full screen background image

‘சின்னத்தம்பி’ படம் பார்த்துவிட்டு சிவாஜி என்னை மிகவும் பாராட்டினார் – நடிகர் ராதாரவியின் பெருமிதப் பேச்சு..!

‘சின்னத்தம்பி’ படம் பார்த்துவிட்டு சிவாஜி என்னை மிகவும் பாராட்டினார் – நடிகர் ராதாரவியின் பெருமிதப் பேச்சு..!

TRIDENT ARTS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சிவலிங்கா படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி, சக்திவாசு, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ், வி.டி.வி.கணேஷ், மதுவந்தி அருண், மதுமிதா, பரத் கல்யாண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஊர்வசி லாரன்சின் அம்மாவாகவும், கதாநாயகி ரித்திகா சிங்கின் அம்மாவாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்.

இயக்கம் – பி.வாசு, தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன், ஒளிப்பதிவு – சர்வேஷ் முராரி, இசை – எஸ்.எஸ்.தமன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், பாடல்கள் – விவேகா, நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – அனல் அரசு, தளபதி தினேஷ், மாஸ் மாதா, சிகை அலங்காரம் – ஏ.சப்தகிரிவாசன், புகைப்படம் – பி.ஜெயராமன், விஷுவல் எபெக்ட்ஸ் – இளங்கோ, சுபீஷ், சிறப்பு சப்தம் – சி.சேது, டிடிஎஸ் வல்லுநர் – கிருஷ்ணமூர்த்தி, டிஸைனர் – பவன் குமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோடா கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.என்.அஷ்ரப், டி.எஸ்.செல்வராஜ், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எஸ்.பழனியப்பன், ஆர்.விக்ரமன், இணை தயாரிப்பு – ஜெ.அப்துல் லத்தீப்.

Sivalinga Press Meet (13)

வரும் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் படக் குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள். ஆக்சன் காட்சிகளை ரசிப்போரும், நடனக் காட்சிகளை விரும்புவர்களையும் ஒருசேர கவரும் வண்ணம் படத்தின் டிரெயிலரை வடிவமைத்திருக்கிறார்கள்.

படத்தின் பாடல் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. ரித்திகா சிங், ராகவா லாரன்ஸின் புயல் வேக நடனத்தில் ‘ரங்கு ரக்கர’ பாடல் தூள் கிளப்புகிறது. அத்தனை வேகத்தில் பேயாட்டம் ஆடியிருக்கிறார்கள் இருவரும்..!

மேலும், ‘சந்திரமுகி’யை போலவே இந்தப் படமும் பேய், கடவுள் பக்தி எல்லாம் கலந்த படமாகவும் தெரிகிறது.

Sivalinga Press Meet (14)

தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் பேசும்போது, “சிவலிங்கா கன்னடப் பதிப்பைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தை தமிழில் தயாரிக்க விரும்புவதாக வாசு ஸாரிடம் சொன்னேன். அவரும் அப்போது தமிழாக்கம் செய்யும் மூடில்தான் இருந்தார். நான் கேட்டவுடன் சட்டென ஒத்துக் கொண்டார். தமிழுக்கென்று பார்க்கும்போது அந்தக் கேரக்டரில் ராகவா லாரன்ஸ்தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தோம். அவரிடம் பேசியபோது வாசு ஸார்தான் இயக்கப் போகிறார் என்றவுடன் மறுபேச்சில்லாமல் ஒத்துக் கொண்டார். இந்தப் படம் லாரன்ஸ் ஸாரின் நடிப்புக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர். கன்னடப் படத்தில் இருந்து அப்படியே மாற்றிவிடவில்லை. சில, பல மாற்றங்களை செய்துதான் உருவாக்கியுள்ளோம். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் சுமார் 1000 தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸாகப் போகிறது..” என்றார்.

படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் நடிகை  சாரா தேவா பேசும்போது அதிசயமாக ஒரு திருக்குறளை தொட்டுக் காட்டி பேசினார்.

Sivalinga Press Meet (18)

“பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலினும் பெரிது என்பது திருக்குறள். அது போல எந்தப் பலனும் எதிர்பாராமல், இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த வாசு சார்,  தயாரிப்பாளர் மற்றும் படக் குழு செய்த உதவியை மறக்கவே மாட்டேன்..” என்றார்.

