இந்தியாவின் தேசிய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த நடிகர் சித்தார்த்துக்கு தேசிய பெண்கள் உரிமை கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதிலேயே திரும்பினார்.
இதையொட்டி நாட்டின் பிரதமருக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையா என்று விமர்சனங்கள் எழுந்தன. பிரதமரின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்பதால் இந்த நிகழ்வு சமீப நாட்களில் சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்குள்ளானது.
பேட்மிண்டன் வீராங்கணையான சாய்னா நேவால் இது தொடர்பாக ஜனவரி 5-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
சாய்னாவின் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்த நடிகர் சித்தார்த், “ உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்.. கடவுளுக்கு நன்றி.. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார்.
சித்தார்த்தின் இந்த ட்வீட் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. சித்தார்த் தன் ட்வீட்டில் “Subtle cock” என்று ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார் என்பதே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.
சாய்னா நேவால் இந்தியாவின் பெருமை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர். 24 சர்வதேச பட்டங்களை இந்தியாவிற்காக பெற்று பெருமை சேர்த்தவர். அவருக்கு அளித்த பதிலில் நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த்தை சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தேசிய மகளிர் ஆணையம் சாய்னா நேவாலுக்கு ஆட்சேபிக்கத்தக்க வகையில் ட்வீட் செய்த சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து சாய்னா நேவால் பேசும்போது, “ அவர் சரியாக எந்த அர்த்தத்தில் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நடிகராக அவரை நான் விரும்பினேன். ஆனால், இது நன்றாக இல்லை. அவர் சிறந்த வார்த்தைகளால் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முடியும். இது ட்விட்டர் இங்கு நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும் கருத்துக்களால் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்..” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சாய்னா நேவாலின் கணவர் காஷ்யப், “ உங்களுடைய கருத்து எங்களை மிகவும் அதிருப்திக்குள்ளாகியது. உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக சொல்லலாம். அதற்கு நீங்கள் தகுந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு சொல்வது சரியானது என்று நீங்கள் நினைக்கீன்றீர்களா..?” என மிகவும் நாகரீகமாக கேட்டுள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சித்தார்த், “நான் தரக்குறைவாக எதையும் சொல்லவில்லை. “Cock & Bull” என்பதில் இருந்துதான் குறிப்பிட்டு அந்தக் கருத்தைப் பதிவிட்டேன். ஆபாசமாக பதிவு செய்ய வேன்டும் என்ற உள்நோக்கம் எனக்கில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்…” எனக் கூறியுள்ளார்.









