full screen background image

சிவகார்த்திகேயன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு..!

சிவகார்த்திகேயன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு..!

‘மான் கராத்தே’ படம் பற்றி அதிகம் பேர் வைத்த விமர்சனமே குத்துச் சண்டை போட்டியைப் பற்றி தவறான தகவல்களை படத்தில் முன் வைத்திருக்கிறார்கள் என்பதுதான்..!

இயக்குநர் தரப்பில் அதுவொரு காமெடிக்குத்தான் என்று சொன்னாலும், குத்துச்சண்டை நடக்கும் விதமும், அதனை திரைக்கதையில் கொண்டு சென்ற விதமும் சீரியஸாக இருப்பதால் யாரும் அதனை நம்பத் தயாராக இல்லை.

இதோ இப்போது சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்ற குத்துச்சண்டை வீரர் ‘மான் கராத்தே’ படத்தில் இடம் பெற்றுள்ள குத்துச்சண்டை போட்டிகளை பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நான் மாநில அளவில் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன்.

குத்துச் சண்டை போட்டிகள் பல கட்டுப்பாட்டு, விதிமுறைகள், மரபுகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில், வெளியான ‘மான் கராத்தே’ என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதில், இந்த கவுரவமிக்க குத்துச் சண்டை போட்டியை கேலி செய்யும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், நடிகர் வம்சி கிருஷ்ணாவும் குத்துச் சண்டை போட்டியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வருகிறது. அதில், ‘இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்றால் உன் தோழியை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்’ என்ற வசனமும், வெற்றி பெறுவதற்காக எதிராளியிடம் கெஞ்சுவது போல காட்சியும் இடம் பெற்றுள்ளது.

அதேபோல சர்வதேச அளவில் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்பவர் போதை மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதிகள் உள்ளன. பல கட்டுப்பாடுகள், மரபுகளை பின்பற்றி கண்ணியமான முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த போட்டியை அவதூறாக சித்தரித்து ‘மான் கராத்தே’ படம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த படத்தைத் தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் எழுதி இயக்கிய திருமுருகன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட அனைவரும் வரும் மே 30-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன்,  திருமுருகன், வம்சி கிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

Our Score