full screen background image

சிறை – சினிமா விமர்சனம்

சிறை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்‌ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜா  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி, ஒளிப்பதிவு: மதேஷ் மணிக்கம், இசை: ஜஸ்டின் பிரபாகரன், தொகுப்பு (எடிட்டிங்): பிலோமின் ராஜ், கதை: தமிழ், திரைக்கதை: தமிழ், சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பு வடிவமைப்பு: ராகவன் சஞ்சீவி, ஆடை வடிவமைப்பு: வர்ஷினி சங்கர், நடன அமைப்பு: லீலாவதி குமார், சண்டை அமைப்பு: PC ஸ்டண்ட்ஸ், ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா, ஒலி கலவை (Sound Mix) : SP நாராயணன், VFX: ஸ்பெக்டர் போஸ்ட் Spectre Post,  DI: G. பாலாஜி,  விளம்பர வடிவமைப்பு: சிவகுமார் S (சிவா டிஜிட்டல் ஆர்ட்), நடிகர் தேர்வு : C.K. சுரேந்திரா தாணு மூர்த்தி, ஸ்டில்ஸ்: சாரதி, பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ், தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ். வெங்கட், நிர்வாக தயாரிப்பாளர்கள்: அருண் K | மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஆரோசம்.

வருட கடைசியில் ஒரு முத்தான படமாக இந்தப் படம் வந்திருக்கிறது. பொதுவாக காவல்துறை, நீதிமன்றம்… இவைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் அந்தத் துறைகளின் அன்றாட நிகழ்வுகள் அவர்களுடைய விதிமுறைகள் இவைகள்… அதிகம் வெளியில் சொல்லப்படுவதில்லை. ரசிகர்களுக்கும் அது தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் இந்தப் படத்தில் ஒரு விசாரணை கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன. கைதிகளை அழைத்துச் செல்லும் காவல்துறையினர் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செயல்படுவார்கள் என்பதையெல்லாம் மிக அழகாக நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கதிரவன் என்ற விக்ரம் பிரபு, காவல் துறையில் ஆயுதப்படை பிரிவில் சீனியர் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியான மரியம் என்ற ஆனந்தா தம்பிராஜாவும் இதே காவல்துறையில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணை கைதியான அக்ஷய் குமரை சிவகங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு மற்றும் அவரது இரண்டு காவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

விக்ரம் பிரபு ஒரு கொலை கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வரும் வேளையில், ஒரு கும்பல் வந்து வெடிகுண்டுகளை வீசியும், மிளகாய் பொடி கலந்த கலவையை வீசியும், அந்தக் கைதியை தப்பிக்க வைக்க முயல்கிறார்கள் இந்தக் கலவரத்தில் அந்தக் கைதியை பிடிக்க, வேறு வழியில்லாமல் விக்ரம் பிரபு தன்னுடைய துப்பாக்கினால் அந்த கைதியை சுட்டுத் தள்ளி விடுகிறார்.

இந்த நிஜமான என்கவுண்டர் பொதுமக்களின் மத்தியில் நடந்ததால் நாடே பரபரப்பாகிவிட்டது. உடனடியாக வழக்கம் போல காவல்துறையில் ஒரு விசாரணை கமிட்டியை அமைத்து விசாரிக்க துவங்குகிறார்கள்.

இப்படி ஒரு சிக்கலில் இருக்கும் பொழுதுதான் அடுத்த பணியாக இன்னொரு கைதியை லாங் எஸ்கார்ட்டாக சிவகங்கைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பும் விக்ரம் பிரபுவிடம் வருகிறது.

விக்ரம் பிரபு தன்னுடைய சக காவலர்களுடன்அரசு பேருந்தில் வேலூர் ஜெயிலில் விசாரணை கைதியாக இருக்கும்அப்துல் ராவூப் என்ற அக்ஷய் குமார் உடன் சிவகங்கைக்கு பயணிக்கிறார். விக்ரம் பிரபுவின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் உடன் வந்த இரண்டு காவலர்கள் துவக்கத்திலேயே மது அருந்திவிட்டு வந்து அமர்கிறார்கள். இன்னொரு இடத்தில் பேருந்து இரவு உணவுக்காக நிறுத்தப்பட்ட பொழுது அங்கு ஏற்பட்ட ஒரு குழப்பத்தில் இவர்களின் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிறான் அப்துல் ரவூப்.

