தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மதியம் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர்.
சூர்யா, கார்த்தி, அம்பிகா, மேனகா, நித்யா, சீமா, சத்யபிரியா, ராமகிருஷ்ணா, ஜூடோ ரத்னம், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பி.எஸ்.சரோஜா, பசி சத்யா, விஜயகுமார், கணேஷ் வெங்கட்ராம், பிரியங்கா நாயர், ஷீலா, போஸ் வெங்கட், கணேஷ், ஆர்த்தி கணேஷ், கிரிஷ், சார்ம்லி, பேபி, எஸ்.என்.பார்வதி, சி.ஐ.டி.சகுந்தலா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிவா, அருண் விஜய், சிபிராஜ், ஆர்.கே.சுரேஷ், மஷிர், மயில்சாமி, ரித்விகா, ஜெயபிரபா, வாணிஸ்ரீ, ரியாஸ்கான், பப்லு, பிளாக் பாண்டி, கணேஷ், ராஜ்காந்த், ஜெயமணி, வீரமணி, ராஜஸ்ரீ, ஹேமா சவுத்ரி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
வழக்கம்போல கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் வரவில்லை. இதேபோல் பிரபு, சத்யராஜ், அர்ஜூன், விஜயகாந்த் போன்ற மூத்த நடிகர்களும் வரவில்லை.
இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, “இந்த மேடையில் கார்த்தியின் முன்பாக மட்டுமே பட்டு வேஷ்டி சட்டையில் நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தியும், வாசலில் நானும் நிற்கிறோம்.
எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எம்.ஜி.ஆரின். ஆவியோ, சிவாஜியின் ஆவியோ ஏதோ ஒன்று கட்டிட நிலத்தில் புகுந்துவிட்டது. கட்டிடம் கட்டி முடியும்வரை அது போகாது என்று நினைக்கிறேன். மறுபடியும் வழக்கு போட்டுப் போரடிக்க வைக்காதீர்கள். ‘வருகிறாயா?’, ‘வா’ என்று நேர்மையுடன் எதிர் கொண்டு நிற்கிறோம். என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும்.
முதலில் இந்தச் சங்கத்திற்கு பொதுச் செயலாளராக வருவேன் என்று எனக்கே தெரியாது. வந்தேன்.. மறுபடியும் இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன். ஆனால், எனக்கு நடிகர் சங்கமே முக்கியம்.
நமது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டிய பின்புதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று முன்பேயே சொன்னேன். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.
இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்.ஜி.ஆர். சமாதியைப் பார்க்க வரும் சுற்றுலா மக்கள், நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் அந்தக் கட்டிடம் இருக்கும்.
இதேபோல் அடுத்த தேர்தலிலும் நாங்களே வேட்பாளர்களாக நிற்போம். ஏனென்றால், கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணம் எங்களுக்கில்லை.
தற்போது தமிழ் சினிமாவுக்குத் தமிழக அரசு 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இந்தக் கேளிக்கை வரி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால்தான் தமிழ் சினிமா நிலைக்கும். இந்தக் கேளிக்கை வரியினால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்.
கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி, திருட்டு விசிடி என அனைத்து இடர்ப்பாடுகளுக்கு இடையே தமிழ் சினிமா செயல்பட்டு வருகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் நம்மால் செயல்படவே முடியாது.
வரும் அக்டோபர் 10-ம் தேதியன்று இதற்காக தமிழக முதல்வரை சந்தித்து முறையிட இருக்கிறோம்..” என்றார் விஷால்.