திரிலோக் புரொடக்ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம், தமிழில் முதல்முறையாக மிக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம்தான் ‘சூறையாடல்’.
இப்படத்தின் தயாரிப்பாளர் திரிலோக் சுரேந்திரம் பிள்ளை பந்தலம் ஏற்கனவே மலையாளத்தில் சுரேஷ்கோபி, பாலா, ‘காதல்’ சந்தியா நடித்த ‘சகஸ்ரம்’ என்ற படத்தை தயாரித்தவர். இவர் தமிழில் தயாரித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது.
இப்படத்தில் ஹீரோவாக ஸ்ரீபாலாஜி அறிமுகமாகிறார். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற ஸ்ரீபாலாஜிக்கு இது முதல் படம். அவருக்கு ஜோடியாக மலையாள வரவான காயத்ரி மற்றும் ‘மதராசப்பட்டணம்’, ‘நர்த்தகி’, ‘பிறவி’, ‘சொகுசு பேருந்து’, ‘யாழ்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த லீமா நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயன், ஜாக் ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனத்தை தினேஷ் பல்லத் எழுத, படத்துக்கு அகிலேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை மோகன்ராஜ், நாகமானஸி எழுத, மிதுனேஷ்வர் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீஜித் எடிட்டிங் செய்ய, ஸ்டண்டை ஆக்ஷன் பிரகாஷ் அமைத்திருக்கிறார். ஜாய் மதி நடனம் அமைத்திருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் மனிதனுடைய எல்லா குணாதிசயங்களுக்கும் காதல் தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் அதற்கும்கூட ஒரு எல்லைக்கோடு உண்டு. அந்த எல்லைக்கோட்டை தாண்டும்போது அது மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கி விடுகிறது. அந்த சிக்கல்களால் ஏற்படும் விளைவுகளைத்தான் காமெடி, செண்டிமென்ட், சஸ்பென்ஸ் கலந்த கிராமத்து கமர்ஷியல் படமாக விறுவிறுப்புடன் டைரக்டர் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தாமரைகண்ணன்.
இவர் 18 வருடங்களாக மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ஐ.வி சசி மற்றும் சாஜன் ஆகியோரிடம் இணை, துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
அதுபோக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகாராணி’, ‘அவள்’ ஆகிய மெகா ஹிட் தொடர்களின் இயக்குனரும் இவரே. இவர் பெரிய திரையில் இயக்குனராக அறிமுகமாகும் படம்தான் இந்த ‘சூறையாடல்’.
கம்பம், தேனி, குமுளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தைப் பொருத்தவரை படப்பிடிப்பு நடந்த இந்தப் பகுதிகள்தான் ஹை-லைட்டானவை என்கிறார் டைரக்டர் தாமரை கண்ணன்.
“பாரதிராஜாவில் தொடங்கி பல டைரக்டர்கள் கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கம்பத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆட்டுப்பாறை என்ற கிராமத்தில் யாருமே இதுவரை படப்பிடிப்பு நடத்தவில்லை. அந்த கிராமத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘சூறையாடல்’தான். அதனால்தானோ என்னவோ இந்தப் படத்தின் படப்பிடிப்பையே அந்த கிராமத்து மக்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அவர்கள் முழுமையான ஒத்துழைப்பால் தான் அங்கு படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை நடத்தினோம்” என்றார்.