full screen background image

சினம் – சினிமா விமர்சனம்

சினம் – சினிமா விமர்சனம்

Movie Slide Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜய்குமார் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.

படத்தில் அருண் விஜய் நாயகனாகவும், பாலக் லால்வாணி நாயகியாகவும் நடிக்க,  காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ரேகா சுரேஷ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’, ‘சகா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபீர் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். மைக்கேல் கலை இயக்கத்தை செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டை இயக்கம் செய்திருக்கிறார். மதன் கார்க்கி, பிரியா, ஏக்நாத், தமிழணங்கு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பவன் டிசைனிங்கை மேற்கொண்டிருக்கிறார். பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாகா’ ஆகிய படங்களை இயக்கிய, தேசிய விருது பெற்ற இயக்குநரான G.N.R.குமரவேலன் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

குற்றம்-23’ படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படம்  குற்றம்-23’-ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையைச் சொல்கிறது.

எப்போதும் எந்தவொரு விஷயத்திலும், எந்தவொரு தொழிலும் ஈடுபடுவோருக்குண்டாகும் கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே நாம் பலரும் வந்திருப்போம்.

ஆனால் இந்தச் சினம் அப்பாடியானதொன்று அல்ல. பல நேரங்களில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும்.  தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாகவும் சில இடங்களில் சினம் அமைந்துவிடும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத் தர சில நேரங்களில் இந்த சினம் மிகவும் அவசியமானதாகவும் இருக்கும். இதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

‘பாரி வெங்கட்’ என்ற அருண் விஜய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக சென்னையில் பணியாற்றுகிறார். முணுக்கென்றாலே கோபம் வந்துவிடும். எப்போதும் சினத்துடனேயே வாழ்ந்து வரும் அருண் விஜய்யின் மீது அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு ஒரு காண்டு.

அருண் விஜய் கையாளும் ஒரு வழக்கில் அஜாக்கிரதையாக இருந்துவிட.. நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் கைதி, எதிரி கூட்டத்தால் நீதிமன்ற வளாகத்திலேயே கொல்லப்படுகிறான். இந்தப் பிரச்சினையினால் தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்காக மாமனார் வீட்டுக்குப் போக முடியாமல் போகிறது அருண் விஜய்க்கு.

குற்றவாளியைத் தேடி கண்டுபிடித்து சிறையில் அடைக்கும் நேரத்தில் ஊரிலிருந்து வீடு திரும்பிய மனைவி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கூடவே சம்பந்தமே இல்லாமல் வேறொரு ஆணும் அருகிலேயே பிணமாக கிடக்கிறார்.

கள்ளக் காதல் தோரணையில் கதைகள் கட்டப்பட மனமுடைந்து போகிறார் அருண் விஜய். இந்த விசாரணை அருண் விஜய்யிடமே ஒப்படைக்கப்பட தனது மனைவின் கொலையின் பின்னணியை விசாரிக்கத் துவங்குகிறார் அருண் விஜய். கண்டறிந்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நடிக்கத் தெரிந்த கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் அருண் விஜய் பெற்று பல வருடங்களாகிவிட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக மக்களின் கலைஞனாக மாறுவதற்கான வாய்ப்புகள்தான் அவரை அண்ட மறுக்கிறது.

சினம் கொண்ட சிறுத்தையாய் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் அருண் விஜய். கேரக்டர் ஸ்கெட்ச்சே கோபக்காரர்தான் என்பதால் அதற்கேற்ற சினத்தைதான் காண்பித்திருக்கிறார்.

கைதாக வேண்டிய ரவுடியை டாஸ்மாக்கில் அடித்துத் துவைத்து கைது செய்யும்போதும், தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும் இன்ஸ்பெக்டரின் கையை உடைக்கும்போதும், கிளைமாக்ஸில் அத்தனை கொலைகளையும் தான் ஒருவனாகவே செய்து முடிக்கும்போதும் சினம் கொண்ட சிறுத்தையின் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அருண் விஜய்.

மனைவியின் இறப்பின்போதும், மகளின் பிரிவின்போதும் காண்பிக்கும் உணர்ச்சிமிகு நடிப்பில் இன்னும் ஒரு படி மேலேதான் போயிருக்கிறார் அருண் விஜய். வஞ்சகமில்லாத சிரிப்பு.. மனைவியுடனான கொஞ்சல், கெஞ்சல் என்று எல்லா பக்கமும் தனது வசீகர முகத்தைக் காண்பித்திருக்கிறார். இன்னும் என்ன வேண்டும் இவருக்கு..?

