நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து புதிய தயாரிப்பாளர் ஒருவரும் கிளம்பியிருக்கிறார்.
சிவாஜியின் மூத்த மகனான நடிகர் ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்துதான் அந்தத் தயாரிப்பாளர்.
துஷ்யந்த் முதலில் நடிகராகவே கோடம்பாக்கத்தில் அறிமுகமானார். ‘சக்சஸ்’ மற்றும் ‘மச்சி’ ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார். இரண்டுமே வெற்றி பெறாமல் போக.. சிவாஜி புரொடெக்சன்ஸ் நிர்வாகத்தில் தந்தை ராம்குமாருக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
இப்போது ‘ஈஷான் புரொடெக்சன்ஸ்’ என்கிற புதிய நிறுவனத்தைத் துவக்கி அதன் மூலம் திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறாராம். இந்த நிறுவனத்தில் துஷ்யந்தின் மனைவியான அபிராமியும் ஒரு பார்டனர்.
இந்தப் படத்தில் இளைய திலகம் பிரபுவும், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். படத்தின் பெயரும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ‘மீன் குழம்பும் மண்பானையும்’. தலைப்பே கதையின் வித்தியாசத்தைக் காட்டுகிறது..
இந்தப் படத்தில் ஆஷ்னா சவேரி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு லக்ஷ்மண். புதிய இயக்குநரான அமுதேஷ்வர் இயக்குகிறார்.
கடந்த வாரம் ஷூட்டிங்கிற்கு லொகேஷன் பார்ப்பதற்காக மலேசியா சென்ற இயக்குநர் அமுதேஷ்வர் மற்றும் தயாரிப்பாளர் துஷ்யந்த் இருவரும் அங்கு ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
படம் வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. மேலும், “சிவாஜி புரொடக்ஷன் போன்றே பல வெற்றி படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வேண்டும்..” எனவும் வாழ்த்தியுள்ளார்.
வரும் 20-ம் தேதி முதல் சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறதாம்.