அந்த அர்த்த ராத்திரியில் தேடியும் அப்துல் கிடைக்காததால் வேறு வழியில் விக்ரம் பிரபுவும் போலீஸ் நடைமுறைப்படி அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வருகிறார்கள். ஆனால் அங்கே அவர்களே எதிர்பார்க்காத டிவிஸ்ட்டாக அப்துல் துப்பாக்கியுடன் வந்து சரணடைத்திருக்கிறான். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் விசாரணைக்கு பிறகு அப்துல் ரவூப் மீண்டும் விக்ரம் பிரபுவிடம் ஒப்படைக்கப்பட அப்துல்லா அழைத்துக் கொண்டு மீண்டும் பேருந்தில் ஏறி சிவகங்கை நோக்கி பயணிக்கிறார்கள் விக்ரம் பிரபு அண்ட் டீம்.

இந்த நேரத்தில் அப்துல், நீதிமன்றத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும்போது மட்டும் சன்னுடைய கையில் விலங்கு போட வேண்டாம் என்று கெஞ்சுகிறான். அதற்கான காரணம் என்ன என்று கேட்ட பொழுதுதான் அப்துல் ரவூப் தன்னுடைய காதல் கதையை விக்ரம் பிரபுவிடம் சொல்கிறான்.

அந்த காதல் கதையைக் கேட்டு இரக்கம் அடைந்த விக்ரம் பிரபு அப்துல் வேண்டுகோளின்படியே அப்துலுக்கு விலங்கிடாமல் நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.

வெறும் விசாரணை கைதியாகவே 5 வருடங்களாக வாய்தா மேல் வாய்தா போட்டே தன்னுடைய வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் என்று அப்துல் வருத்தப்படுவதால் அப்துல்லாவையும், அவனுடைய காதலியான கலையரசியையும் நீதிபதியின் முன்னால் போய் அவர் காலில் விழுந்து கெஞ்சும்படி சொல்லி அனுப்புகிறார் விக்ரம் பிரபு.

நீதிபதியும் இவர்களின் காதல் கதையையும், சோக கதையையும் கேட்டு மனம் இறங்கி அடுத்த வாய்தாவில் நிச்சயமாக தீர்ப்பை சொல்லிவிடுகிறேன் என்று அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

ஆனால் அடுத்த முறை அப்துல்லாவை அழைத்துப் போக லாங் எஸ்கார்ட் குழுவில் விக்ரம் பிரபு இடம் பெறவில்லை. ஆனாலும் அவனை எப்படியாவது வெளியில் எடுக்க வேண்டும் என்று துடிக்கும் விக்ரம் பிரபு வேலூரில் இருந்து சிவகங்கைக்கு தானாகவே வருகிறார்.

எப்படியும் இன்று நமக்கு விடுதலை என்று நினைத்து சந்தோஷமாக நீதிமன்றத்திற்கு வந்த அப்துலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? அப்துல் விடுதலை ஆனானா? இல்லையா? விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.

ஆயுதப் படையின் சீனியர் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படம் 25வது திரைப்படம் உண்மையாக பெருமை அடைய வேண்டிய தருணம் விக்ரம் பிரபுவுக்கு வியக்குறுகிய காலத்தில் 25 படங்களை தாண்டி விட்டார் விக்ரம் பிரபு அவரது திரைப்படங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக பார்க்கும் வகையில் அமைந்திருப்பது தான் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெயர் என்று சொல்லலாம்.

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் அதுவும் ஆயுதப் படையில் இருக்கும் காவலரால் என்ன செய்ய முடியும்? ஒரு மனிதனின் கண்ணீரை துடைக்க முடியுமா? ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா? என்பதை தன்னுடைய ‘கதிரவன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாக விக்ரம் பிரபு மிக அருமையாக தன்னுடைய நடிப்பில் செய்திருக்கிறார்.

