டீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும் அருவி பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சில்லாக்கி டும்மா.’
‘டீக்கடை சினிமா’ என்பது சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் குறும்படம் போன்ற படைப்புகளைத் திரையீடு செய்து விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வந்தது. அது இப்போது ஒரு தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதன் பின்னே சினிமா ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு தேடி திறமையை வைத்துக் கொண்டு யாரும் சிரமப்படக் கூடாது. அவர்களை தூக்கி நிறுத்த வேண்டும்; கை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த டீக்கடை சினிமா அமைப்பு உருவானது.
இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த இயக்குநர் விருதினைப் பெற்ற இளைஞர் மாறன் கந்தசாமிதான் இந்த ‘சில்லாக்கி டும்மா’ படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் கதாநாயகனாக ‘அட்டு’ படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக் நடிக்கிறார். நாயகியாக மோனிகா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, ‘மைனா’ நந்தினி ,அபிஷேக், சரவண சக்தி, தீனா, ஜார்ஜ், பிஜ்ஜி ரமேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – உதயசங்கர். படத் தொகுப்பு – எலிசா. இயக்கம் – மாறன் கந்தசாமி.
இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் இன்று காலை நடை பெற்றது .
இந்த பூஜை நிகழ்வில் நாயகன் ரிஷி ரித்விக், நடிகர் அபிஷேக், இயக்குநர் சரவண சக்தி, நடிகர் தீனா மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
பூஜை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இயக்குநர் சண்முகம், இயக்குநர் தாஸ் கந்தசாமி, இயக்குநர் ராகவன், இயக்குநர் சாம் ஆண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.
படம் பற்றி இயக்குநர் மாறன் கந்தசாமி பேசும்போது, “படத்தின் தலைப்பை பார்த்து இதனை அடல்ட்ஸ் படமாக யாரும் நினைத்துவிட வேண்டாம். படம் அப்படிப்பட்டதல்ல. கேங்க்ஸ்டர் கதையை அடித்தளமாகக் கொண்ட படம் இது. ஒரு நாளில் மூன்று ஆயுதக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்தான் படத்தின் கதைக் களம். இது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும்.” என்றார்.