நாயகியான பாலக் லால்வாணியின் ஸ்கிரீன் பிரஸ்னஸ் அழகு. சிறிது நேரமே ஆனாலும் மனதைக் கவரும் அளவுக்கு இருக்கிறது இவரது கதாப்பாத்திரம். கதை கேட்டு தூங்கும் அந்த சின்னக் குழந்தையை நாமும் கொஞ்ச வேண்டும்போல உள்ளது. முறைப்பு காட்டும் மாமனாராக கே.எஸ்.ஜி.வெங்கடேஷூம், அம்மாவாக ரேகா சுரேஷூம் அளவான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

கடைசிவரையிலும் உடன் இருக்கும் ஏட்டய்யாவாக காளி வெங்கட் படம் நெடுகிலும் நம்மை வழி நடத்துகிறார். இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தவுடன் வேகமாக ஓடி வந்து அருண் விஜய்யைக் கட்டியணைத்து ‘சூப்பர் ஸார்’ என்று மகிழும் காட்சியில் நம்மையும் உற்சாகப்படுத்துகிறார் காளி வெங்கட்.

வயதில் மூத்தவராக, அனுபவசாலியாக புத்தி சொல்லும் திருத்தும் உயர் போலீஸ் அதிகாரியான ஆர்.என்.ஆர்.மனோகரின் அறிவுரை எல்லாருக்கும் பொருத்தமானதுதான். இந்த நல்ல நடிகரின் இழப்பு, தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்புதான்.

முக்கியக் குற்றவாளியின் அப்பாவும், அம்மாவும் கோபத்துடன் வீட்டுக்குள் பேசிக் கொள்ளும் அந்த ஒரு காட்சியே இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்று.

ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சி இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடிருக்கிறார்கள். ஒவ்வொரு சண்டை காட்சியும் உயிரைக் கொடுத்து படமாக்கப்பட்டுள்ளதுபோல தெரிகிறது. அதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி தெறி மாஸ் என்றே சொல்ல வேண்டும்.

இரவு நேரக் காட்சிகளை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்டுகள் அழகோ அழகு. பாடல்களும் வழக்கமான பாணியில்தான் அமைந்திருக்கின்றன. இசை இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் பாடல்களும் தனித்து தெரிந்திருக்கும்.

படத் தொகுப்பாளரும் தனது பணியை நிறைவாகவே செய்திருக்கிறார். படத்தை 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே செய்து கொடுத்திருக்கிறார். இது போன்ற படங்களுக்கு இதுவே போதும்தான்.

வழமையான கொலை, தேடுதல் வேட்டை, சஸ்பென்ஸ், திரில்லர் என்ற பாணியிலேயே முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் மையக் கருவைவிட்டு வெளியில் வராமலேயே கதை செல்வதால் என்னதான் முடிவு என்பதை அறியும் ஆவலைக் கூட்டியிருக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை.

இயக்குநரின் திறமையான இயக்கத்தினால் நடிகர், நடிகைகள் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். இருந்தும் இப்போதைய காலக்கட்டத்தில் மனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படியாக காவலர்கள் நடந்து கொள்வதைப் பற்றி ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கோபத்தில் இருக்கும் தருணத்தில் சினம் கொண்ட மனிதனின் கோபம் சட்டத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இந்தப் படம் சொல்லியிருக்க வேண்டும்.

மாறாக கிளைமாக்ஸில் தான் செய்துதான் சரி என்றும், “இது போன்று நாமே தண்டனை கொடுத்தால்தான் குற்றங்கள் குறையும்” என்றெல்லாம் வசனத்தின் மூலமாகவே சொல்லியிருப்பது இயக்குநருக்குத் தவறாகப் படவில்லையா..? அதிலும் ஒரு போலீஸ் அதிகாரி இதைச் சொல்லியிருக்கவே கூடாதே..? அப்புறம் சட்டம் எதற்கு..? நீதிமன்றங்கள் எதற்கு..?

அருண் தன் பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு காட்சியில் சொல்கிறார். அது ஏற்றுக் கொள்ளப்படுவது போலவே கதையை மாற்றியமைத்து தனியாகவே அருண் இதை விசாரித்து இறுதியில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதுபோல திரைக்கதை அமைத்திருந்தால்கூட இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காவல்துறை அதிகாரியே செய்வதுபோல் காட்டுவதெல்லாம் நாட்டுக்கு நல்லதல்ல இயக்குநரே..!?

இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால் ஒரு கச்சிதமான சஸ்பென்ஸ்-திரில்லர் படத்தைப் பார்க்கும் அனுபவம் இதில் கிடைக்கிறது.

RATING : 3.5 / 5

Our Score