காவல்துறையில் மட்டுமே தனக்கு கீழே வேலை செய்யவும் அலுவலர்களை “வாய்யா போய்யா’ என்று மரியாதை இல்லாமல் பேசுவதும் “வாடா போடா” என்று சொல்வதும் ரொம்பவே சகஜம். அதே சமயம் ஆண்டாள் அடிமை கலாச்சாரத்தை இப்பொழுது வரையிலும் அப்படியே தொடர்ந்து வரும் ஒரே துறை காவல் துறைதான். மேல் அதிகாரிகளை “ஐயா ஐயா” என்றுதான் அழைக்க வேண்டும். “சார்” என்றுகூட பேசக் கூடாது என்பது காவல் துறையில் எழுதப்படாத விதி. அந்த விதி மீறல்தான் லட்சக்கணக்கான காவலர்களுக்கு இன்றுவரையில் நிம்மதியை கொடுக்காத ஒரு விஷயம்.

துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றால் அந்த கைதி தப்பி சென்று இருப்பான் என்பதை காவல் உயர் அதிகாரிகள் தெரிந்திருந்தாலும், “சூட்டிங் செய்வதற்கு நீ யார்?” “நீ ஏன் சுட்டாய்?” என்றெல்லாம் அவரை மரியாதை குறைவாக பேசுவதும் அந்த பேச்சுக்களை சகித்துக் கொள்ளும் கதிரவனின் நடிப்பினால் நமக்குப் பரிதாபமே ஏற்படுகிறது. ஆனால், காவல்துறை இப்படித்தான் என்பதால் நாம் அதை தாண்டித்தான் போக வேண்டி இருக்கிறது.

சக நண்பர்களுக்கு உதவி செய்யும் ஒரு குணத்திலும், சக மனிதர்களை நட்பு பாராட்டும் விதத்திலும் கைதியாகவே இருந்தாலும் அவன் ஒரு மனிதன் அவனுக்கு என்று ஒரு பேச்சு சுதந்திரம் உண்டு என்பதை உணர்ந்து கதிரவனாக அந்த கைதியுடன் நட்பு பேணும் காட்சிகளிலெல்லாம் நிச்சயமாக காவல்துறையில் இருக்கும் அனைத்து காவலர்களும் கதிரவன் போல் இருந்து விடமாட்டார்களா?” என்று ஒரு ஏக்கத்தை தனது பண்பட்ட நடிப்பு மூலமாக நமக்கு கொடுத்துவிட்டார் விக்ரம் பிரபு.

அப்துல் ராவூப் என்ற கொலை கைதியாக நடித்திருக்கும் எல்.கே.அக்ஷய்குமார் புதுமுக நடிகர். இதுதான் அவரது முதல் படம் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சின்ன வயதில் இருந்தே தான் பார்த்து நேசித்து நட்பாக பழகி வந்த பெண்ணை பருவ வயது எட்டியவுடன் காதலியாக நினைத்து அந்தக் காதலை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடிக்கும் அப்துல் ராவூப்பின் காதல் கதை மிக, மிக சோகமயமானது.

அந்தக் காதல் காட்சிகளையும் கொலை செய்ய தூண்டிய சம்பவத்தையும் படமாக்கியிருக்கும்விதம் அருமை. அது நிச்சயம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை அல்ல; எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு விபத்து என்பதாகவே காட்சிகளில் பதிவு செய்திருக்கிறார் இயக்குர்.

ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது கலையரசி என்ற தன் காதலி தன்னை பார்க்க வந்து தவியாய் தவித்து கண்களாலேயே காதலையும் சொல்லி தைரியத்தையும் ஊட்டி விடுகிறாள் என்பதை கதிரவனிடம் சொல்லும் அப்துல் தனக்கு கை விலங்கு போட வேண்டாம் என்று அந்த கெஞ்சுகின்ற அந்தக் காட்சிகள் நம் மனதை தொட்டுவிட்டன.

