்துவமனைக்கு போக முடியாமல் போகிறது.

இதனால் வயிற்றில் இருந்த சிசு இறந்துவிட.. தனக்குத் தங்கச்சி வரப் போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த சூர்யாவுக்கு இளம் வயதிலேயே இந்தச் சம்பவம் தீராத சோகத்தையும், வடுவையும் கொடுத்துவிட்டது.

இதுவே சூர்யாவுக்குள் ஒரு போராட்டக் குணத்தை உருவாக்கிவிட்டது. தன் ஊரான சோழவந்தானில் ரயில்கள் நிற்காமல் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரப்படும் சூர்யா இதற்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகிறார்.

இவரது தந்தை எதையும் அறவழியில் போராடி பெற வேண்டும் என்ற கொள்கையுடையவர். அஹிம்சையும், தீவிரவாதமும் ஒன்று சேராது என்பதுபோல் அந்த வீட்டில் அப்பாவும், மகனும் இணை சேராமலேயே இருக்கிறார்கள். அம்மா ஊர்வசி வழமையான அம்மாவை போல இரண்டு பக்கமும் பேசி சமாளித்து வருகிறார்.

தந்தையின் வற்புறுத்தல், தாயின் அறிவுரைக்காக விமானப் படையில் சேர்கிறார் சூர்யா. ஆனாலும் அங்கே அவருக்குள் ஒரு கனவு முளைக்கிறது. தன் ஊருக்கு மிக விரைவாகப் போக விமானப் போக்குவரத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணுகிறார்.

இதனால் விமானப் போக்குவரத்து பற்றி அனைத்துவித தகவல்களையும் தேடியெடுக்கிறார். விமானக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால்தான் சாமான்ய மக்களால். அதில் பயணிக்க முடியவில்லை என்பதைக் கண்டறிகிறார். இதனால் சாதாரண மக்களும் பயன் பெறும் வகையில் மலிவு விலை கட்டணத்தில் விமான சேவையைத் துவக்க நினைக்கிறார்.

இதற்காக ஊரில் இருக்கும் நிலத்தையெல்லாம் விற்று அதை முதலீடாகப் போட்டுவிட்டு.. ஊருக்கு வெளியே ஒரு பொட்டல் காட்டில் கூடாரம் கட்டி அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய விமானக் கம்பெனி பிராஜெக்ட்டுக்கு முதலீடு செய்ய விரும்புபவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் சூர்யா.

இந்த நேரத்தில் அவருக்குத் திருமண ஏற்பாடும் நடக்கிறது. எப்போதும் மாப்பிள்ளைதான் பெண் வீட்டுக்கு வந்து பார்ப்பது வழக்கம். அது போல் இல்லாமல் மாப்பிள்ளையை பார்க்க தனது குடும்பத்தையே அழைத்துக் கொண்டு வருகிறார் நாயகியான அபர்ணா பாலமுரளி.

அங்கே அவர்கள் இருவருக்கிடையில் ஏற்படும் உரசல்களினால் அபர்ணாவை சூர்யாவுக்குப் பிடித்தாலும், அபர்ணாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இருவரும் அப்போதைக்கு பிரிந்தாலும், மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் தனது கனவுத் திட்டம் நிறைவேறப் போகும் சமயத்தில் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு அபர்ணாவைத் தேடி வருகிறார் சூர்யா.

திருமணம் கை கூடிய நிலையில், அவரது ஏர்வேஸ் கம்பெனியின் விமானம் விண்ணில் பறக்கவிருக்கும் சூழலில்.. அனைத்துமே ஒரே நாளில் தலைகீழாக மாறுகிறது.

ஏற்கனவே, அந்தத் தொழிலில் இருக்கும் முதலாளிகள் புதிய தோழரை வரவேற்கவில்லை. துவக்கத்திலேயே அழிக்க நினைக்கிறார்கள். இதற்காக அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து சூர்யாவுக்கு முட்டுக் கட்டை போடுகிறார்கள். அவரது நிறுவனத்தின் திட்டங்களைச் சீர்குலைக்கிறார்கள்.

இதனை சூர்யா எப்படி சமாளித்து தன்னுடைய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிலை நாட்டினார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான Simply Fly – A Deccon odyssey’ என்ற புத்தகம் மிக, மிக விறுவிறுப்பானது.

கேப்டன் கோபிநாத் சைனிக் பள்ளியில் படித்தவர். பின்பு, தேசிய ராணுவ அகாடெமியில் படித்து, கடைசியான பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றவர். ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தன் சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்.. ஒரு பொறியில் முதலில்… ஹெலிகாப்டரை வாடகைக்கு விடும் நிறுவனத்தைத் துவங்கி, பிறகு குறைந்த கட்டண அளவிலான விமான நிறுவனமான ஏர் டெக்கானை துவக்கியவர்.

பொதுவாக ஒரு சுயசரிதை கதைகள் என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும் அதனை அப்படியே சினிமாவாக்கிவிட முடியாது. சினிமாவுக்கென்றே இருக்கும் சில இலக்கணங்களோடுதான் அதனைப் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அது திரையில் ஈர்ப்பாக இருக்காது.

