எதிர்பாராத ஒரு கூட்டணி அமைந்து அதன் மூலம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது தமிழ் திரை உலகில் ஏராளம். கடந்த காலத்தில் இதற்கு சான்றாக பல படங்கள் அமைந்து உள்ளன.
பாலிவுட்டின் திரைக்கதை எழுத்தாளரும், தமிழில் வெளிவந்த ‘டேவிட்’ மற்றும் ஹிந்தியில் வெளிவந்து பேராதரவு பெற்ற ‘ஷைத்தான்’, அமிதாப்பச்சன் நடித்த ‘வாசிர்’ படங்களை இயக்கி இளைய இயக்குநர்களில் கவனிக்கத்தக்கவர் என்று இந்திய திரை உலகம் போற்றும் புகழுடையவர் இயக்குநர் பெஜோய் நம்பியார்.
சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் மொழிகளில் தயாரிக்கும் சோலோ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பெஜோய் நம்பியார்.
இந்தப் படத்தில் கேரளாவின் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். மேலும் தீப்தி சதி, சாய் தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ், நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், சாய் தம்கன்ஹர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன், இசை – கோவிந்த் மேனன், சித்தார்த் மேனன், தயாரிப்பு – பெஜோய் நம்பியார், ஆபிரஹாம் மேத்யூ, எழுத்து, இயக்கம் – பெஜோய் நம்பியார்.
இந்த படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
இந்தப் படத்தின் அறிமுக பத்திரிக்கையளர் சந்திப்பு, இன்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
துல்கர் சல்மானின் பிறந்த நாளான இன்று நடந்த இந்த சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
படம் குறித்து பெஜாய் நம்பியார் பேசுகையில், “துல்கர் சல்மான் போன்ற அபரிமிதமான நடிப்பு திறன் கொண்ட ஒரு நடிகருடன் பணிபுரிய ஆவலோடு இருந்தேன். இக்கதையை அவருக்கு கூறியபொழுது, அவரை அது மிகவும் கவர்ந்தது. இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். இப்போது படப்பிடிப்பு முடிந்து, post productions பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த ‘சோலோ’ திரைப்படம்தான் என் முதல் மற்றும் உண்மையான தென்னிந்திய படம். நான் ஏற்கெனவே இயக்கிய ‘டேவிட்’ திரைப்படம் பாதி டப் செய்யப்பட்ட படம். ‘சோலோ’வை தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக இது டப்பிங் படம் கிடையாது..” என்றார்.
அடுத்து பேசிய படத்தின் ஹீரோவான துல்கர் சல்மான், “தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குநர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நானும் நல்ல படங்களை மட்டுமே கொடுக்க முனைகிறேன்.
இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை எடுப்பது 8 படங்களில் நடிப்பதற்கு சமம். என் மூன்று தமிழ்ப் படங்களின் விழாக்களிலும் மணிரத்னம் சார் இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. இதனை நான் மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்…” என்றார்.
“இரண்டு மொழிகளிலும் சேர்த்து இந்த படத்தில் மொத்தம் 30 பாடல்கள். நாங்கள் 1 பாடல் எடுக்கவே ரொம்ப கஷ்டப்படுகிறோம். ஆனால் இவர்கள் இவ்வளவு தைரியமாக கடும் உழைப்பில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன்.
“இப்போது இங்கே பிஜாய் நம்பியார் காட்டியதுதான் ஒரு சினிமாவின் உண்மையான முன்னோட்டம். இந்த முன்னோட்டம் அருமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது…” என்றார் இயக்குநர் மணிரத்னம்.