தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என்றும், புதிய வாக்காளர் பட்டியலை 3 மாதத்திற்குள் தயார் செய்து புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் 23-ம் தேதி  தேர்தல் நடத்தப்பட்டது. விஷால்-நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ்  தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டன.

இந்தத் தேர்தலை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் ஓட்டு எண்ணிக்கையை நீதிபதி நிறுத்தி வைத்தார். கடந்த 7 மாதங்களாக ஓட்டுகள் எண்ணப்படாமல் உள்ளன.

இதனால் நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளும் முடங்கி உள்ளன. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதும் பணம் இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் செயல்படவில்லை என்று பதிவாளருக்கு அளித்த புகாரின் பேரில் தற்போது சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. 

இதற்கு நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மறுபுறம்  நடிகர் சங்க தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளன. எனவே இந்த தேர்தலே செல்லாது என அறிவிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

“எந்த முறைகேடும் நடக்கவில்லை, தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஓட்டு எண்ணிக்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும்…” என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கட்ட விசாரணைகள் நடந்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் நேற்று மதியம் தீர்ப்பு வழங்கினார். 

அதில், கடந்தாண்டு ஜுன் மாதம் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்த ரத்து செய்யப்படுகிறது.  நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என கூறினார். மேலும்  பதவிக் காலம் முடிந்த பின் எடுத்த முடிவால் நீதியரசர் பத்மநாபனின் நியமனமும், அவர் நடத்திய தேர்தலும் செல்லாது. 

புதிய நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலை தயாரித்து 3 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், மறுதேர்தல்  நடத்தி முடிக்கும்வரை நடிகர் சங்கத்தை சிறப்பு அதிகாரி கீதாவே தொடர்ந்து கவனிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். பதவிக் காலம் முடிந்த பிறகு நடிகர் சங்க தேர்தலை நடத்த நிர்வாகிகள் முடிவு எடுத்தால் அதனை ரத்து செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து  நடிகர் சங்கத்திற்கான மறுதேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கடந்த ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி தொடர்ந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிடக் கோரிய விஷாலின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக நேற்று மாலை அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ், “இந்தத் தீர்ப்பின் மூலம் நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது. மறுதேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு நாடக நடிகர்கள் பயன் பெற வேண்டும். முறையற்ற வகையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நடக்கவிருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…” என்றார்.

விஷால் தரப்பிலோ இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கான மனு இன்னும் ஒரு சில தினங்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பதால் நடிகர் சங்கம் பற்றிய பிரச்சினைகள் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தெரிகிறது..!

Our Score