ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து இதுவரையிலும் எடுக்கப்பட்ட சினிமாக்களெல்லாம் பெரிய அளவுக்கு பேசப்படாமல் சினிமா ரசிகர்களின் கண்களுக்கும் படாமலேயே போய்விட்டது. எடுக்கப்பட்ட கதைகளும், போரின் வலிகளையும், போர் நடந்த சூழலையும், அங்கு வாழும் மக்களின் சோகத்தையுமே இதுவரையில் பதிவு செய்திருக்கின்றன. இப்போது முதல் முறையாக ஈழத்தில் இருந்து அகதிகளாக தமிழகம் வரும் ஈழத்து மக்கள் படும் அவலத்தை சிவப்பு என்ற இந்தச் சினிமாவில் பதிவு செய்திருக்கிறார்கள்..
‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவாவின் அடுத்த படம்தான் இந்த ‘சிவப்பு’.. முக்தா ஆர்.கோவிந்த் மற்றும் ‘புன்னக்கைப் பூ’ கீதா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா ஹீரோவா அறிமுகமாகியிருக்கார். ரூபா மஞ்சரி ஈழத்துப் பெண்ணாக நடிச்சிருக்கார். படத்தின் முக்கியமான கேரக்டரான ‘கோனார்’ என்ற கதாபாத்திரத்தை தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறாராம் ராஜ்கிரண். மேலும் தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷும் நடிச்சிருக்காங்க..
தமிழகத்திற்கு முறையாக அனுமதி பெற்று முகாம்களில் தங்கியிருக்கும் அகதி மக்களைக் காட்டிலும் அனுமதி பெறாமல் தமிழகத்தில் பரவலாக தங்கியிருக்கும் ஈழத்து மக்களும் இருக்கிறார்கள். இதில் ஒருவரான ரூபா மஞ்சரிக்கும், தமிழகத்து இளைஞன் நவீன் சந்திராவுக்கும் இடையே ஏற்படும் காதல்.. இவர்களது காதலுக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டப் பிரச்சினை.. ஏவலாட்களாக மாறிப் போகும் போலீஸ்.. இதனைச் சுற்றித்தான் கதையாம்..!
படத்தின் டிரெயிலரே அசத்தியிருக்கிறது மது அம்பாட்டின் ஒளிப்பதிவே ஒரு தனி கலையாக தெரிகிறது.. அடுக்கு மாடிக் கட்டிடடத்திலேயே தங்கியிருந்து அதேக் கட்டிக் கொடுக்கும் தொழிலாளர்களின் அன்றாட போராட்ட வாழ்க்கைதான் படத்தின் களம் என்பது பார்த்தவுடனேயே புரிந்தது..!
“ஈழத்துப் பிரச்சினையில் ஒரு மறைக்கப்பட்ட பாகமாக இருக்குது அகதிகளின் அவலம். அதைத்தான் இந்தப் படத்துல பிரதானப்படுத்தியிருக்கேன்.. படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒரு கட் கூட சொல்லாமல் யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினாங்க. இனி மக்கள் பாராட்டணும். அதுக்காகத்தான் காத்திருக்கிறோம்..” என்றார் இயக்குநர் சத்யசிவா..
ஈழப் பிரச்சினை, அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் பூமாலை என்பதை படத்தின் பல கேரக்டர்கள் பேசும் டயலாக்குகள் மூலம் தெரியப்படுத்துகிறார் இயக்குநர். கடைசியாக, “நம்மளை நம்பி வந்த அகதிகளை ஒண்ணு ஆதரிச்சு கை கொடு்ககணும். இல்லாட்டி கை விட்ரணும்.. அவங்களை வைச்சு அரசியல் பண்ணக் கூடாது..” என்கிறார் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் ‘கோனார்’ கேரக்டரில் நடித்திருக்கும் ராஜ்கிரண்..
இது நம்ம அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் புரியணும்னா இந்தப் படம் நிச்சயமா ஜெயிச்சாகணும்..!