இடையிலேயே தப்பித்து செல்வதற்கு பல வழிகள் வாய்ப்புகள் இருந்தும் அப்துல், அதை செய்யாமல் சட்டத்தின்படியே நடந்து தான் வெளியில் வருவதை விரும்புவதாக சொல்லும்பொழுது கைதட்ட வைத்து விட்டார். விக்ரமின் தூண்டுதலின் பேரில் நீதிபதியின் காலில் விழுந்த கதறுகின்ற அந்தக் காட்சி நம் மனதை உலுக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

பயந்த சுபாவமாகவும், வெள்ளந்தியான பேச்சிலும் நம்மை பெரிதும் கவர்ந்திருக்கிறார் அப்துல் ராவூப்பாக நடித்த அக்ஷய் குமார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

கலையரசியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில் குமார் கிராமத்து பெண் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே பார்த்து பழகிய தன் நண்பன் அப்துல் என்பதால் அவனைக் காதலிப்பதும், அப்துலுக்கு தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து காதலை வளர்த்தும் திரைக்கதையில் பெரும் பங்கு வைத்திருக்கிறார்.

இவருடைய குடிகார மாமனிடம் சண்டையிட்டு அடி வாங்கி அப்பொழுதும் தன் காதலை விட்டுக் கொடுக்காத ஒரு கேரக்டராக நடித்திருக்கும் அனிஷ்மா இந்த படத்தின் ஒரு மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம்.

அனிஷ்மாவின் அக்காவாக நடித்திருக்கும் இஸ்ரத் பானு தனக்கு குழந்தை பிறக்காததன் காரணமாக சொல்லுகின்ற அந்த ஒரு வார்த்தை நாடு முழுவதும் பல பெண்கள் வெளியில் சொல்லாமல் தயங்கி நிற்கின்ற ஒரு விஷயம்தான். “நீ மட்டும் என்ன செஞ்ச? அப்பப்ப வந்து கோழி மாதிரி கொத்திட்டு போற? இதுல எப்படி புள்ள பொறக்கும்?” என்று கேட்கின்ற அந்தக் கேள்வி மிக மிக நியாயமானது. இவ்வளவு பட்டவர்த்தனமாக இது போன்ற ஒரு வசனத்தை வைத்ததற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருந்த ஆனந்த தம்பி ராஜாவும் ஒரு சில காட்சிகள் என்றாலும் நம் மனதை தொடுவது போல நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் பிரபுவின் உடன் வரும் காவலர்களாக நடித்திருக்கும் ஹரிசங்கர், நாராயணன், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், அக்ஷய் குமாரின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா சுரேஷ், அனிஷ்மாவின் அம்மாவாக நடித்தவர் என்று பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

காவல்துறையில் கைதிகளுக்கு எஸ்கார்டாக செல்பவர்கள் துப்பாக்கியில் குண்டுகளை போடாமல் வெறும் துப்பாக்கியாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இந்த படத்தின் மூலமாக நமக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் துப்பாக்கியில் குண்டுகளை போட்டு ரெடியாகவே வைத்திருந்ததை பார்த்து இன்ஸ்பெக்டர் மூணாறு ரமேஷ் கேட்கின்ற பொழுது “அவன் முஸ்லிம் என்பதால்” என்று காவலர் ஹரிசங்கர் சொல்லும் பொழுது  மூணாறு ரமேஷ் திருப்பி அளிக்கின்ற அந்த பதில்… இந்திய முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களின் குரலாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

“ஈழத்தில் தமிழர்களுக்காக நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த தியாகியின் பெயர் அப்துல் ராவூப் என்பது உனக்கு தெரியுமா?” என்று சொல்லி அந்த காவலருக்கு புத்தி புகட்டும் காட்சியில் தியேட்டரே கை தட்டலில் அலறுகிறது.

இந்த படம் 1997 முதல் 2002 வரையிலான காலகட்டத்தை நடப்பதால் அப்போதைய சுற்றுப்புறச் சூழல்களையும், வெளிப்புற காட்சிகளையும் அமைத்து மிக அழகான தன்னுடைய ஒளிப்பதிவால் நம்மைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மதேஷ் மாணிக்கம்.

பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம் என்றாலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ஆனால் பின்னணி இசையில் ஜஸ்டின் பிரபாகரன் அசத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் அவர் கொடுத்திருக்கும் அந்த பின்னணி இசைதான் ஒரு நிமிடம்கூட செல்போனை நாம் தேடவிடாமல் செய்துவிட்டது. அதோடு இந்த படத்தின் முதல் பாதி அசுர வேகத்தில் சென்று இருக்கிறது. படம் பார்க்கும் அத்தனை பேரையும் அசர வைத்தது இதுதான்.

