full screen background image

ஸ்கெட்ச் – சினிமா விமர்சனம்

ஸ்கெட்ச் – சினிமா விமர்சனம்

மூவிங் பிரேம் பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக தமன்னா நடித்துள்ளார்.  மற்றும் சூரி,  ஆர்.கே.சுரேஷ்,  அருள்தாஸ்,  மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி,  ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த்,  பாபு ராஜ்,  வினோத்,  வேல ராமமூர்த்தி,  சாரிகா  ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் -கபிலன்,  விவேக்,  விஜய்சந்தர், கலை – மாயா பாண்டியன், படத் தொகுப்பு – ரூபன், நடனம் -பிருந்தா,  தஸ்தாகீர், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன், தயாரிப்பு நிர்வாகம்  -V.ராமச்சந்திரன், தயாரிப்பு – மூவிங் பிரேம், கதை,  திரைக்கதை,  வசனம், இயக்கம் -விஜய்சந்தர்.

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தரின் இரண்டாவது திரைப்படம் இது.

வாகனங்கள் வாங்குவதற்கு கடன் கொடுக்கும் சேட்டிடம் வேலை பார்த்து, அவர் சொல்லும் வேலையை எல்லாம் ஸ்கெட்ச் போட்டு முடித்துக் கொடுக்கும் ஸ்கெட்ச் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘ஸ்கெட்ச்’ திரைப்படம்.

வடசென்னையில் பிரபலமான பைனான்ஸியர் சேட்டு என்னும் ஹரீஷ் பெராடி. வாகனங்கள் வாங்க பலருக்கும் கடன் கொடுப்பவர். மாதத் தவணை கட்டவில்லையெனில் சொல்லாமல், கொள்ளாமல் வண்டியை அபேஸ் செய்து கொண்டு வந்துவிடுவார். இதற்காக ஒரு தனி டீமையே ‘ஸ்கெட்ச்’ என்னும் விக்ரமின் தலைமையில் வைத்திருக்கிறார்.

அப்படியொரு அஸைண்மெண்ட்டுக்காக மகளிர் கல்லூரிக்குள் புகுந்து பிரியங்காவின் ஸ்கூட்டியை தூக்குகிறார் விக்ரம். இப்போது நண்பிக்காக இதைத் தட்டிக் கேட்கிறார் ஹீரோயின் தமன்னா. தமன்னாவின் இந்தக் குணம் விக்ரமுக்கு மிகவும் பிடித்துப் போக அவரைக் காதலிக்கத் துவங்குகிறார்.

வட சென்னையின் மிகப் பெரிய தாதாவான பாபுராஜின் தந்தைக்கும், ஹரீஷ் பெராடியின் தந்தைக்கும் முன்பேயே கொடுக்கல் வாங்கல் தகராறு. இதில் ஹரீஷின் தந்தையை பாபுராஜ் படுகொலை செய்திருக்கிறார்.

இந்த கோப உணர்ச்சி ஹரீஷின் மனதுக்குள் ஆறாத வன்மமாக இருந்து கொண்டேயிருக்கிறது. சமயம் பார்த்து அது வெளிப்பட பாபுராஜ் உயிராக நினைத்து வைத்திருக்கும் பிளைமவுத் காரை தூக்கும்படி விக்ரமிடம் சொல்கிறார் ஹரீஷ்.

தன்னுடைய முதலாளிக்காக தன் உயிரை பணயம் வைத்து அந்தக் காரை கடத்தி வருகிறார் விக்ரம். ஆனால் அதே காரிலேயே போதை பொருளை வைத்து கடத்த முனைகிறார் பாபுராஜ். போதை பொருளும், காரும் போலீஸில் பிடிபட.. இது பாபுராஜுக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்துகிறது.

பழிக்குப் பழி வாங்க தன்னை ஏமாற்றிய விக்ரம் மற்றும் அவரது நண்பர்களுக்கெதிராக ஸ்கெட்ச் போடுகிறார் பாபுராஜ். அந்த ஸ்கெட்ச்சை விக்ரம் எப்படி எதிர்கொள்கிறார்..? தப்பித்தாரா.. இல்லையா..? என்பதுதான் இடைவேளைக்கு பின்னான கதை.

