தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதா..? அல்லது வாக்குகளை எண்ண உத்தரவிடுவதா…? என நடிகர் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் இருவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் “தேர்தலை ரத்து செய்து புதிதாக ஒரு ஒய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை மூன்று மாதங்களில் நடத்த வேண்டும். அதே நேரத்தில் அதற்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்..” என்று தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தொடர்ந்து இரு தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
குறிப்பாக நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் நடத்தும்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக நடிகர் சங்க உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாவட்ட பதிவாளரை அணுகி அவர் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் 60 பேர் மட்டுமே புகார் கொடுத்து அதன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் ஏற்கனவே தேர்தலை நிறுத்தினார்.
குறிப்பாக 30 லட்சம் ரூபாய் செலவில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே மீண்டும் மறு தேர்தல் நடத்த முடியாது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தனர்.
ஆனால், எதிர்தரப்பினரோ பொதுக் குழுவில் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்தது தவறு. தொடர்ந்து பல்வேறு முறைகேடான விஷயத்தில் ஈடுபட்டதால்தான் இந்தத் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. பலரையும் வாக்கு அளிக்க விடாமல் செய்திருக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் “ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்தாகிவிட்டது. அதன் பின்பும் தொடர்ந்து இந்த வழக்குகளை நடத்துவது ஏன்..? ஏற்கனவே இந்தக் கொரோனா காலத்தில் சங்க உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டி உள்ளது. எனவே நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் தரப்பும் அதேநேரத்தில் இதற்கு எதிர்ப்பாக இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களும் வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் ‘சங்கத்தின் தேர்தலை மறுபடியும் நடத்துவதா..? அல்லது ஏற்கனவே நடந்த இந்த தேர்தலின் வாக்குகளை எண்ணுவதா..?’ என்பது குறித்து விரிவான பதிலை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும்…” என்று கூறி வழக்கை வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.