பட துவக்கத்திலிருந்து இறுதி வரையில் படத்தின் திரைக்கதைகள் ஒரு பரபரப்பை கூட்டிக் கொண்டே செல்லும் வகையில் பட காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் பட தொகுப்பாளர் குழுவின் ராஜ்.

இந்த படத்தில் சண்டை காட்சிகள்கூட மிகவும் யதார்த்தமாக நாம் நம்புவதைப் போல வைத்திருக்கிறார் சண்டை பயிற்சி அமைப்பாளர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

டாணாக்காரன் படத்தின் இயக்குரான தமிழ், தமிழக காவல்துறையில் காவலராக வேலை பார்த்து ராஜினாமா செய்துவிட்டு பின்பு சினிமாவுக்குள் நுழைந்தவர். அவர் தன்னுடைய வாழ்க்கையில் தான் எஸ்கார்ட்டாக சென்ற பொழுது நடந்த ஒரு நிஜ சம்பவத்தை இந்தப் படத்தில் கதையாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு மிக அழகான கதையை, விறுவிறுப்பான திரைக்கதையிலும், அற்புதமான நடிப்பினாலும் இந்தப் படத்தை வழங்கியிருக்கும் படக் குழுவின்ருக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

கைதிகளை அழைத்துச் செல்லும்போது சிறையில் நடக்கும் நடைமுறைகளும், கைதிகள் கொண்டுவரும் பணத்தில்தான் அனைவருமே சாப்பிட முடியும் என்கின்ற ஒரு எதார்த்த உண்மைகளையும், இந்தப் படத்தில் ஒளியும் மறைவில்லாமல் காண்பித்து இருக்கிறார் இயக்குர்.

அதேபோல் காவலராகவே இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் சீக்கிரமாக வேலையை முடித்து சீக்கிரமாக கிளம்ப முடியும். இல்லாவிடில் அவர்களும் கடைசியாகத்தான் கிளம்ப முடியும் என்பதால், இந்திய மக்களின் ரத்தத்தில் கலந்த பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொள்கின்ற விஷயத்தை நீதிமன்ற பணியாளரிடம் பணத்தை கொடுத்து கேஸை உடனேயே கொண்டு வரச் சொல்லும்படி விக்ரம் பிரபு செல்லும்போது நமக்கு சிரிப்பாய் வருகிறது. ஆனால் இதுதான் உண்மை.

இந்தப் படத்தை இயக்கி இருக்கும் வெற்றிமாறனின் உதவியாளரான இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரி காவல்துறை, நீதிமன்றம், காதல், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, ஒரு பய உணர்வு, நீதிபதிகளும் மனிதர்கள்தான் என்பதை காட்டும் ஒரு யுக்தி, சில நீதிபதிகள் மனிதாபிமானத்தோடு கைதிகளை பார்ப்பது, விசாரிப்பது மாதிரி இருக்க பல நீதிபதிகள் ஆண்டான் அடிமை கலாச்சாரம் போலவே அவர்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைப்பதும் இந்தப் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் ஒரு சாதாரண காவலன் எளிய மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக ஏதோ ஒரு சிறிய வெடியைக் கொளுத்தி போட்டால்கூட அதுவும் நியாயம்தான் என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் இயக்குருக்கு மீண்டும் மீண்டும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் இருக்கும் சில லாஜிக் மிஸ்டேக்குகளை படம் ஓடிய வேகத்தில் நாமே மறந்து போய்விட்டோம். படம் முடிந்து வெளியில் வரும் பொழுதுதான் அதுவே நமக்கு தெரிகிறது. பரவாயில்லை. இந்த அளவுக்கு நம்முடைய மூளையை மழுங்கடித்து கடைசிவரையில் படம் பார்க்க வைத்து கை தட்ட வைத்திருப்பதால் நாமும் அதை மன்னித்து படத்தினை பாராட்டுவோம்.

இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இந்தப் படமும் இடம் பெற்றுள்ளது இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் பல்வேறு விருதுகளை பெற காத்திருக்கிறார்கள்..!

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4 / 5

Our Score