இந்தியாவிலேயே ஒரு விஷயத்தில் மட்டுமே சென்னைக்கு பெருமை என்றால் அது விபச்சாரத்திற்கு அடையாளம் இல்லாத்துதான்.. ஆனால் அதையும் கெடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது..
‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ என்ற படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தரான ஜெ.சதீஷ்குமார் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்.
சினனத்திரை நடிகை சான்ட்ரா எமி இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். மகேஷ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிவசரவணன்-ஹனீஸ் யுவானி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாடல்களையும் எழுதி இயக்கியிருக்கிறார் யுரேகா. இவர் இதற்கு முன்பு மதுரைச் சம்பவம் படத்தை இயக்கியவர்.
இந்தப் படம் தயாரித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் விற்பனை செய்ய வலுவான ஆள் இல்லாமல் இத்தனை நாள் தேக்கி விட்டார்களாம். இப்போது அது விஷயமில்லை. நேற்று நடந்த இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குநர் பேசிய பேச்சுதான்.
படத்தின் கதை விபச்சாரம் பற்றியதுதானாம். விபச்சாரப் பெண்களின் அவல நிலையை உள்ளே இறங்கி பார்த்து விரிவாக படமாக்கியிருக்கிறோம் என்றார் இயக்குநர் யுரேகா. இப்படியே போயிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். கூடவே.. “விபச்சார விடுதிகள் இல்லாததால்தான் தமிழ்நாட்டில் பல பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன. ஆகவே சென்னை போன்ற பெரு நகரங்களில் கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் விபச்சார விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்…” என்று கோரிக்கை வைத்தார்.
பொங்கியெழுந்த மீடியா விதம்விதமாக கேள்விகளையும், கண்டனங்களையும் முன் வைத்தும் மனிதர் அசரவில்லை. “பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் பலாத்காரமும் நடப்பதற்குக் காரணம் ஆண்களுக்கு அதற்கான வடிகால் இங்கே இல்லை…” என்பதுதான் என்றார் இயக்குநர். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, தேவதாசி முறை பற்றியெல்லாம் விலாவாரியாக பேசித் தீர்த்தாலும் கடைசிவரையிலும் மனிதர் தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.
“நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் அழிக்க முடியாத தொழில் விபச்சாரம். ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்து முறைப்படுத்தினால் கட்டுப்படுத்த முடியும்..” என்றார். “அப்போ புதுசு புதுசா ஆட்கள் வந்து சேர்ந்துக்கிட்டே இருப்பாங்களே.. இது வளர்த்து விடுற மாதிரிதானே..?” என்று கேட்டால், “அதனை அரசுதான் மக்களுக்கு சம அளவு வருவாய் அளித்து பெண்கள் இந்தத் தொழிலுக்குப் போகாமல் தடுக்க வேண்டும்..” என்றார்..
கொட்டாம்பட்டிக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்குக்கு வழி சொன்ன மாதிரியிருக்கு..! இப்போ திருட்டுத் தொழிலையும்தான் கட்டுப்படுத்த முடியலை.. அப்போ திருடர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து அனுமதிச்சிரலாமா..? என்னா லாஜிக்கோட பேசுறாங்கப்பா இவங்க..?