‘கத்தி’ பட விஷயத்தில் சீமானின் திடீர் பல்டியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இயக்குநர் சிபிசந்தர் எழுதியுள்ள பதிவு இது :
“இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரித்திருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை எதிர்க்கவேண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்று எல்லோரும் போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கையில் இதுவரை சிங்கள அரசையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்த சீமான் அவர்கள், ‘கத்தி’ திரைப்பட விடயத்தில் அமைதியாகவும் மென்மையான போக்கையும் கடைப்பிடிப்பது ஏன் ?
தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரித்திருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை எதிர்த்தால் அந்த எதிர்ப்பு ஈழ மக்களின் ஆதரவையும் அவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கையும் தக்க வைத்துக்கொள்ள உதவுமே தவிர.., ஈழ மக்களின் ஆதரவு என்பது தமிழ்நாட்டில் வாக்குகளாக மாறுவதற்கு வாய்பே இல்லை… வாக்குகள் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இயலாது…
‘கத்தி’ திரைப்படத்தை ஆதரித்தாலோ அல்லது எதிர்க்காமல் இருந்துவிட்டாலோ நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களை தன்னுடைய அரசியல் பாதையில் இணைக்கலாம். அது தன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேருதவியாக இருக்கும் என்பதுதான் சீமானின் கணக்கு.
ஆக, தற்போது சீமான் ஈழ மக்களா, விஜய் ரசிகர்களா… என்ற திரிசங்கு நிலமைக்கு வந்துவிட்டார்.
அரசியலில் தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். அதில் தவறு சொல்ல ஒன்றுமே இல்லை. ஆனால் இதுவரை ஈழ மக்களுக்காகவே தன் சுவாசம் தன் வாழ்க்கை தன் அரசியல் என்று பேசியவர் ஒரு நடிகனின் ரசிகர்களுக்காக தன் சுவாசத்தை மாற்றிக் கொள்கிறார் என்பதை ஏற்க முடியவில்லை.
மாற்று அரசியல் புரட்சி என்று முழங்கியவர் மறுபடியும் மக்களை முகப்பூச்சு அரசியலுக்கு இழுத்து செல்வதை அவரை நம்பி அவரோடு களமாடியவர்களே ஏற்றுக் கொள்ளாத ஒன்று.
தன்னுடைய அரசியலுக்காகவும் வாக்கு வங்கிக்காகவும் ‘கத்தி’ திரைப்படத்தை ஆதரிப்பதன் மூலம் சிங்கள இனவாதமும் ராஜபக்சேவும் தமிழ்நாட்டில் நுழைய சீமான் ஆதரிக்கிறாரா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவதை எப்படி தடுக்க முடியும்..?
தமிழ்நாட்டில் நுழைவதற்கு திரைப்படங்களே சரியான வாசல் என்று தீர்மானித்து லைக்கா மொபல் மூலம் உள்ளே நுழைந்திருக்கும் சிங்கள இனவாததிற்கு சீமான் துணை போவது நியாயமா ..?
தங்களுக்கு இருக்கும் பண பலத்தால் தமிழ்நாட்டின் சினிமாத் துறையை ஆக்கிரமித்து பெரிய அளவில் ரசிகர் கூட்டங்களை வைத்திருக்கிற நடிகர்களை தங்களுக்கு ஆதரவாளராக மாற்றிவிட்டால் தனக்கு ஏற்பட்டிருக்கும் இனக்கொலை கறையை துடைத்துவிடலாம் என்கிற ராஜபக்சே கும்பலின் கணக்கு ‘கத்தி’ திரைப்படம் மூலம் நிறைவேற்றபடுவது சீமானுக்கு தெரியாத ஒன்றா..?
நடிகர் விஜயும், முருகதாசும் தமிழ் பிள்ளைகள்.. அதனால் எதிர்க்க மாட்டேன் என்று கூறும் சீமான் அவர்கள் அதே தமிழ்க்குடியில் பிறந்து காட்டிக் கொடுத்த கருணாம்மானையும், டக்ளஸ் தேவானந்தவையும், குமரன் பத்ம்நாபன் போன்றவர்களையும் தமிழ் பிள்ளைகள் என்பதால் ஏற்றுக் கொள்கிறாரா..? அவர்கள் செய்த துரோகத்தை மறந்துவிட சொல்கிறாரா..?
தன்னுடைய அரசியல் பயனத்திற்காக விஜய் ரசிகர்களை பயன்படுத்த நினைப்பதும் அதற்காக ‘கத்தி’ திரைப்படத்தை எதிர்க்காமல் ஈழ மக்களின் உணர்வுகளை புறக்கணிப்பதும் அவரின் விருப்பம் அல்லது அவரின் இயக்கத்தின் விருப்பமாக இருக்கலாம். அல்லது அதுவே கொள்கையாகவும் இருக்கலாம்.
ஆனால் ஈழ மக்களை கொன்றொழித்து சொந்த மண்ணைவிட்டு அகதிகளாய் ஓடும் நிலைமைக்கு எம்உறவுகளின் வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்தி பச்சை பாலகன் என்றும் பாராமல் குண்டுகளால் துளைத்து இசைப்பிரியா போன்ற மானம் உள்ள தமிழச்சிகளின் கற்பை சூறையாடியது மட்டுமில்லாமல் அவர்களின் மானத்தை உலகுக்கு வேடிக்கை காட்டிய ராஜபக்சே மற்றும் அவனின் கொலைகார கும்பல் எந்த வாயில் வழியாகவும் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை மானம், உள்ள தமிழன் ஒருவனும் அனுமதிக்கமாட்டான் என்பதை சீமான் நினைவில் கொள்ள வேண்டும்.
‘கத்தி’ திரைபடத்தால் இங்கே ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் என்பதை மனதில் கொண்டு தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். மட்டுமில்லாமல் தமிழக முதல்வரை மிகவும் கீழ்ததரமாக கொச்சைப்படுத்திய ராஜபக்சேவின் நாசாகார கும்பலை தமிழக அரசு இங்கே அனுமதித்துவிடக் கூடாது என்பதே ஒவ்வொரு தமிழர்களின் வேண்டுகோளும் கோரிக்கையுமாகும்.”