full screen background image

17695 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கும் ‘கான சரஸ்வதி’ பி.சுசீலா

17695 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கும் ‘கான சரஸ்வதி’ பி.சுசீலா

பிரபல சினிமா பின்னணி பாடகியான தென்னகத்து இசைக் குயில் பி.சுசீலா இதுவரையிலும் 17,695 பாடல்களை பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

தனது இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை பாடி தென்னகத்து சினிமா மற்றும் இசை ரசிகர்களின் மனதை அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசியப்படுத்தி இருப்பவர் பி.சுசீலா.

p-susheela

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். 

1935ம் ஆண்டு, நவம்பர் 13-ம் தேதி, ஆந்திராவில் பிறந்தவர் பி.சுசீலா. சிறு வயதிலேயே இசை மீது தீராத காதல் கொண்ட சுசீலா, முறையாக இசைப் பயிற்சி பயின்றார். ஆரம்ப காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் பாடி வந்தார். 1950-ம் ஆண்டு இசையமைப்பாளர் பெண்டயாலா நாகேஸ்வர ராவ், புதுமுக பாடகி ஒருவரை தேடி வந்தார். அப்போது ஆல் இந்தியா ரேடியோ சார்பில் சுசீலா உள்ளிட்ட 5 பேர் பரிந்துரைக்கப்பட்டார்கள். அதில் பி.சுசீலா தேர்வானார்.

1953-ல் பிரகாஷ்ராவ் இயக்கத்தில், ‘பெற்ற தாய்’ என்ற படத்தில் ‘எதற்கு அழைத்தாய்’ என்ற பாடலை பாடி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் பி.சுசீலா. 1955-ல் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் இவர் பாடிய ‘உன்னை கண் தேடுதே,’ ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ என்ற இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து பி.சுசீலாவை திரும்பி பார்க்க வைத்தன. இவருக்கு முன்பு பி.லீலாவும், எம்.எல்.வசந்தகுமாரியும்தான் முன்னணி பாடகிகளாக இருந்தனர். 

பி.சுசீலாவின் வசீகர குரல் ரசிகர்களின் இதயங்களை ஈர்த்தது. பாடும் வாய்ப்புகள் குவிந்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா பாடிய டூயட் பாடல்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. இருவரும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் பாடினார். இதுவரை தனியாகவும் பிறருடன் சேர்ந்தும் 17 ஆயிரத்து 965 பாடல்களை பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாது ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சுசீலா, இதுவரை தமிழில் 2 முறை மற்றும் தெலுங்கில் 3 முறை என மொத்தம் 5 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். இது தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

1969-ல் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பி.சுசீலா பாடிய ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. 71-ல் ‘சவாலே சமாளி’ படத்தில் இவர் பாடிய ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றார்.

‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’, ‘நினைக்க தெரிந்த மனமே’, ‘நீ இல்லாத உலகத்திலே’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், பார்த்த ஞாபகம் இல்லையோ, ‘மறைந்திருந்து பார்க்கும்’, ‘அமைதியான நதியினிலே ஓடம்’, ‘அத்தைமடி மெத்தையடி’, ‘மன்னவனே அழலாமா’, ‘பாலிருக்கும் பழமிருக்கும்’, ‘ஆடாமல் ஆடுகிறேன்’, ‘அம்மம்மா காற்று வந்து ஆடைதொட்டு’, ‘அமுதை பொழியும் நிலவே’, ‘செந்தூர் முருகன் கோவிலிலே’ உள்பட ஏராளமான பாடல்கள் பி.சுசீலாவின் இனிமையான குரலில் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

கான சரஸ்வதி பி.சுசீலாவின் மணிமகுடத்தில் மற்றுமொரு சாதனை மகுடம்தான் இந்த கின்னஸ் சாதனை. உலக அளவில் சினிமாவில் 17 ஆயிரத்து 695 பாடல்களைப் பாடிய ஒரே பாடகி பி.சுசீலாதான். இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது தொடர்பாக பி.சுசீலா சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

DSC_4567

அவர் பேசும்போது, “கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த இடத்துக்கு வருவதற்கு எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இது சாதாரண சாதனை கிடையாது. எல்லோருக்கும் கிடைக்காது. நான் 1953-ம் ஆண்டில் இருந்தே பாடி வருகிறேன். படிப்படியாகத்தான் நான் முன்னேறினேன்.

எனக்கு முதன் முதலாக தமிழ் கற்றுக் கொடுத்து பாடுவதற்கு வாய்ப்பு அளித்தவர் ஏவி.மெய்யப்ப செட்டியார்தான். ஏவி.எம். நிறுவனம் மூலம் எனக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது. இசைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். அதற்கு உலக அங்கீகாரம் கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.

2003-ம் ஆண்டு, தேன் ராஜா, ராஜேஷ் ஆகியோர் என் பெயரில் இணையதளம் (psusheela.org) ஒன்றை துவக்கினார்கள். கலைக்குமார் என்பவர் எனது பாடல்களை எல்லாம் சேகரித்தார். அவருடன் இன்னும் ஐந்தாறு பேர் சேர்ந்து கொண்டு இந்த பணியை செய்தார்கள். இவை எல்லாவற்றையும் கின்னஸ் குழுவுக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின் எனக்கு இந்த கவுரவம் கிடைத்தது. எல்லோருக்கும் இதுபோன்ற கவுரவம் கிடைக்காது. கஷ்டப்பட்டு பாடியதற்காக, 24 மணி நேரம் உழைத்தற்காக இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.

நான் தெலுங்கு பெண். இருந்தாலும் இந்தியாவின் 9-க்கும் அதிகமான மொழிகளிலும் பாடியிருக்கிறேன். 1951 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, ஒரியா உட்பட பல மொழிகளிலும் சேர்த்து 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறேன். அதிலிருந்து 17 ஆயிரத்து 695 பாடல்களை மட்டுமே முறைப்படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. 40 ஆயிரம் பாடல்களும் தொகுக்கப்பட்டதும் மீண்டும் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பம் செய்வேன். 

எந்த பாடலும் சரியாக பாடும்வரை சவால்தான். சில பாடல்களுக்கு ஒரு மாதம்கூட பயிற்சி எடுத்துள்ளேன். நான் எதையும் கஷ்டமாக கருதவில்லை.

என் கணவர் டாக்டர் என்பதால் என் குரலில் அதிக அக்கறை எடுத்து கொண்டு என்னை கவனித்தார். அவர் லதா மங்கேஷ்காரின் தீவிர ரசிகர். லதாவின் குரல் போல என் குரலும் இருந்ததால் என்னைத் தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். என் இசையுலக வாழ்க்கைக்கு பெரிதும் உதவினார். எனக்காக வாழ்க்கையில் பெரிய தியாகங்களைையும் செய்தார்.

எம்எஸ்வி., சாருக்கு வாயில் சக்கரை போட்டிருக்கணும்.. “நாளை இந்த வேளை…’ பாடலுக்கு தேசிய விருது கிடைக்கும்..” என்று சொன்னார், அது அப்படியே நடந்தது.

‘மீரா’ படத்தை இயக்கிய இயக்குநர் என்னை ஒரு படத்தில் நடிக்க கேட்டார். ‘முடியாது’ என்று கூறிவிட்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. ஆனாலும் ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்தேன்.. எனக்கு பாடுவதுதான் தொழில். வாய்ப்பு கிடைத்தால் இப்போதும் பாடுவேன்..” என்றார்.

சுசீலாம்மாவுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்..!

Our Score