விக்ரமுக்கு இது பழகிப் போன கதை. ரசிகர்களுக்கும்தான்.. எப்படியும் கதையையும், திரைக்கதையையும் கேட்டுவிட்டுத்தான் விக்ரம் இதில் ஒப்புக் கொண்டிருப்பார் என்று நம்புகிறோம்.

ஆனால், கிளைமாக்ஸில் வைத்திருக்கும் ஒரு டிவிஸ்ட் இந்தப் படத்தின் தன்மையையே மாற்றி கை தட்ட வைத்திருக்கிறது. இதைத்தான் படக் குழுவினருக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகக் கருத வேண்டும்.

தாடியில்லாத விக்ரம் மேலும் வயதானவராகத்தான் தெரிவார். ஆகவே தாடி வைத்த விக்ரம்தான் இனிமேல் எல்லா படங்களிலும் தோன்றுவார் என்று நம்பலாம். உள்ளத்தை உருக்கும் காட்சிகளோ, சோகத்தை அப்பும் நடிப்போ இதில் விக்ரமுக்கு இல்லை.

ஆனால் ‘சாமி’, ‘தூள்’ போன்ற படங்களில் இருந்த அதே விக்ரம்தான் மீண்டும் இதில் புதிய கேரக்டரில் வந்திருக்கிறார். சில, பல ஸ்டைலிஷான ஆக்சன்கள்.. முக பாவனைகள்.. ஒரு மெகா ஹீரோவுக்கேற்ற பில்டப்புடன் அவர் வரும் சில காட்சிகள் என்று விக்ரம் ரசிகர்களுக்கு பிடித்தாற்போன்று நடித்திருக்கிறார். அதற்காக ‘ஸ்கெட்ச் போடுவது எப்படி’ என்பதையே பல முறை சொல்லிக் காட்டுவது அலுப்பைக் கூட்டுகிறது.

சில காட்சிகளில் விக்ரமை தூக்கிச் சாப்பிடுவதுபோல நடித்திருக்கிறார் தமன்னா. பால் வடியும் முகம். அழுத்தமான முக பாவனைகளுடன் தனது நடிப்பைக் காண்பித்திருக்கும் தமன்னா ‘நாளைக்கு ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்து என்னைக் கூட்டிட்டுப் போ’ என்று கெத்தாக சொல்லிவிட்டு போகும் காட்சியில், தியேட்டரில் கை தட்டலையே வரவழைத்திருக்கிறார்.

சேட்டாக நடித்திருக்கும் ஹரீஸ் பெராடியின் வித்தியாசமான நடிப்பும் கவர்கிறது. ஸ்ரீமனின் கர்ப்பிணி மனைவியாக நடித்தவரின் அந்த ஒரு நிமிட கதறல் பக்கென்று நெஞ்சை அடைக்கிறது. அதற்காக ஸ்ரீமனை சிரிப்பதுபோல படுக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் இயக்குநரே..?

சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா இதில் தமன்னாவுக்கு நண்பியாக சில காட்சிகளில் செமத்தியாக நடித்திருக்கிறார். அவர்தான் விக்ரமை காதலிக்கிறார் என்பதை காட்சிகளிலேயே நகர்த்தி கடைசியாக சஸ்பென்ஸை உடைத்து தமன்னாவுக்கு காதலை புரிய வைத்திருப்பது சுவையான டிவிஸ்ட்..!

விக்ரமின் நண்பர்களான விஸ்வந்த், வினோத், ஸ்ரீமன்… இந்தக் கோஷ்டியும் செம ரிப்ளை வசனங்களால் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

சூரி, மதுமிதா ஜோடியின் கதை படத்தின் நடுவிலேயே வந்து செல்கிறது. சில காட்சிகளே வருவதால் சூரி இடைச்செருகலாக எடுத்து சொருகியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இருந்தாலும் சூரியின் தயவு இந்தப் படத்திற்கு தேவைப்படவில்லை என்பதுதான் உண்மை.

மலையாள வாசனை இல்லாமல் நடித்திருக்கும் வில்லன் பாபுராஜிற்கு வரவேற்கத்தக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவரை கொலை செய்ய விக்ரம் போடும் ‘ஸ்கெட்ச்’ அதகளம்.. இந்த கழுத்தறுப்பு காட்சிக்கு தியேட்டரில் கை தட்டல்கள் கிடைக்கின்றன என்பது நமக்கு சோகத்தைக் கொடுக்கிறது..!