ஆனால், இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தில் அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து அதைத் திரைக் கதையாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.

சினிமாவில் எது அனைவரும் விரும்பப்படுமோ அந்தக் கதையை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

‘டெக்கான் ஏர்லைன் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் சூரியா நடிக்கிறார்’ என்ற செய்தி வெளிவந்தபோதே சூர்யா மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பிற்கு துளியும் வஞ்சனை செய்யாமல் அசத்தி இருக்கிறார் சூர்யா.

சமீப ஆண்டுகளாக தன் படங்களில் ஒரேவிதமான மாடுலேசன் அவரது பாடிலாங்வேஜில் தெரிந்து வருகிறது என்ற விமர்சனத்தை இப்படத்தில் அடித்து நொறுக்கி இருக்கிறார்.

புத்தம் புதிய நடிப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா.  அரிவாளைத் தூக்கிக் கொண்டு வீர வசனம் பேசவில்லை.. காக்கி உடையணிந்து பன்ச் டயலாக்குகளை பேசவில்லை. துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ஸ்டைல் காட்டவில்லை.

ஆனால், சோழவந்தான் நெடுமாறன் ராஜாங்கமாக வாழ்ந்திருக்கிறார். தனது லட்சியத்திற்காக தன்னைத் தேடி வருபவளைக்கூட உதாசீனப்படுத்தும் அளவுக்கு அவரது கேரக்டர் ஸ்கெட்ச் படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்கெட்ச்சைவிட்டு கடைசிவரையிலும் சூர்யா வெளியில் வரவேயில்லை.

அதேபோல் படம் நெடுகிலும் காதல் காட்சிகளைத் தவிர.. பிறவைகளில் ஒரு சின்ன சிரிப்பைக்கூட சூர்யா உதிர்க்கவில்லை. ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம் என்று திரைக்கதைக்காக பிரேம் டூ பிரேம் ஓடிக் கொண்டேயிருக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில்கூட அந்தக் காட்சியை நம் மனதில் ஆழ்த்துகிறார். மிகத் தேர்ந்த நடிப்பு. வாழ்த்துகள்.

சூர்யாவிற்கு அடுத்து…. ஏன் சில இடங்களில் சூர்யாவையே தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் அபர்ணா பாலமுரளி. தான் அறிமுகமான முதல் காட்சியில் இருந்து கையில் குழந்தையை வைத்துக் கொண்டு விமானத்தில் அருகில் நின்று கொண்டு தனது மாமியாரை வரவேற்கும்வரையிலும் ஒரு புத்தம் புதிய அபர்ணாவை நமக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சுதா.

படபடவென்ற கேரக்டரில் அறிமுகமாகி.. காதல் என்ற உணர்வுகூட இல்லாமல் நேரடியாக திருமணத்திற்கு பேரம் பேசும் தில்லும்.. சூர்யாவின் நிலையற்ற பேச்சினால் வெறுப்பாகி “குட் பை” என்று சொல்லிவிட்டுப் போவதும் ரசிக்கத்தக்க நடிப்பு.

காதல் காட்சிகளில் அபர்ணா ஆடியிருக்கும் ஆட்டமும், சில முக பாவனைகளும் இந்தப் பெண்ணிடம் இவ்வளவு நடிப்பாற்றல் இருக்கா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. வாழ்த்துகள்..!

படத்தில் எந்தக் கேரக்டரும் தேவையில்லாமல் இல்லை. அனைவருக்கும் உரிய இடத்தையும் கொடுத்து, கேரக்டருக்கான ஸ்கெட்ச்சையும் கொடுத்து சிறப்பாகவும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுதா.

ஊர்வசி தனது டிரேட் மார்க் நடிப்பை அட்சரப் பிசகாமல் காட்டியிருக்கிறார். சவ அடக்கம் நடந்த பின்பு வந்து சேரும் சூர்யாவை அடித்துவிட்டு “இப்போ ஏண்டா வந்த..?” என்று கேட்டு கதறும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார் ஊர்வசி. ஊர்வசியின் நடிப்பைப் பாராட்டுவதை நிறுத்தவே முடியாது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

வில்லனாக வரும் பரேஷ் ராவல் தனது பணக்காரத் திமிரைக் காட்டியிருக்கிறார். முதலாளியும், தொழிலாளியும் ஒரே பாத்ரூமை பயன்படுத்தக் கூடாது என்பதை சொல்லும்போதே அவரது கேரக்டர் ஸ்கெட்ச் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இப்படி ஒருவரின் குண நலன்களை அவரது சில செய்கைகளின் மூலமாகவே காட்டி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சுதா.

நண்பர்களாக விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் படத்தின் இறுதிவரையிலும் சூர்யாவுடன் காட்சியளிக்கிறார்கள். வெள்ளந்தி உறவினர்களான  காளி வெங்கட், மற்றும் கருணாஸ் இருவரும் நெகிழ வைக்கிறார்கள். அப்பாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராமுவின் பண்பட்ட நடிப்பும் தென்படுகிறது.

