ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி.

ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி.

சிகா(SICA) என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவராக பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான P.C.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எப்போதும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தச் சங்கத்தின் தேர்தலில் இப்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால், புதிய நிர்வாகிகளின் தேர்வுக்காக பிப்ரவரி 10-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளாக கவிஞர் பிறைசூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான K.V.கன்னியப்பன், முனீர் அகமது, கஸ்தூரி மூர்த்தி ஆகியோர் கொண்ட நால்வர் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்தத் தேர்தலில் தற்போதைய நிர்வாகிகளான P.C.ஸ்ரீராம் அணியினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து ஒரு அணியினரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில் அனைத்து சங்கங்களிலும் இருக்கும் பிரச்சினை, இங்கேயும் தலை தூக்க… சங்கத்தின் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

“சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டாமல், சங்கத்தின் வரவு செலவுக் கணக்குகளை பொதுக் குழுவில் தாக்கல் செய்யாமல் தேர்தல் தேதியை அறித்திருக்கிறார்கள். இது சங்கங்களின் விதிமுறைப்படி சட்ட விரோதமானது. எனவே இந்தத் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கோரி சங்கத்தின் உறுப்பினரான பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதற்கிடையில் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பும் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலைமையில் கடந்த 8-ம் தேதி சங்கத்தின் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி பாபு தாக்கல் செய்திருந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மீண்டும் பரபரப்பு எழுந்த சூழலில் அடுத்த நாள் யாருமே எதிர்பாக்காத ஒரு டிவிஸ்ட்டும் நடந்தது. தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்திருந்த அணியினர், ஒட்டு மொத்தமாக தாங்கள் அனைவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் ரத்தாகி ‘P.C.ஸ்ரீராம் அணியினர் அனைவருமே போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்’ என்று சங்க உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் அனைத்து வேட்பாளர்களின் பெயரையும் அச்சிட்டு வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுவிட்டதாலும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தேதிக்குப் பிறகு ‘வாபஸ்’ என்று போட்டியாளர்கள் அறிவித்ததாலும், தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள் தேர்தல் அலுவலர்கள்.

அதன்படி சங்கத்தின் தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8 மணிக்கு முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.

எதிர்பார்க்கப்பட்டதை போலவே பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள்.

அதன்படி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் :

தலைவர் – திரு.P.C.ஸ்ரீராம்

துணைத் தலைவர்கள் – திரு.A.கார்த்திக் ராஜா, திரு.S.சரவணன்

பொதுச் செயலாளர் – திரு.B.கண்ணன்

துணைச் செயலாளர்கள் – திரு.M.இளவரசு, திரு. A.ஆரோக்கியதாஸ், திரு.U.K.செந்தில்குமார்,

பொருளாளர் – திரு.B.பாலமுருகன்   

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் வின்சென்ட், N.K.ஏகாம்பரம், N.அழகப்பன், D.கண்ணன், K.ரவிஷங்கரன், J.லஷ்மண்குமார், J.ஸ்ரீதர், M.வெற்றிவேல், A.வினோத்பாரதி, S.ஆர்ம்ஸ்ட்ராங், V.இளம்பருதி, P.காசிநாதன், G.முருகன், C.தண்டபாணி, S.அருண்குமார் ஆகிய 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற அனைத்து பொறுப்பாளர்களுக்கும் இன்று காலை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரிகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் தேர்தலை சிறப்பாக நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரிகளுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் தலைவர் திரு. பி.சி.ஸ்ரீராம், பொதுச் செயலாளர் திரு.B.கண்ணன் இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Our Score