full screen background image

“பெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இல்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் சுளீர் பேச்சு..!

“பெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இல்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் சுளீர் பேச்சு..!

இந்தியன் சினி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் தயாரித்துள்ள ‘சிரிக்க விடலாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

Sirikka Vidalaama Audio launch (15)

முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில்  V.R.விநாயக்,  நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன்  ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா,  லீஷா மற்றும் தீபா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Sirikka Vidalaama Audio launch (20)

ஒளிப்பதிவாளர் – முத்து மனோகர், படத் தொகுப்பு – முத்து கொடப்பா. நடனம் – ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த். எழுத்து, இயக்கம் வி.பி.காவியன். இவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஜெயக்குமாரே இந்தப் படத்திற்கு இசையமைத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். மேலும் தனது ஜே.கே. நிறுவனம் மூலமாக படத்தின் இசையை தானே வெளியிடுகிறார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Sirikka Vidalaama Audio launch (19) 

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

‘களவு செய்யப் போறோம்’, ‘ராஜாவுக்கு ராஜா’, ‘சேவல் சண்டை’ என்று முதல் படம் வெளியாகும் முன்பே தாறுமாறாகப் படங்கள் பண்ணிக் கொண்டிருக்கும் நாயகன் விநாயக், ஒரு மலையாள வரவு என்பது சுவராஸ்யமான விஷயம். “தமிழ் நாடு என்னை வாழவைக்கும்…”என்கிறார் நம்பிக்கையோடு.

Sirikka Vidalaama Audio launch (32)

“முதலமைச்சராவது எவ்வளவு கஷ்டம் பாருங்க.. தினமும் அடிதடி, சண்டை…” என்று அதிரடியாகச் சிரிக்க வைத்த பவர் ஸ்டார் சீனிவாசன், “நானும் ஒரு படத்துல சி.எம்.மா   நடிச்சுருக்கேன். பாக்யராஜ் ஸார் அந்தப் படத்துல எனக்கு நண்பரா அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கிறார்… ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப்  பிறகு இந்த ‘சிரிக்க விடலாமா’ திரைப்படம் உங்களை நிச்சயமாக தெறிக்கவிடும்…” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கு பில்ட் அப் சீன் யோசித்தே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள்… இதனால், ஹீரோக்கள் 30-லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

suresh kamatchi

ஆனால் அவர்கள் தியேட்டரில் டிக்கெட் எடுக்கும்போது ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைத்து விற்கிறார்கள்… எப்படி ஒரு அடிமட்ட ரசிகனால் படம் பார்க்க முடியும்..? எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் என் படங்கள் டிக்கெட் விற்க வேண்டும்.. நஷ்டம் ஏற்பட்டால் என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று இதுவரையிலும் சொல்லியிருக்கிறார்களா..?

இந்த லட்சணத்தில் இவர்களுக்கு நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலான பின்பு முதலமைச்சர் கனவு வேறு வருகிறது. தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள், எப்படி முதல்வராகி வாக்களித்த ஒட்டு மொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்…?

தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால்தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை போடுகிறான்… தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.. ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களையவேண்டும்… அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்…?

அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப் போகிறார்..? நல்லவேளை, இன்றைக்கு ஒருத்தர் முதல்வராகிவிட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்…!

ரசிகர்களே.. தயவு செய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள்… புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்… என்.எஸ்.கே.விலிருந்து இன்றுவரை  நகைச்சுவை  நடிகர்கள்தான் உங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்கள்… அந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக ‘சிரிக்க விடலாமா’வை எடுத்திருக்கிறார்கள்.. படம் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார். 

k.bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இப்போதும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்… குறிப்பாக இளைஞர்கள்… தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான்… மொத்தத்தில்  நல்ல படமாக எடுத்தால் ஓடத்தான் செய்கிறது. சமீபத்தில் வந்த ‘துருவங்கள் 16’, ‘அதே கண்கள்’ என்ற இரண்டு படங்களும் சிறப்பாக இருப்பதால் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுபோல் படங்கள் தரமானதாக இருந்தால் நிச்சயமாக எத்தனை சிரமங்கள் இடையில் வந்தாலும் அவைகள் ஓடி விடும்.

இந்த ‘சிரிக்க விடலாமா’ படத்தின் இயக்குநரான காவியன், எனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர். ஆகவே சிறப்பாகத்தான் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

Our Score