full screen background image

ஒரு லட்சத்துக்கு நான் எங்க போவேன்..? சிவகார்த்திகேயனின் கேள்வி..!

ஒரு லட்சத்துக்கு நான் எங்க போவேன்..? சிவகார்த்திகேயனின் கேள்வி..!

‘மான் கராத்தே’ இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்களை வைத்து பத்திரிகையாளர்களை பந்தாடிய காரணத்தினால் நேற்று கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் அது பூகம்பமாய் வெடிக்கும் என்று எதிர்பார்த்து போனால், கடைசியாக அது புஸ்வாணமாகிப் போனது..!

“அன்றைக்கு ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் உங்களது அடியாட்கள்..?” என்று கேள்வி கேட்டபோது சிவகார்த்திகேயன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. வருடக் கணக்காக கேமிரா முன்னாடி பேசியவர்.. இதுக்கெல்லாமா பயப்படப் போறார்..?

“அன்னிக்கு நான் தனியாத்தான் ஸார் வந்தேன். சத்தியமா நான் யாரையும் கூட்டிட்டு வரலை. இதோ இப்போ.. இந்த பங்ஷனுக்குக்கூட தனியாத்தான் வந்திருக்கேன். அன்னிக்கு நடந்த ஏற்பாடுகள் முழுசையும் தயாரிப்பாளர்தான் செஞ்சார்.. அது பத்தி எனக்குத் தெரியாது.. நான்கூட படிச்சேன். அடியாட்களோட வந்தேன்னு எழுதியிருந்தீங்க..! பவுன்சர்களையெல்லாம் வாடகைக்கு பிக்ஸ் பண்ணி நான் கூட்டிட்டு வரணுமா என்ன..? ஒரு பவுன்சருக்கு ஒரு நாள் சம்பளம் 2000 ரூபான்னாலும், 50 பேருக்கு 1 லட்சம் ஆயிரும்.. அவ்ளோ பணம் என்கிட்ட ஏது ஸார்..?” என்று அவர் அப்பாவியாய் சொன்னதையும் பவ்யமாகக் கேட்டுக் கொண்டனர் பத்திரிகையாளர்கள்.

இது பற்றி தயாரிப்பாளர் மதனிடம் கேட்டபோது, “இது மாதிரி பெரிய மீட்டிங்கல நிறைய பிரச்சினைகள் வரும்.. கூட்டம் வந்தால் சில பிரச்சினைகள் வரும்னு நினைச்சுத்தான் அவங்களை ஏற்பாடு செஞ்சோம். கடைசில இப்படி ஆயிருச்சு. இப்படி ஆகும்னு நானும் எதிர்பார்க்கலை.. இனி அடுத்தடுத்த விழாக்கள்ல இது மாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்குறோம்…” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.

உண்மைதான்.. இந்த விழாவுக்கு வரும்போது சிவகார்த்திகேயன் தனியாகத்தான் காரில் வந்திறங்கினார். ஆனால் ஹாலின் உள்ளே நுழையும்போது பத்திரிகையாளர்கள், புகைப்படக்கார்ர்கள் என்று பலர் படை சூழத்தான் வர முடிந்தது..!

ஒருவேளை பிரஸ்காரங்க.. “நட்சத்திரங்கள்கூட நாங்க மட்டும்தான் வருவோம்.. வேற யாரும் வரக் கூடாது”ன்னு பொஸ்ஸஸிவ்னெஸ்ஸா இருக்காங்களோ..?

Our Score