படத்தில் சும்மாவே இருக்கும் எந்தவொரு அட்மாஸ்பியர் கேரக்டரும் இந்தப் படத்தில் இல்லை என்பது பாராட்டுக்குரியது.

படத்தின் ஒளிப்பதிவுதான் தொழில் நுட்பத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. சோழவந்தான் சுற்று வட்டாரத்தை இள மாலைப் பொழுதிலேயே படமாக்கியிருப்பதால் மஞ்சள் சூரியனே படம் நெடுகிலும் நம்முடன் பயணப்படுகிறார்.

மேக்கப்பே இல்லாத சூர்யா.. டல் மேக்கப்பில் அபர்ணா என்று இருவரையும் சுமார் மூஞ்சி குமார்களாக்கி நடிக்க வைத்திருக்கிறார் சுதா. இதனால் படம் பார்க்கும் யாருக்கும் அது சினிமா என்பதோ.. அவர்கள் நடிகர், நடிகை என்றோ தெரியாத அளவுக்கு ஒரு எண்ணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சுதா. பாராட்டுக்கள்.

ஜீ.வி.பிரகாஷுன் பின்னணி இசையும், அவ்வப்போது வந்து செல்லும் பாடல்களும் அந்தக் கணத்தின் இறுக்கத்தைத் தளர்த்தி நம்மை ரிலாக்ஸ் செய்திருக்கின்றனர்.

படத்தின் இன்னொரு பலம் வசனங்கள்தான். அவைகள் எல்லாமே நறுக்குத் தெறித்தாற் போன்று செம ஷார்ப்பாக இருந்தது.. கணவன் மனைவி இடையே உள்ள சிறு சிறு ஈகோ, அவர்களுக்குள் உள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை வசனங்களின் துணையுடன் மிகச் சிறப்பாக படமாக்கியுள்ளார் சுதா கொங்கரா.

படத்தில் விஜய் மல்லையா கேரக்டரையும் இணைத்திருக்கிறார்கள். அதாவது, அவரின் கிங்பிஷர் கம்பெனி, டெக்கான் ஏர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதுபோல காட்சிகளை அமைத்துள்ளார்கள்.

ஐரோப்பா போன்ற நிறுவனங்களின் குறைந்த விலை சேவையால் ஈர்க்கப்பட்டு 2003-ம் ஆண்டு இந்தியாவின் முதல் குறைந்த விலை வானூர்தி சேவையான ஏர் டெக்கானை தோற்றுவித்தார் கோபிநாத். 2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியிட்ட ஏர் டெக்கான் அதன் பிறகு நட்டத்தை சந்தித்தது.

அதைத் தொடர்ந்த வருடம் விஐய் மல்லையாவின நிறுவனமான யுனைடெட் பிவரேஜஸ் குழுமம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை வாங்கியது. அந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் இந்தியாவில் 69 மாநகர்களை இணைத்துக் கொண்டிருந்தது. பின்பு விஜய் மல்லையா ஏர் டெக்கான் மற்றும் கிங்ஃபிஷர் நிறுவனங்களை ஒன்றாக இணைத்தார்,

இதன் பின்பு தொடர்ச்சியான நஷ்டத்தின் காரணமாக கோபிநாத் தன் பங்குகளின் பெரும் பகுதியை மல்லையாவுக்கே விற்றுவிட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்து விலகிவிட்டார். இதில் சுவாரஸ்யம் இல்லை என்பதால் இதையெல்லாம் விட்டுவிட்டார் இயக்குநர் சுதா.

ஒரு சாதாரணன் சரித்தரம் படைக்கும் வழக்கமான மோட்டிவேசன் கதை மாதிரி தெரிந்தாலும் படத்தில் பல எதார்த்தங்களை பட்’, ‘பட்’ என போட்டு உடைத்துள்ளார் இயக்குநர்.

ஒரு எளியவன் வலியவன் முன் போட்டியிட்டாலோ.. வாழ நினைத்தாலோ… அதற்கு பதிலடியாக அதிகாரத்தின் துணை கொண்டு வலியவன் என்னவெல்லாம் செய்வான் என்ற உண்மையை இந்தப் படத்தில் மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ஆழமான விசயங்கள் நீர்த்துப் போகக் கூடாது என்பதற்காக சில கமர்சியல் விசயங்களை சேர்ப்பது இயல்புதான். இதனால், சில இடங்களில், சில காட்சிகளில்  சின்ன சின்ன தொய்வு ஏற்பட்டிருந்தாலும் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தமிழ்ச் சினிமாவில் ஒரு முக்கியமான படம்.

காரணம் இப்படம் படம் பார்ப்பவர்களிடத்தில் வாழ்க்கை மீதான ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

ந்த விதையைத் தூவிய தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், துணை நின்ற தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது நன்றிகள்.. பாராட்டுக்கள்..!

Our Score