காதலிக்கும் பெண்களோ, ஆண்களோ தாங்கள் காதலிக்கப்பட்டு வருகிறோம் என்பதை வெளிப்படையாக பெற்றோரிடம் சொல்லாமல் பெண் பார்க்கவோ, மாப்பிள்ளை பார்க்கவோ ஏற்பாடான பின்பு பெற்றோரை சங்கடப்படுத்தும்விதமாக கடைசி நிமிடத்தில் சொல்வது போன்ற திரைக்கதை இந்தப் படத்திலும் மூன்று இடங்களில் வருகிறது. இதுதான் படத்தில் தெரியும் பெரிய நெருடல்.

என்னதான் காதல் என்றாலும், ஒரு கல்லூரி மாணவி.. பொறுப்பாக இந்தப் பிரச்சினையை கையாள்வது போல திரைக்கதை இருப்பதுதான் படம் பார்க்கும் காதலிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்..!

இறுதியில் தமன்னா காத்திருப்பது போலவும், அதே நேரம் விக்ரமுக்கு ஏற்பட்ட கதியையும் ஒரே பிரேமுக்குள் காட்டியிருந்தால் இன்னும் நன்றாகவே கவிதை வடிவில் இருந்திருக்கும்..!

சுகுமாரின் ஒளிப்பதிவில் கார் சேஸிங் காட்சிகளை மிக பிரமாதமாக படமாக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே மைதா மாவு போல பளிச்சென்று இருக்கும் தமன்னா ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் படத்தில் இன்னும் அழகாகியிருக்கிறார். அழகு ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளின் மாண்டேஜ் காட்சிகளை ரசிக்கும்படியாக அமைத்திருக்கிறார்கள்.

விக்ரமின் வயது தெரியாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகளுக்கு ஒரு சபாஷ். படத் தொகுப்பாளர் ரூபனின் சிறப்பான தொகுப்புரை கார் சேஸிங் காட்சிகளில் புலப்படுகிறது. பாராட்டுக்கள்..!

எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்காததுதான் பெரும் குறை. டூயட் பாடல்களை ஒரு முறை கேட்கலாம். ‘அட்சி புட்சி’ பாடல் சுத்தமாக புரியவில்லை. இந்த அளவுக்காக சென்னை தமிழில் பாடுவது..?

இயக்குநர் விஜய் சந்தர், விக்ரம் என்னும் மாஸ் ஹீரோவாக்காக கதை செய்திருப்பதால் அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்துவது போலத்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

பையன்களின் செல்போனை பிடுங்கி தூக்கிப் போட்டு உடைக்கும்போதே இவர்களால் ஏதோ ஒரு பிரச்சினை வரப் போகிறது என்பது தெள்ளத் தெளிவாக ரசிகனின் புத்தியில் ஏற்றப்பட்டுவிட்டது. அது கடைசியில் ‘நாயகன்’ ஸ்டைல் முடிவாக இருக்கும் என்பது எதிர்பாராதது..! அந்த சஸ்பென்ஸ்தான் படத்தின் ஹைலைட்ஸ்..!

இடையில் ஏற்படும் சந்தேகத்தை ஹரிஷின் மீதேற்றி கடைசியாக அது இல்லையென்று சொல்லும்போது கொஞ்சம் டெம்போவை ஏற்றி இறக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் இறுதியில் டைட்டிலில் ஓடும் வாசகங்களை படத்திலேயே வசனத்தில் சொல்லியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். அதில் எதுவும் சொல்லாமல் படத்தின் நோக்கமே ‘குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதுதான்’ என்று சொல்லியிருப்பது எப்படி மனதில் நிற்கும்..? ஆனாலும் இப்படியொன்றை சொல்ல வேண்டும் என்று நினைத்த மனங்களுக்கு நமது நன்றிகள்..!

தமிழ்ச் சினிமா வாராவாரம், மாதாமாதம் தன்னை புதுப்பித்துக் கொண்டே செல்வதால் தொடர்ந்து படம் பார்க்கும் சினிமா ரசிகர்களையும் மனதில் வைத்து, இனிமேல் தன்னுடைய படங்களை முடிவு செய்தால் அது, நடிகர் விக்ரமுக்கும் நல்லது. அவரது தயாரிப்பாளர்களுக்கும் நல்லது.

ஒரு முறை பார்க்கலாம்தான்..!

Our Score