பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்..!

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்..!

‘நேற்று நாளை இன்று’ என்கிற அறிவியல் சார்ந்த படத்தை இயக்கிய இயக்குநரான ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியது. இது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 13-வது படமாகும்.

இந்தப் படத்தை ‘ரெமோ’ மற்றும் ‘வேலைக்காரன்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த 24 A.M. ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பேசும்போது, "எங்கள் முந்தைய படங்களான ‘ரெமோ’ மற்றும் ‘வேலைக்காரன்’ வெற்றியின்  மகிழ்ச்சியைவிட, இப்போது எங்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறோம்.

நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த ஃபேண்டஸி பொழுது போக்கு படத்தில் நகைச்சுவைக்கும் குறைவில்லை. கருணாகரன், யோகிபாபு, விஜய் டிவி புகழ் கோதண்டம் போன்ற உடனடியாக சிரிக்க வைக்கும் நடிகர்கள் இருக்கும்போது நகைச்சுவைக்கு வேறு என்ன தேவை.  நடிகை பானுப்பிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதை கண்டு வியந்தேன். அதே சமயம், தயாரிப்பாளராக இந்த படத்தைப் பற்றி நான் எப்படி வடிவமைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியும் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன.

உலகளவில் புகழ் பெற்ற  ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் அவரது மாய வித்தைகளை செய்ய  தவறியதில்லை.

ஒரு நிறுவனமாக எங்கள் வளர்ச்சிக்கு எப்போதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் கலை இயக்குநர் முத்துராஜ், படத்தில் பணிபுரியும் மற்ற புகழ் பெற்ற தொழில் நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் சவாலுக்கு தயாராகி விட்டார்.

படத்தின் வெற்றியை இப்போதை நாங்கள் கணித்து அதன்படியே படத்தைத் துவக்கியிருக்கிறோம். சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், அவரை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைக்கும் தமிழகத்து மக்களும் இந்தப் படத்துக்கும் பேராதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.." என்றார் முகம் மலர்ந்த மகிழ்ச்சியோடு..!