full screen background image

பழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

பழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பிரபல பாடலையும் ‘மியாவ் மியாவ் பூனைக் குட்டி’, ‘கோழி ஒரு கூட்டிலே’, ‘குவா குவா பாப்பா’ உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் மூலம் குழந்தை குரலில் பாடி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் எம்.எஸ். ராஜேஸ்வரி,

கமலஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தில் மிக பிரபலமான ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரியை, காரைக்குடி ஏவி.எம். கலையகத்தில் அப்போதைய பிரபல இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் ராஜேஸ்வரியை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார்.

இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார் ஏவி.எம். செட்டியார். இந்தப் படத்தில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார். இதன் பின்பு ஏவி.எம். பட நிறுவனம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறியபோது ராஜேசுவரியும் சென்னைக்கு வந்தார். 

‘நாம் இருவர்’ திரைப்படத்தில் ‘கருணாமூர்த்தி காந்தி மகாத்மா’, ‘மகான் காந்தி மகான்’ ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

அடுத்து ‘வேதாள உலகம்’ திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் ‘ஆகா ஆனந்தமானேன்’ என்ற பாடலைப் பாடினார். ‘வாழ்க்கை’ படத்தில் ‘உன் கண் உன்னை ஏமாற்றினால்’ என்ற பாடலை டி..ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து பாடியுள்ளார்.

1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இதனால் இவர் ‘மழலைக் குரல் பாடகி’ என அழைக்கப்பட்டார். கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடியது இவர்தான். மேலும், இவர் பாடிய ’மியாவ் மியாவ் பூனைக் குட்டி’, ‘ஓ ரசிக்கும் சீமானே’, ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை .

சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் அவருடைய மகள் வீட்டில் வசித்து வந்த அவர் கடந்த 6 மாதங்களாக உடல் நலக் குறைவாக இருந்தார்.  இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலேயே மரணம் மடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4.30 மணி அளவில் குரோம்பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.

மரணம் அடைந்த பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கற்பகவள்ளி, ஆர்த்தி என்று இரண்டு மகள்கள். ராஜ் வெங்கடேஷ் என்று ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களில் ஆர்த்தி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.

Our Score