‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் கோகுல். இவர் இப்போது இயக்கியிருக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’.
தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
எல்.கே.ஜி.(2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’.
இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “இந்தப் படம் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் மக்களுக்கு தேவையான கமர்சியல் எலிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கும். லோகேஷ் கனகராஜ், ஜீவா கேமெியோ ரோலில் நடிச்சிருக்காங்க. இது மட்டும் இல்லாமல், ஒரு பெரிய சர்ப்ரைஸூம் இந்தப் படத்துல இருக்கு. ஒரு பெரிய நடிகர் இந்தப் படத்தில் நடிச்சிருக்காரு. அவர் யாரென்று இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்த்தால் நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆவீங்க.
ஆரம்பத்துல இந்தப் படத்தை உள்வாங்க எனக்கு கடினமாத்தான் இருந்தது. அப்புறம் போகப் போக பழகிருச்சு. ஆரம்பத்துல நான் வந்து கத்துக்கிட்ட பல விஷயங்கள் இப்போவரைக்கும் எனக்கு உதவிகரமா இருக்கு. சமூக கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம். அரசியல் பேசாத இந்த படம், மக்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்ன்னு நம்புகிறேன்..” என்றார்.
இயக்குநர் கோகுல் பேசுகையில், “இந்தப் படம் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கி இருக்கு.
நாம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி. ஒரு சந்தோஷம் வர்ற மாதிரி, இந்தப் படத்தை பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக தோன்றும். என்னுடைய வழக்கமான நகைச்சுவை காட்சிகள் இந்தப் படத்துலேயும் இருக்கு. அதுவும் வித்தியாசமாக முயற்சி செஞ்சிருக்கோம். நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய முடி திருத்துபவர்கள்தான் இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்.
இன்னிக்கு இருக்கக் கூடிய எல்லா பெரிய நடிகர்களும் அவங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காகத்தான் வந்து காத்துக்கிட்டு இருக்காங்க, அந்த அளவுக்கு இன்னைக்கு இந்தத் தொழில் ஒரு மிகப் பெரிய ஒரு இடத்தை அடைஞ்சிருக்கு.
இந்த உள் கருத்தை மையமா வச்சு, இதிலேயே நிறைய விஷயங்களை நாங்க இந்தப் படத்தில் பேசி இருக்கோம். படம் கண்டிப்பா மக்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்..” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரான டாக்டர் ஐசரி கணேஷ் பேசுகையில், “இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களைவிட அதிக பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம்.
ஆர்.ஜே.பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமான்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சம் இந்தப் படத்துல இருக்கு. அவரும் அதுக்கு ஏற்றதுபோல் நடித்திருக்கிறார். எனக்கு இந்த கதை மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி பல சுவாரசியங்களையும் இந்தப் படம் உள்ளடக்கியதாக இருக்கும்..” என்றார்.
‘சிங்கப்பூர் சலூன்’ படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.