நடிகர் சக்தி வாசு பேசும்போது “ஒரு பெரிய படம் ஓடும்போது அதில் நாமளும் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து இந்தப் படம் கன்னடத்தில் தயாராகும்போதே நமக்கு ஒரு சீட்டு வாங்கிரணும்னு நினைச்சேன். ஏன்னா எனக்கு இந்தப் படத்தோட கதை அப்பவே தெரியும். அதனாலதான் நிறைய முயற்சி செய்தேன்.

sakthi vaasu-1

கடைசியாக கன்னடத்துல ஹீரோவா நடித்த சிவராஜ் குமார்தான் அப்பாகிட்ட பேசி இந்தக் கேரக்டரை எனக்கு வாங்கிக் கொடுத்தார். கன்னடத்துல நான் செய்த அதே கேரக்டரை இந்த் தமிழ்ப் பதிப்பிலேயும் நான் நடிச்சிருக்கேன். இத்தருணத்தில் சிவராஜ்குமார் அண்ணனுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

banupriya

நடிகை பானுப்பிரியா பேசும்போது, “ரொம்ப வருஷம் கழிச்சு எனக்கு இது மாதிரி ஒரு மேடைல பேசுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்தப் படத்துல இப்படியொரு நல்ல கேரக்டரை எனக்குக் கொடுத்த பி.வாசு ஸாருக்கு எனது நன்றி..” என்றார்.

rithiga singh

ஹீரோயினான நடிகை ரித்திகா சிங் பேசும்போது,  “ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு சிரமமாகத்தான் இருந்தது. இதுவரைக்கும் நான் செய்யாத ஒரு கேரக்டர் இது.  வாசு  ஸாரும், லாரன்ஸ் ஸாரும்தான் எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்து.. படத்துல நடிக்க வைச்சிருக்காங்க. அவங்களுக்கு எனது நன்றி. படமும் ரொம்ப, ரொம்ப வித்தியாசமா வந்திருக்கு. நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்..” என்றார்.

ராதாரவி பேசும்போது, “எனக்கும் வாசுவுக்குமான நட்பு மிகப் பெரியது. நான் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் ஒரு சில இயக்குநர்களைத் தவிர என்னை நடிப்பில் மோல்டு செய்தவர்.. புதிய ராதாரவியை எனக்குள்ளில் இருந்து உருவாக்கியவர் வாசுதான். அவருடைய இயக்கத்தில் நான் நடித்த அத்தனை படங்களிலும் என் நடிப்பை பத்தி இப்பவும் நாலு பேர் பாராட்டி பேசுவாங்க. அது அத்தனைக்கும் வாசுதான் காரணம்.

radharavi

‘சின்னத்தம்பி’ படம் சக்கை போடு போட்டப்போ நடிகர் திலகம் சிவாஜி என்னைப் பத்தி பாராட்டி பேசியிருக்கார். வாசுகிட்டேயே சொல்லியிருக்கார். ‘என்னடா அவன்.. அவ்வளவு அசால்ட்டா நடிச்சிருக்கான்’ என்று சொன்னாராம். வாசு என்கிட்ட வந்து சொன்னாப்புல. ‘போய் பாருய்யா.. உன்னைப் பத்தியே எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்காரு’ன்னு..! எனக்கும் போக பயம். ஏன்னா அவர் எப்பவும் அப்படித்தான். பாராட்டுறேன்னு சொல்லிட்டு இடைல உள்குத்தும் குத்துவாரு.

அப்படியும் ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிட்டேன். பார்த்தவுடனே ஆச்சரியப்பட்டார். ‘டேய்… எப்படிடா நடிச்சிருக்க அந்தக் கேரக்டர்ல.. கிளைமாக்ஸ்ல அப்படியொரு ஆக்சனை காட்டியிருக்க பாரு.. அசந்துட்டேண்டா’ன்னு சொன்னார். அப்போ எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சு. அதுக்கு வாசுதான் காரணம்.

அவர் கூப்பிட்டு நான் நடிக்க போகாமல் இருக்கவே மாட்டேன். இந்தப் பட வாய்ப்பும் அப்படித்தான் எனக்கு வந்துச்சு. இந்தப் படத்துல ராகவா லாரன்ஸோட நடிப்பையும், டான்ஸையும் பார்த்து அசந்து போயிட்டேன். உடம்பா அது..? அப்படி வளைச்சு, வளைச்சு டான்ஸ் ஆடியிருக்கார்.

நான் சமீபத்தில பார்த்தவரையிலும் இந்தப் படத்தோட டிரெயிலரும் பாடல் காட்சிகளும், நடனமும்தான் பெஸ்ட்டுன்னு அடிச்சுச் சொல்வேன். இந்தப் படத்துல நான் நடிச்சிருக்கேன்றதால சொல்லலை. உண்மையும் இதுதான்.

இந்தப் படத்துல ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கிற தம்பி சக்தி வாசுவுக்கு இந்தப் படம் பெரிய அளவு பெயர் வாங்கிக் கொடுக்கும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா சக்தி வாசு எனக்கும் புள்ளைதான். அவன் இந்தப் படத்தில நடிச்ச நடிப்பை நானே நேர்ல பார்த்தேன். பிரமாதமா இருக்கு. அவனுடைய நடிப்புக்காகவும், இந்தப் படம் பேசப்படணும் என்பதுதான் எனது ஆசை..” என்றார்.

raghava lawrence

ஹீரோ ராகவா லாரன்ஸ் பேசும்போது, “இந்தப் படத்தின் முதல் ஹீரோ ரித்திகா சிங்தான். அவ்வளவு சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார். இவ்வளவு திறமையாக நடனமும் ஆடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. எனக்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார். இரண்டாவது வடிவேலு அண்ணன். அவருடைய காமெடி நடிப்புக்கு நான் தீவிர ரசிகன். இந்தப் படத்துலேயும் அவரே இரண்டாவது ஹீரோவா நடிச்சிருக்கார். நான் கடைசீல மூணாவதுதான்..” என்றார்.

கடைசியாக இயக்குநர் பி.வாசு பேசும்போது, “இந்த ‘சிவலிங்கா’ திரைப்படம் ஒரு கிரைம் ப்ளஸ் ஹாரர் கலந்த திரில்லர் டைப் படம். 2015 பிப்ரவரி 12-ம் தேதி கன்னடத்தில் இந்தப் படத்தை  இதே பெயரில் ரிலீஸ் செய்தோம். அதில் ஹீரோவாக சிவராஜ் குமார் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு. 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. ‘சந்திரமுகி’க்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும் படம் இந்த ‘சிவலிங்கா’தான்.

p.vasu

படத்தின் கதை என்னன்னு பார்த்தீங்கன்னா.. ஒரு வாலிபன் ரெயிலில் சென்று கொண்டிருக்கிறான். கூடவே தனது வளர்ப்பு புறாவையும் கொண்டு செல்கிறான். கடைசி ரெயில் என்பதால் அந்த கம்பார்ட்மென்டில் யாருமே இல்லை. தூங்கலாம் என நினைத்து படுக்கிறான்.

அப்போது அந்த கம்பார்ட்மென்டில் திடீரென்று கண் தெரியாத ஒருவன் எழுந்து, நடந்து வாசல் பக்கம் செல்கிறான். உடனே புறா அந்த வாலிபனை எழுப்புகிறது. அந்த வாலிபனும் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ தன்னைக் காப்பாற்ற வந்த வாலிபனை கீழே தள்ளிவிட்டு கொல்கிறான்.

கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி சின்னாப்பின்னமான அந்த வாலிபனின் ரத்தம் அவன் வளர்த்த அந்தப் புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் இந்தக் கொலைக்கு சாட்சி.

அந்தப் புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது என்பது ரொம்ப, ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த வழக்கை தற்கொலை என்று கோர்ட் முடிவு செய்துவிடுகிறது. ஆனால், இறந்து போன வாலிபனின் காதலி, இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க முறையிடுகிறார். எனவே, மிகவும் ரகசியமாக சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரிக்கிறார்கள்.

‘சந்திரமுகி’க்குப் பிறகு வடிவேலுவுக்கு இதில் பெரிய கேரக்டர். அந்த அளவுக்கு நன்றாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிடம் மாட்டிக் கொண்ட திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.

நான் இயக்கிய உழைப்பாளி படத்தில் வரும்’ உழைப்பாளி இல்லாத நாடுதான்’ பாடலில் நான்காவது வரிசையில் ஆடிய லாரன்ஸ், இன்று இவ்வளவு பெரிய ஸ்டாராக வந்திருக்கும் காரணம், அவர் சினிமாவை நேசிக்கும்விதம்தான். அர்ப்பணிப்புத் தன்மையோடு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

லாரன்ஸ் இதுவரையிலும் தான் செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதேசமயம் வழக்கமாக அவரது படத்தில் இருக்கும் தன்மைகளும் இருக்கும்.

ஒரு காட்சியை நான் படமாக்கும்போது அதை பக்கத்தில் இருந்து பார்த்தார் லாரன்ஸ்.  அதுல ரொம்ப இம்ப்ரஸ்ஸாகி மறுநாளே எனக்கு ஒரு சிங்க முக மோதிரத்தை பரிசளித்தார். அதே போல ரித்திகா சிங்கையும் உற்சாகப்படுத்தி அவருக்கும் பரிசளித்தார்.

இது ஏதோ அவரது சொந்தப் படம் மாதிரியாகவே நினைத்து அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து, படக் குழுவினருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்தார் ராகவா லாரன்ஸ். இந்தப் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது…” என்றார்.

Our Score